இயேசு ஒவ்வொரு கிராமமாகவும் நகரமாகவும் மக்களுக்கு போதித்தவாறே நகன்றுக் கொண்டு இருந்தார். தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுவதனால் பெறப்படும் இரட்சிப்பினைப் பற்றியே அனைத்து மக்களுக்கும் அவர் போதித்தார். உண்மையான வாழ்வினைப் பற்றி அறியாமல், 'ஏன்' 'எதற்கு' என்றே அறியாமல் அங்கும் இங்குமாய் அலைந்துக் கொண்டும் துயரப்பட்டுக் கொண்டும் அழிந்துக் கொண்டிருந்த அம்மக்களைப் பார்த்து அவர் வருந்தினார். மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போலவே அவர்களின் நிலை இருந்தது.

ஒருமுறை திரளான மக்கள் கூட்டம் அவர் பேசுவதைக் கேட்கக் கூடிய பொழுது அருகில் இருந்த மலையின் மீது ஏறி அங்கே அவர் அமர்ந்தார். அவரது சீடர்கள் அவரைச் சுற்றி நின்றுக் கொண்டனர். பின்னர் அவர் தந்தையின் சித்தத்தைப் பற்றி அம்மக்களுக்குப் போதிக்க ஆரம்பித்தார்.

ஏழைகளும் தங்குவதற்கு இடமில்லாதவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனென்றால் அவர்கள் தந்தையின் சித்தத்தின்படியே வாழ்கின்றனர். அவர்களுக்கு பசி எடுக்குமானால் அது தீர்க்கப்படும். அவர்கள் துயருற்று அழுதார்கள் என்றால் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கப்படும். அவர்கள் பிறரால் வெறுக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் துரத்தப்பட்டார்கள் என்றால் அதனில் அவர்கள் மகிழ்ச்சி கொள்ளட்டும். ஏனென்றால் இறைவனின் மக்கள் எப்பொழுதுமே அவ்வாறு தான் துரத்தப்பட்டு இருக்கின்றார்கள். அதற்கான பலனை அவர்கள் விண்ணுலகில் இருந்து பெற்றுக் கொள்வார்கள்.

ஆனால் பணக்காரர்களுக்கோ ஐயோ. ஏனென்றால் அவர்கள் அடைந்து தீர விரும்பிய அனைத்தையும் அவர்கள் அடைந்து தீர்ந்தாயிற்று. இதற்கு மேல் அவர்களுக்கு எதுவும் கிட்டாது. இப்பொழுது அவர்கள் திருப்தி அடைந்தவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் இனி அவர்கள் பசியுடன் இருப்பார்கள். இப்பொழுது அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். ஆனால் இனி அவர்கள் துயரத்தை அனுபவிப்பார்கள். அனைவரும் அவர்களைக் குறித்து புகழும் பொழுது அவர்களுக்கு ஐயோ, ஏனென்றால் எமாற்றுக்காரர்களே போலியாகப் புகழ்கின்றவர்களாக இருக்கின்றனர். ஏழைகளும் எளியோர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் வெறும் தோற்றத்தில் மட்டுமே ஏழைகளாக இல்லாது அவர்களின் ஆன்மாவினிலும் எளியோராக இருந்தால் மட்டுமே அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு இருப்பர்,

எவ்வாறு உப்பானது, உப்பை போல் தோற்றம் கொண்டிருப்பதுடன் உப்பின் தன்மைகளையும் ஒருசேரக் கொண்டிருந்தால் தான் நல்லதாக இருக்குமோ அதனைப் போலவே, ஏழைகளாகவும் எளியோராகவும் இருக்கும் உலகின் ஆசிரியர்களாகிய நீங்கள், உண்மையான மகிழ்ச்சி என்பது ஏழையாகவும் எளியோராகவும் இருப்பதிலேயே அடங்கி இருக்கின்றது என்பதனை அறிந்து இருந்தால் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டு இருப்பீர்கள். நீங்கள் தோற்றத்தில் மட்டுமே ஏழையாக இருந்தீர்கள் என்றால், சாரமற்ற உப்பினைப் போல் உங்களால் பெரிய பயன் ஒன்றும் வாராது.

நீங்கள் உலகிற்கு ஒளியாக இருக்கின்றீர்கள். எனவே ஒளியை மறைத்து வைக்காதீர்கள். மாறாக மக்களுக்கு முன்னே ஒளியை வெளிப்படுத்துங்கள். ஏனென்றால் விளக்கினை ஏற்றிய பின் எவரும் அதனை மேசையின் அடியில் மறைத்து வைப்பதில்லை. மாறாக அறையில் உள்ள அனைவருக்கும் ஒளியினைத் தரும் வண்ணம் அதனை மேசையின் மேலேயே வைக்கின்றனர்.

அதனைப் போன்றே நீங்களும் உங்களிடம் இருக்கும் ஒளியினை மறைத்து வைக்கக் கூடாது. மாறாக மக்கள் அவ்வொளியினைக் கண்டு உண்மையினை அறிந்துக் கொள்ளும் வண்ணம் உங்களுடைய செயல்களின் வாயிலாக அதனை நீங்கள் வெளிக்காட்ட வேண்டும். உங்களுடைய நற்செயல்களைக் கண்டே அம்மக்கள் உங்களது விண்ணகத் தந்தையைப் புரிந்துக் கொள்வர்.

மேலும் நான் உங்களை அனைத்து விதமான சட்டங்களில் இருந்தும் விடுவிக்கின்றேன் என்று எண்ணாதீர்கள். நான் சட்டங்களில் இருந்து உங்களை விடுவிப்பதற்காக உங்களுக்கு போதிக்கவில்லை. மாறாக என்றென்றும் இருக்கும் நித்திய சட்டத்தினை நீங்கள் கடைப்பிடித்து அதனை நீங்கள் நிறைவேற்றுவதற்காகவே நான் போதிக்கின்றேன். விண்ணுலகிற்கு கீழ் மக்கள் இருக்கும் காலம் வரை இந்த நித்திய சட்டமானதும் இங்கே நிலைப்பெற்றேத் தான் இருக்கும். எப்பொழுது மக்கள் அனைவரும் அவர்களின் சுயவிருப்பத்தின்படியே அனைத்தையும் இந்த நித்திய சட்டத்திற்கு உட்பட்டு செய்யத் துவங்குகின்றனரோ அதுவரை இந்த நித்திய சட்டமானது இருந்துக் கொண்டே இருக்கும். 

இப்பொழுது நான் உங்களுக்கு என்றென்றும் இருக்கும் அந்த நித்திய சட்டத்திற்கான கட்டளைகளைத் தர போகின்றேன். எவன் ஒருவனவாது தன்னை இந்த கட்டளைகளில் ஒன்றில் இருந்தாவது விடுவித்துக் கொண்டு மக்களிடம் அக்கட்டளையை நிறைவேற்றுவதில் இருந்து தவறுவது சாத்தியமே என்று போதிக்கின்றானோ அவனே பரலோக இராஜ்யத்தினுள் இறுதியாக நுழைகின்றான் என்றே உங்களுக்குக் கூறுகின்றேன். ஆனால் எவன் ஒருவன் அனைத்துக் கட்டளைகளையும் முறையாகப் பின்பற்றி அவ்வாறே பிறரையும் இருக்குமாறு போதிக்கின்றானோ அவனுக்கு பரலோக இராஜ்யத்தில் சிறப்பு மிகுதியாக இருக்கும் என்றுமே உங்களுக்குக் கூறுகின்றேன். ஏனென்றால் உங்களுடைய ஒழுக்கமானது பழைமைவாத நம்பிக்கையினை உடையவர்களின் ஒழுக்கத்தினைக் காட்டிலும் அதிகமாக இல்லாவிடின் நீங்கள் பரலோக இராஜ்யத்தினை அடைய ஒரு வழியும் கிடையாது.

இதோ நித்திய சட்டத்தின் கட்டளைகள்:

முதல் கட்டளை: உங்களுடைய முந்தைய சட்டத்தினில் 'கொலை செய்யாதிருப்பாயாக' என்றே கூறப்பட்டு உள்ளது. அதனை மீறி எவனாவது ஒருவனை கொலை செய்தான் என்றால் அதற்குத் தண்டனையாக அவன் நியாயந்தீர்க்கப்பட வேண்டும். ஆனால் நான் உங்களுக்குக் கூறுகின்றேன் எவன் ஒருவன் தன்னுடைய சகோதரன் மீது கோபம் கொள்கின்றானோ அவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாகின்றான். எவன் ஒருவன் தன்னுடைய சகோதரனை சபிக்கின்றானோ அவன் கோபம் கொண்டதைக் காட்டிலும் மிகுந்த குற்றம் செய்தவன் ஆகின்றான். எனவே நீங்கள் இறைவனிடம் பிராத்தனைச் செய்ய வேண்டும் என்று கருதினீர்கள் என்றால் முதலில் உங்களுடைய செயல்களால் யாருக்காவது உங்களின் மீது மனக்கசப்பு இருக்குமா என்றே சிந்தியுங்கள். அவ்வாறு சிந்திக்கையில் எவராவது 'நீங்கள் அவரை புண்படுத்தி உள்ளீர்கள்' என்று கருதக்கூடும் என்றே உங்களுக்கு தோணிற்று என்றால் முதலில் அவரிடம் சென்று சமாதானம் செய்துக் கொள்ளுங்கள். அவ்வாறு சமாதானம் செய்துக் கொண்ட பின்னரே ஆண்டவனிடம் வேண்டுங்கள். இறைவன் உங்களிடம் இருந்து பலிகளையோ அல்லது வேண்டுதல்களையோ விரும்பவில்லை என்பதனை நீங்கள் அறிவீர்கள். மாறாக இறைவன் உங்களினுள் அமைதியும் அன்பும் நிலவுவதனையே விரும்புகின்றார். உங்களுடைய எந்த ஒரு சகோதரனின் மீதாவது நீங்கள் அன்பு கொள்ளாமல் இருப்பீர்கள் என்றால், இறைவனைப் பற்றி எண்ணுவதோ அல்லது இறைவனிடம் வேண்டுவதோ உங்களால் இயலாது போய் விடும் என்பதனை நீங்கள் அறிந்து இருக்கின்றீர்கள்.

இது தான் முதல் கட்டளை: கோபம் கொள்ளாதீர்கள். சபீக்காதீர்கள். தீய வார்த்தைகளை நீங்கள் பேசி இருந்தீர்கள் என்றால் அதற்கு பரிகாரமாய் சமாதானம் செய்துக் கொள்ளுங்கள். எவர் ஒருவரும் உங்களால் காயப்பட்டு இருக்க நீங்கள் காரணமாக இல்லை என்பதில் உறுதியாக இருங்கள்.

இரண்டாவது கட்டளை: உங்களுடைய முந்தைய சட்டத்தினில் 'விபச்சாரம் செய்யாதிருப்பாயாக' என்றே கூறப்பட்டு இருக்கின்றது. உங்களுடைய மனைவியை நீங்கள் கைவிட விரும்பினால் தள்ளுதற்சீட்டை அவளுக்கு கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டு இருக்கின்றது. ஆனால் நான் உங்களுக்கு கூறுகின்றேன், எவன் ஒருவன் ஒரு பெண்ணின் அழகினால் அவள் மீது இச்சைக் கொள்கின்றானோ அவன் ஏற்கனவே விபச்சாரம் செய்தாயிற்று. அனைத்து விதமான இழிந்த செயல்களும் ஆன்மாவினை அழிக்கும் தன்மையினைக் கொண்டு இருக்கின்றன. எனவே உங்களின் வாழ்வினை அழிக்கும் மாமிச சுகங்களில் இருந்து விலகி நிற்பதே உங்களுக்கு நன்மை பயக்கும். மேலும் நீங்கள் உங்களது மனைவியை விவாகரத்து செய்தீர்கள் என்றால் நீங்களும் விபசாரம் செய்தவராக மாறுகின்றீர்கள். மேலும் அதனோடு நில்லாமல் உங்களுடைய மனைவி வேறு ஒருவருடன் சேர்ந்து இழிந்த செயல்களில் ஈடுபடுவதற்கும் தூண்டுதலாக இருக்கின்றீர். எனவே இது தான் இரண்டாவது கட்டளை : பல பெண்களை காதல் செய்வது நல்லது என்று எண்ணாதீர்கள். பெண்கள் மேல் இச்சை கொள்ளாதீர்கள். உங்களுக்கு என்று உறுதி செய்யப்பட்ட பெண்ணுடன் வாழுங்கள். அவரைக் கை விடாதீர்கள்.

தொடரும்...!!!

பி.கு:

டால்ஸ்டாயின் 'சுவிசேஷங்களின் சுருக்கம் (Gospel In Brief)' என்ற நூலில் வரும் பகுதி இது.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு