ஆகையால் மக்களுக்கு நன்மையினைச் செய்தீர்கள் என்றால் அதனைக் குறித்து மக்களின் முன்னர் தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள். மக்கள் தங்களைப் புகழ வேண்டும் என்பதற்காக ஏமாற்றுக்காரர்கள் அவ்விதமே செய்கின்றார்கள். அவர்கள் எதனை விரும்புகின்றார்களோ அதனை அவர்கள் அடைகின்றனர். ஆனால் நீங்கள் மக்களுக்கு நன்மை செய்கின்றீர்கள் என்றால், பிறர் நீங்கள் உதவி செய்வதை அறியாத வண்ணமே உதவி செய்யுங்கள். உங்களது வலது கை செய்கின்ற உதவினை இடதுக் கை அறியாது இருக்கின்ற நிலையிலேயே உதவி செய்யுங்கள். அதனைக் காணும் உங்களது தந்தை உங்களுக்குத் தேவையானவற்றை வழங்குவார்.

மேலும் நீங்கள் இறைவனிடம் பிராத்தனைச் செய்ய எண்ணினால், ஏமாற்றுக்காரர்கள் வேண்டிக் கொள்வதைப் போல் வேண்டாது இருங்கள். இந்த ஏமாற்றுக்காரர்கள் ஆலயங்களிலே பிறரின் பார்வை தங்களின் மீது படுமாறே வேண்டுவதற்கு விரும்புவர். அவர்கள் அவ்வாறு வேண்டுவது மக்கள் அவர்களைக் காண வேண்டும் என்பதற்காவே. ஆகையால் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதனை மக்களிடம் இருந்தே அவர்கள் பெற்றுக் கொள்ளுகின்றனர். ஆனால் நீங்கள் வேண்ட விரும்பினால், எங்கே உங்களை எவரும் காண இயலாதோ அங்கே சென்று உங்களுடைய தந்தையான ஆவியானவரிடம் வேண்டுங்கள். அப்பொழுது உங்களுடைய வேண்டுதலைக் காணும் தந்தையானவர் உங்களுடைய ஆன்மாவினுள் என்ன இருக்கின்றது என்பதனை கண்டு உங்களுடைய ஆன்மாவிற்கு ஏது தேவையானதாக இருக்கின்றதோ அதனைத் தந்தருள்வார்.

எவர் ஒருவர் இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றாரோ அவர் மாயவித்தைக்காரரைப் போல வார்த்தைகளை அலம்பத் தேவை இல்லை. நீங்கள் உங்களுடைய வாயினைத் திறக்கும் முன்னரே உங்களுடைய தந்தையானவர் உங்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து இருக்கின்றார்.

உங்களுடைய வேண்டுதல் இவ்வாறே இருக்கக் கடவது:

ஆதியும் அந்தமும் இல்லாது என்றும் இருக்கும் சொர்கத்தினைப் போன்றே இருக்கும் எங்களின் தந்தையே. நீங்கள் ஒருவர் மாத்திரமே புனிதமாக இருக்கக் கடவது. அனைத்துச் சக்திகளும் உங்களுடையதாகவே இருக்கட்டும். உலகில் உங்களின் சித்தம் ஆதியும் அந்தமும் இல்லாது எக்காலமும் நிலைபெற்று இருப்பதற்காக அனைத்து ஆற்றலும் உங்களுடையதாகவே இருக்கட்டும். இன்றைக்கு உரிய வாழ்வின் உணவை எனக்குத் தாருங்கள். என்னுடைய சகோதரர்களின் தவறுகளை நான் சரி செய்து அதனை மன்னிப்பதனைப் போன்றே என்னுடைய தவறுகளை நீங்கள் சரி செய்து அதனை மன்னித்து அருளுங்கள். நான் ஆசையினுள் விழாது தீமையில் இருந்து விடுவிக்கப்பட்டவனாக இருப்பதற்காக அவ்வாறு செய்யுங்கள். ஏனென்றால் அனைத்து ஆற்றலும் வலிமையையும் உங்களுடையதே. நியாயத்தீர்ப்பும் உங்களுடையதே.

"நீங்கள் வேண்டிக் கொள்ள நினைத்தால், முதலில் வேறு எவருக்கும் எதிராக எவ்விதமான மனக்கசப்பும் இல்லாதிருங்கள். நீங்கள் மற்ற மனிதர்களுடைய தவறுகளை மன்னிக்காது இருந்தால் உங்களுடைய தவறுகளை உங்களின் தந்தையானவர் மன்னிக்க மாட்டார். நீங்கள் விரதம் இருந்தால், பொறுமையுடன் விரதம் இருங்கள். மாறாக மற்றவர்கள் முன்பு தம்பட்டம் அடிக்கும் வண்ணம் விரதம் இருக்காதீர்கள். ஏமாற்றுக்காரர்கள் தான் மக்கள் தங்களைக் கண்டு புகழ வேண்டும் என்று அவ்வாறு விரதம் இருப்பர். மக்களும் தாங்கள் விரும்புவதனைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களின் விரதத்தைக் கண்டு அவர்களைப் புகழ்வர். ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யாதீர்கள். நீங்கள் ஏதாவது தேவையினால் வாடினீர்கள் என்றால் மக்கள் அதனை காணும் வண்ணம் முகச் சோர்வோடு இருக்காதீர்கள். மாறாக முக மலர்ச்சியோடு இருங்கள். உங்களின் தந்தை உங்களின் நிலையை கண்டு உங்களுக்குத் தேவையானவற்றைத் தருவார்.

உங்களது செல்வங்களை இந்த உலகினில் சேர்த்து வைக்காதீர்கள். இங்கே உங்களது செல்வத்தினை பூச்சியும் துருவும் கெடுத்து விடும். அதனைத் திருடர்களும் களவாடி விடுவர். ஆனால் உங்களது செல்வத்தை விண்ணுலகத்தில் சேர்த்து வையுங்கள். அங்கே அதனை பூச்சிகளும் துருவும் அண்டுவதில்லை. திருடர்களாலும் அவைகள் அங்கே திருடப்படுவது இல்லை. எங்கே உங்களுடைய செல்வம் இருக்கின்றதோ அங்கே தான் உங்களது மனதும் இருக்கும்.

கண்ணானது உங்களது சரீரத்தின் விளக்காய் இருப்பதைப் போல் உங்களது இதயமானது உங்களின் ஆன்மாவின் விளக்காய் இருக்கின்றது. உங்களுடைய கண்ணானது கெட்டதாக இருந்தால் உங்களின் முழு சரீரமும் இருளில் இருக்கும். அவ்வாறே உங்களின் இதய விளக்கானது இருளில் இருந்தால் உங்களுடைய ஆன்மா முழுமையுமே இருளில் இருக்கும். இரு வேறு எசமானர்களுக்கு ஒரே நேரத்தில் ஊழியம் செய்ய எவனாலும் இயலாது. ஒருவனைத் திருப்தி படுத்தி மற்றொருவனை அவமானப்படுத்தும் நிலை தான் அங்கே நிலவும். அதனைப் போன்றே ஒருவனால் மாமிசத்திற்கும் இறைவனுக்கும் ஒரே நேரத்தில் பணி செய்ய முடியாது. ஒன்று நீங்கள் மாமிச வாழ்விற்காக பணி செய்துக் கொண்டு இருக்கின்றீர்கள் அல்லது இறைவனுக்காக பணி செய்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.

எனவே எதனை உண்போம், எதனை உடுத்துவோம் எதனை அருந்துவோம் என்று கவலைக் கொள்ளாது இருங்கள். எப்படி இருந்தாலும் வாழ்க்கை என்பது உண்பதையும் உடுத்துவதையும் விட மிகவும் அருமையான ஒன்றாகத் தான் இருக்கின்றது. மேலும் அத்தகையதொன்றான வாழ்வினை உங்களிடம் இறைவனே தந்து உள்ளார். இறைவனின் படைப்புகளைக் காணுங்கள். இதோ பறவைகளைக் காணுங்கள், அவைகள் விதைப்பதும் இல்லை அறுப்பதும் இல்லை சேகரிப்பதும் இல்லை, இருந்தும் இறைவன் அவற்றைப் பிழைக்க வைக்கின்றார். இறைவனின் முன்னர் மனிதன் ஒரு பறவையைக் காட்டிலும் எவ்வகையிலும் குறைந்தவன் அல்லன். இறைவன் மனிதனுக்கு வாழ்வினைத் தந்து இருக்கின்றார் என்றால், அவனை வாழ்விக்க வைக்கவும் அவரால் முடியும் என்றே ஆகின்றது. மேலும் உங்களால் ஒரு காரியமும் எவ்வளவு முயன்றும் தனிச்சையாக செய்ய முடியாது என்றுமே நீங்கள் அறிந்து உள்ளீர்கள். உங்களின் வாழ்வின் நீளத்தினை ஒரு மணி நேரமாவது உங்களால் கூட்ட இயலுமா என்ன?

மேலும் உடையினைக் குறித்து நீங்கள் கவலைக் கொள்வது என்ன? வயல்களில் இருக்கும் மலர்கள் நூல் நூற்பதும் இல்லை உழைப்பதும் இல்லை. இருந்தும் அவைகள் அலங்கரிக்கப்பட்டதைப் போல் தன்னுடைய சர்வ வல்லமையிலும் கூட சாலோமோன் அலங்கரிக்கப்பட்டு இருக்கவில்லை. இன்று வளர்ந்து நாளை அறுக்கப்படும் புல்லினை இறைவன் இவ்வாறு அலங்கரித்து இருக்கையில் உங்களையும் அலங்கரிக்க மாட்டாரா என்ன? கவலைக் கொள்ளாதீர்கள். நாம் எதனை உண்போம் எதனை உடுத்துவோம் என்றே நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது என்றுக் கூறாதீர்கள். அனைத்து மக்களும் இத்தேவைகளைக் கொண்டு இருக்கின்றனர். மேலும் உங்களுக்கு இவைகள் தேவை என்றும் இறைவன் அறிந்து இருக்கின்றார்.

எனவே எதிர்காலத்தைக் குறித்து கவலைக் கொள்ளாதீர்கள். இன்றையப் பொழுதிற்கு மட்டும் வாழுங்கள். தந்தையின் சித்தத்திற்கு ஏற்ப இப்பொழுது இருக்கின்றோமா என்றே கவலைக் கொள்ளுங்கள். முக்கியமான ஒன்றான அதனையே விரும்புங்கள். மற்றவை அனைத்தும் தன்னாலேயே வந்து சேரும். தந்தையின் சித்ததிற்குள் இருப்பதிற்கே முயலுங்கள்.

எனவே எதிர்காலத்தைக் குறித்து கவலைக் கொள்ளாதீர்கள். அக்காலம் எப்பொழுது வருமோ அப்பொழுது அதனைக் குறித்துக் கவலைக் கொள்ள ஏராளம் இருக்கும். போதுமான தீமை நிகழ்காலத்திலேயே எப்பொழுதும் இருக்கின்றது.

தொடரும்...!!!

பி.கு:
டால்ஸ்டாயின் 'சுவிசேஷங்களின் சுருக்கம் (Gospel In Brief)' என்ற நூலில் வரும் பகுதி இது.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு