கடிதம் 7
செப்டம்பர் 7, 1910.
"கொட்செட்டி".
திரு காந்தி அவர்களுக்கு,

உங்களுடைய 'இந்தியன் ஒப்பீனியன்' பத்திரிக்கையினை நான் பெற்றுக் கொண்டேன். வன்முறையினை கொண்டு எதனையும் எதிர்க்கக் கூடிய தன்மையினைக் கைவிட்ட மனிதர்களைப் பற்றி அந்த பத்திரிக்கையில் கூறி இருந்த விடயங்களைக் கண்டு நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன். அந்த விடயங்கள் என்னுள் எவ்வகையான சிந்தனைகளை உருவாக்கின என்பதனை உங்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றே நான் கருதினேன்.

மரணமானது என்னை நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்பதனை நான் இப்பொழுது தெளிவாக உணருகின்றேன். இச்சமயத்தினில், உயிருடன் நான் எவ்வளவு காலம் நீடித்து இருக்கின்றேனோ அக்காலம் முழுமையும், எந்த செயலினையும் நாம் வன்முறையினைக் கொண்டு எதிர்க்கக் கூடாது என்கின்ற கருத்தினை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும் என்றே எனக்கு அதிகமாகத் தோன்றுகின்றது. என்னுடைய எண்ணத்தின்படி அந்த ஒன்று தான் மிகுந்த முக்கியமானதாக இருக்கின்றது. வன்முறையினைக் கொண்டு எதனையும் எதிர்க்காத தன்மையே, தவறான ஏமாற்று வாதங்களால் எவ்விதத்திலும் மாற்றமடைந்திராத உண்மையான அன்பினுடைய விதியாக இருக்கின்றது.
மனிதகுலத்தின் ஒற்றுமைக்காக மனிதர்களின் ஆன்மாவானது நடத்துகின்ற ஒரு போராட்டமாகவே அன்பானது இருக்கின்றது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதும் அன்பினாலேயே தான் சாத்தியமாகின்றது. அத்தகைய அன்பே வாழ்வின் உயர்ந்ததொரு விதியாக, ஏன்...வாழ்விற்குரிய ஒரே விதியாக இருக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் இதனை அறிந்தே தான் இருக்கின்றான். மேலும் இதனை தனது மனதின் ஆழத்திலே அவன் உணர்ந்துமே தான் இருக்கின்றான் (இதனை நாம் தெளிவாகக் குழந்தைகளிடம் காணலாம்). பொய்யினால் பின்னப்பட்டு இருக்கின்ற உலகியல் சிந்தனையின் வலையினில் அவன் சிக்கிக் கொள்ளும் வரை அவன் அந்த உண்மையினை அறிந்தே தான் இருக்கின்றான்.

இந்த விதியினை அனைத்து தத்துவங்களும், அவை இந்திய தத்துவங்களாகட்டும், அல்லது சீன, யூத, கிரேக்க மற்றும் ரோமானிய தத்துவங்களாகட்டும் போதித்து தான் இருக்கின்றன. மேலும் என்னைப் பொறுத்தவரை 'இந்த அன்பின் விதியினை அடிப்படையாகக் கொண்டே தான் அனைத்து விதமான ஏனைய சட்டங்களும் தீர்க்கத்தரிசிகளும் நிலைபெற்று இருக்கின்றனர்' என்று மிகவும் தெளிவாக இயேசு கிருத்துவின் வாயிலாக அந்த விதியானது போதிக்கப்பட்டு இருக்கின்றது. அதற்கும் மேலாக அந்த விதியின் வளர்ச்சிக்கு இடையூறாக வரக்கூடிய தடங்கல்களையும் முன்கூட்டியே கணித்த அவர், உலகியல் ஆசைகளினை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் முன்னர் அந்த விதியானது தவறான வடிவினில் வழங்கப்படக் கூடும் என்ற ஆபத்தினையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். உலகியல் ஆசைகளினால் சூழப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தகைய மக்கள், தங்களது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வன்முறையைப் பயன்படுத்துவது என்பது சரியானதொரு வழிமுறை தான் என்றே கூறுவர்...இதனை இயேசு கூறியதனைப் போன்றே கூற வேண்டும் என்றால், ஒருவன் தன்னை அடித்தால் அவனைத் திருப்பி அடிப்பதும், தன்னுடைய பொருளினை எவனாவது திருடிக் கொண்டால் அதனை வன்முறையினைக் கொண்டு மீட்பதும் தங்களது உரிமை என்றே தான் மக்கள் கருதுவர்.

அனைத்து சிந்தனையாளர்களைப் போன்றே, வன்முறையினைப் பயன்படுத்துவது என்பது நமது வாழ்வின் உயர்ந்த விதியாக அன்பினைக் கொண்டிருக்கும் நிலைக்கு முற்றிலும் பொருந்தாத ஒன்று என்பதனை அவரும் அறிந்திருந்தார். எப்பொழுது வன்முறையினை பயன்படுத்துவது என்பது அனுமதிக்கப்படுகின்றதோ, அந்த நொடியே அந்த அன்பின் விதியானது முற்றிலுமாக மறுக்கப்படுகின்றது.

வெளித்தோற்றத்தினில் மிகவும் அருமையானதொன்றாகக் காட்சியளிக்கின்ற ஒட்டுமொத்த கிருத்துவ நாகரீகமுமே புதிரான இந்த முரண்பாட்டின் மேலாகவே தான் கட்டி எழுப்பப்பட்டு இருக்கின்றது. அத்தகைய முரண்பாடானது பெரும்பாலும் அறியாமையினாலும் சில நேரங்களில் வேண்டுமென்றேவும் பரப்பப்பட்டு இருக்கின்றது.

எப்பொழுது நாம், வன்முறையினால் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது என்கின்ற ஒரு விடயத்தினை, அன்பின் விதியினோடு இணைத்து ஒன்றாக வைக்கின்றோமோ அப்பொழுது அந்த அன்பின் விதியானது முற்றிலுமாக செயல் இழந்து போய் விடும். இது அடிப்படையான ஒன்றாகும். மேலும் எப்பொழுது அந்த அன்பின் விதியானது செயலற்றுப் போய் விடுகின்றதோ அப்பொழுது அந்த இடத்தில் 'வலிமையானதே சரியானது' என்கின்ற விதியினைத் தவிர வேறெந்த விதியும் இருக்க முடியாது. கிருத்துவ சமுதாயம் அந்த நிலையில் தான் கிட்டத்தட்ட 1900 ஆண்டுகளாக வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றது.

மனிதர்கள், தங்களது சமூகத்தினை எப்பொழுதும் ஒழுங்கானதொரு நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, வன்முறையினை வழிகோலாகக் கொண்டிருப்பதனையே தங்களது முக்கியமானதொரு கொள்கையாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். கிருத்துவ நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், கிருத்துவத்தில் மட்டுமே தான் மற்ற சமயங்களில் கூறப்பட்டு இருப்பதனை விட மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் அந்த அன்பின் விதியினைப் பற்றிக் கூறப்பட்டு இருக்கின்றது. அதனை கிருத்துவ சமயத்தினைப் பின்பற்றும் மக்களும் கண்டிப்பாக அறிந்தே தான் இருக்கின்றனர். அவ்வாறு அவர்கள் அந்த விதியினைக் குறித்து அறிந்து இருந்தும், வன்முறையினைப் பயன்படுத்துவது என்பது அனுமதிக்கப்பட்டு இருக்கின்றது என்று நம்பி, தங்களது வாழ்வினை வன்முறையினை அடிப்படையாகக் கொண்டே அமைத்தும் இருக்கின்றனர். எனவே தான் கிருத்துவ தேசங்களின் வாழ்வானது ஒரு மாபெரும் முரண்பாட்டினை நம் முன்னே எடுத்துக் காட்டிக் கொண்டே இருக்கின்றது.

அவர்கள் எதனை நம்புகின்றார்களோ அதற்கும் சரி, அவர்கள் எதனைக் கொண்டு அவர்களது வாழ்வினைக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றார்களோ அதற்கும் சரி, இடையினில் ஒரு மாபெரும் முரண்பாடானது இருந்து கொண்டே தான் இருக்கின்றது. நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்று கூறுகின்ற அன்பின் விதியிற்கும் வன்முறையினை பயன்படுத்தும் செயலுக்கும் இடையில் இருக்கின்ற முரண்பாடே அவர்களது வாழ்வினையும் நிறைத்து இருக்கின்றது. அந்த வன்முறை சார்ந்த முறையானது, அரசாங்கங்கள்...நீதிமன்றங்கள்...இராணுவம் என்பன போன்ற பல்வேறு வடிவங்களில் ஏற்கப்பட்டு இருக்கின்றது. அத்துடன் அந்த வடிவங்களானவை புகழப்பட்டும், வாழ்விற்கு அடிப்படைத் தேவையாக இருப்பவை என்று கருதப்பட்டுமே இருக்கின்றன. கிருத்துவத்தைச் சார்ந்த ஆன்மீக வாழ்வானது உலகினில் வளர்ந்துக் கொண்டே வர, இத்தகையதொரு முரண்பாடானது பெருகிக் கொண்டே போய் சமீப காலங்களில் ஒரு உச்சக்கட்ட அழுத்த நிலையினை வந்தடைந்து இருக்கின்றது.

இப்பொழுது நம் முன்னே இருக்கின்ற பிரச்சனை இது தான். ஒன்று... நாம் எவ்விதமான ஆன்மிகம் சார்ந்த நல்லொழுக்கங்களையும் ஏற்றுக் கொள்வதில்லை என்பதனையும் வலிமையானதே சரியானது என்ற கூற்றின்படியே தான் நமது வாழ்வினை அமைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதனையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது வலுக்கட்டாயமாக வரி வசூலிக்கும் செயலினை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்பதுடன் நில்லாது அனைத்து விதமான சட்டம் சார்ந்த நிறுவனங்களையும், காவல் துறை சார்ந்த நிறுவனங்களையும்...குறிப்பாக இராணுவம் சார்ந்த நிறுவனங்களையும் ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் நாம் முன் வைக்க வேண்டும். இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றினையே தான் நாம் தேர்வு செய்ய வேண்டி இருக்கின்றது.

இந்த வசந்த காலத்தினில், மாஸ்கோவில் இருக்கின்ற சிறுமியர் பள்ளிக்கூடம் ஒன்றினில் வேதாகமத் தேர்வு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கையில், 'பத்து கட்டளைகளைப்' பற்றி, அதுவும் குறிப்பாக ஆறாவது கட்டளையினைப் பற்றிக் கூறுமாறு அப்பெண்களின் சமய ஆசிரியர் அம்மாணவிகளிடம் முதலில் கேட்டு இருக்கின்றார். பின்னர் அச்சமயம் அங்கிருந்த பேராயரும் அதனையே அம்மாணவிகளை நோக்கி மீண்டும் கேட்டு இருக்கின்றார். அம்மாணவிகள் அனைவரும் சரியாக அக்கட்டளைகளைப் ஒப்புவித்த பின்பும், சில நேரம் அந்தப் பேராயர் மற்றுமொரு கேள்வியினை அவர்களின் முன் வைத்து இருக்கின்றார். 'இறைவனின் சட்டத்தின்படி அனைத்து காலங்களிலும் அனைத்து சூழல்களிலுமா கொலை செய்வது என்பது தடை செய்யப்பட்டு இருக்கின்றது?' என்ற கேள்வி தான் அது. அந்த அப்பாவிப் பெண்களும், அவர்களது ஆசிரியரால் தவறாக வழிநடத்தப்பட்டு 'எப்பொழுதும் அல்ல...கொலை செய்வது என்பது யுத்த காலத்திலும் சரி தண்டனைகள் வழங்குகின்ற பொழுதும் சரி அனுமதிக்கப்பட்டு இருக்கின்றது' என்றே தான் விடையினை கூறினர். அவர்களால் அவ்வாறு தான் விடையினையும் அளித்து இருக்க முடியும்.

ஆனால், 'கொலை செய்வது என்பது எப்பொழுதும் பாவமான ஒரு செயலா?' என்று வழக்கமாக உபரியாகக் கேட்கப்படும் அந்தக் கேள்வியினை அம்மாணவிகளுள் ஒருவரிடம் கேட்ட பொழுது, துரதிர்ஷ்டசாலியான அம்மாணவியின் முகம், இக்கட்டில் இருக்கும் ஒருவரின் முகம் போல் சிவக்க ஆரம்பித்தது (இது ஒரு கதையல்ல...ஆனால் உண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம். அதனை நேரில் கண்ட ஒருவரின் மூலமாக நான் இதனை அறிந்து கொண்டேன்). பின்னர் உறுதியாக அக்கேள்விக்கு 'ஆம்...எப்பொழுதும் அது பாவமான செயல் தான்' என்றே அவள் பதிலளித்தாள். மேலும் அந்தப் பேராயர் தாம் செய்யக்கூடிய வழக்கமான ஏமாற்று வாதங்களை அச்சிறுமியின் முன் வைத்தாலும், அவள் தன்னுடைய முடிவில் இருந்து மாறவே இல்லை. 'பழைய ஏற்பாட்டிலும் கூட கொலை செய்வது என்பது எப்பொழுதும் தடை செய்யப்பட்ட ஒன்று தான்...மேலும் இயேசு கிருத்து நம்மை கொலை செய்வதற்கு மட்டும் தடை விதிக்கவில்லை, மாறாக நம்முடைய சுற்றத்தாருக்கு எவ்விதமான தீங்கினை விளைப்பதற்கும் கூட அவர் தடை செய்து இருக்கின்றார்' - என்ற தனது கூற்றில் அவள் நிலையாக நின்றாள். கம்பீரம் நிறைந்த அந்த பேராயர் எவ்வளவு தான் வார்த்தை ஜாலங்களில் வித்தகராக இருந்தாலும் இறுதியில் அமைதியாகத் தான் இருக்க நேர்ந்தது. இறுதி வெற்றி அந்த பெண்ணிற்கே கிட்டியது.

ஆம்...நம்மால் நம்முடைய செய்தித்தாள்களில், விண்ணை வெற்றி கொள்வதில் நாம் அடைந்திருக்கும் முன்னேற்றத்தினைப் பற்றியும், பல்வேறு சங்கங்களைப் பற்றியும், நாடுகளுக்கு இடையே நிகழும் சிக்கலான உறவுகளைப் பற்றியும், கண்டுபிடிப்புகளைப் பற்றியும், பல்வேறு கூட்டணிகளைப் பற்றியும், கலை சம்பந்தப்பட்ட படைப்புகள் என்று அழைக்கப்பட்டுக் கொள்ளும் படைப்புகளைப் பற்றியும் விரிவாக எழுதிவிட்டு, அந்தச் சிறுமி கூறி இருக்கும் விசயத்தினைக் குறித்துக் கண்டும் காணாதவாறு மேலோட்டமாகவே சென்று விட முடியும் தான். ஆனால் நம்மால் அவளை முற்றிலுமாக மௌனமாக்கி விட முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு கிருத்துவனும் அந்தச் சிறுமியானவள் கூறி இருக்கும் விடயத்தினை உணர்ந்தே தான் இருக்கின்றான். அந்த உணர்ச்சியானது தெளிவற்ற ஒரு நிலையினில் அவனுள் இருந்தாலும் கூட ஒவ்வொருவனும் அதனை உணர்ந்தே தான் இருக்கின்றான். சோசியலிசம், கம்யூனிசம் (பொது உடைமைக் கோட்பாடு), அரசின்மைக் கோட்பாடு, இரட்சிப்புப் படை, குற்றங்களின் அதிகரிப்பு, பாடுகளில் இருந்து விடுதலை, அதிகரித்துக் கொண்டே செல்லுகின்ற செல்வந்தர்களின் ஆடம்பரத்திற்கும் அதிகரித்துக் கொண்டே செல்லுகின்ற ஏழைகளின் வறுமைக்கும் இடையிலுள்ள இடைவெளி கூடிக் கொண்டே போய்க் கொண்டிருக்கும் ஒரு அபத்தமான நிலை, பயம் கொள்ளத் தக்க வண்ணம் கூடிக் கொண்டே வரும் தற்கொலைகள்...போன்ற அனைத்தும் நமக்கு உள்ளே இருக்கின்ற அந்த முரண்பாட்டின் அறிகுறிகளே ஆகும். அந்த முரண்பாட்டினை நாம் தீர்த்து வைக்கத்தான் வேண்டி இருக்கின்றது. நிச்சயமாக அதற்கு நாம் ஒரு தீர்வினைக் காண்போம். அத்தீர்வானது, அன்பின் விதியினை வெளிப்படுத்தக் கூடியதொன்றாகவும், வன்முறையின் மேல் இருக்கும் நம்பிக்கையினை ஒழிக்கக் கூடியதொன்றாகவுமே நிச்சயமாக இருக்கும்.

டிரான்ஸ்வாலில் நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணியானது நம்முடைய கோட்பாட்டிற்கான ஒரு மிகப்பெரிய நடைமுறை ஆதாரத்தினை வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த வழிமுறைகளை இப்பொழுது ஒட்டுமொத்த உலகமும் பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் கிருத்துவர்கள் மட்டுமல்லாது உலகிலுள்ள அனைத்து மக்களும் அதனில் பங்கெடுத்துக் கொள்ளவும் முடியும். நீங்கள் இருக்கின்ற இடமானது பூமியின் எல்லையினில் இருப்பதனைப் போன்று எங்களுக்குத் தோன்றினாலும் உங்களுடைய பணியானது எங்களுடைய ஆர்வத்தின் மையப்புள்ளியாக எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கின்றது.

உங்களுடைய இயக்கத்தினைப் போன்றே இங்கே இரசியாவிலும் ஒரு இயக்கம் விரைவாக கவனத்தை ஈர்த்துக் கொண்டு வருகின்றது என்பதனை நீங்கள் அறிந்தால் மகிழ்ச்சி அடைவீர்கள் என்றே எண்ணுகின்றேன். இராணுவத்தில் சேருவதனை நிராகரிக்கும் மக்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் கூடிக் கொண்டே வருகின்றது. வன்முறையின் மூலமாக எதனையும் எதிர்க்கின்ற செயலினை ஒருசில மக்களே கைவிட்டுவிட்டு உங்களுடன் இணைந்திருந்தாலும் சரி...அதனைப் போன்றே இராணுவத்தில் சேருவதனை வெகு சிலரே நிராகரித்து எங்களுடன் இணைந்திருந்தாலும் சரி...நாம் இருவரும் நமக்குப் பொதுவாக இருக்கும்படி ஒன்றினைக் கூறிக் கொள்ள முடியும் - "இறைவன் நம்முடன் இருக்கின்றார்...அவர் மனிதர்களைக் காட்டிலும் பெரியவர்".

எப்பொழுதும் அதிகரித்துக் கொண்டே இருக்கக் கூடிய வண்ணம் கொலைத் தாண்டவங்களை செய்வதற்குத் தயாரான நிலையில் இராணுவமானது இருப்பது என்பது நிச்சயமான தேவைகளுள் ஒன்று என்ற நம்பிக்கைக்கும், அதே சமயத்தில் செய்த பாவங்களை ஒப்புக் கொண்டு பாவ மன்னிப்பை நாடும் கிருத்துவ நடைமுறைக்கும் (அது நமக்கு போதிக்கப்பட்டு இருக்கக்கூடிய சிதைக்கப்பட்ட கிருத்துவமாகவே இருந்தாலும்) இடையில் இருக்கின்ற முரண்பாடுகள் விண்ணகத்தை நோக்கி ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன. எனவே வெகு விரைவாகவோ அல்லது சற்று தாமதமாகவோ (வெகு விரைவாகவே வருவதற்கு தான் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றன) அந்த முரண்பாடானது தெள்ளத்தெளிவாக வெட்டவெளிச்சத்திற்கு வந்தாகத் தான் வேண்டும். அச்செயலானது ஒன்று ஒட்டுமொத்தமாக கிருத்துவ சமயத்தினை அழித்து விடும், ஏனென்றால் கிருத்துவ சமயம் என்ற ஒன்று அழிந்தால் தான் தேசங்களால் நிலைபெற்று இருக்க முடியும். அல்லது அச்செயலானது தேசங்களுக்குத் தேவையான அனைத்து விதமான இராணுவப் படைகளையும் அதனுடன் இணைந்திருக்கக் கூடிய வன்முறையான செயல்களையும் ஒட்டுமொத்தமாக விரட்டித் தள்ளி விடும்.

அனைத்து அரசாங்கங்களும் இந்த முரண்பாட்டினைப் பற்றி அறிந்தே தான் இருக்கின்றன. அது உங்களுடைய பிரிட்டிஷ் அரசாங்கமாகட்டும் அல்லது எங்களது இரசிய அரசாங்கமாகட்டும்...அவை அந்த முரண்பாட்டினைப் பற்றி அறிந்தே தான் இருக்கின்றன. எனவே தான் அவர்கள், தங்களுக்கு எதிரான வேறு எந்த செயலினையும் விட இந்த முரண்பாட்டினை புரிந்து கொள்ள வைக்கக் கூடிய வண்ணம் இருக்கின்ற செயலினை மிகவும் தீவிரமாக எதிர்ப்பார்கள். அதனை நாங்கள் இரசியாவில் நடந்த செயல்களின் மூலமாக அனுபவித்து இருக்கின்றோம்...உங்களுடைய பத்திரிகையில் நீங்கள் எழுதி இருக்கும் கட்டுரைகளும் இதனையே தான் வெளிப்படுத்துகின்றன. தங்களுக்கான மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் எந்த திசையில் இருந்து வருகின்றன என்பதனை அனைத்து அரசாங்கங்களும் அறிந்தே தான் இருக்கின்றன. மேலும், தங்களுடைய ஆர்வங்களையும் வசதிகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக அல்ல மாறாக தங்களுடைய ஒட்டுமொத்த இருப்பினைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே அந்த அரசாங்கங்கள் அந்த அச்சுறுத்தல்களை விழிப்புடன் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றன.

மதிப்புடன்,
லியோ டால்ஸ்டாய்

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு