'ஒரு கிருத்துவன் தேசங்களுக்கு இடையில் வேறுபாடுகள் காணலாமா?' என்ற கேள்வியை கிருத்துவ மக்களிடம் முன் வைத்த பொழுது அவர்களின் பதில் பெரும்பாலும் 'ஆம். தேசங்கள் மத்தியில் வேறுபாடுகள் இருக்கலாம். ஒரு மனிதன் தன்னுடைய அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டு சட்டத்திட்டங்களை ஒழுங்காகப் பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டும்' என்றே தான் இருந்தது. அவர்களது அக்கூற்றுக்கு அவர்கள் விவிலியத்தில் இருந்து சான்றாகத் தருவது 'இராயனுக்கு உரியதை இராயனுக்குத் தாருங்கள்...இறைவனுக்கு உரியதை இறைவனுக்குத் தாருங்கள்' என்ற வசனத்தையே தான். அதாவது அரசன் உங்களிடம் இருந்து எதனைக் கேட்கின்றானோ அதனை அரசனிடம் தாருங்கள், இறைவன் உங்களிடம் இருந்து எதனைக் கேட்கின்றானோ அதனை இறைவனிடம் தாருங்கள் என்பதே அதன் அர்த்தம் ஆகும். இந்த வசனத்தை வைத்துக் கொண்டு தான், 'பாருங்கள் இயேசுவே அரசுக்குத் தர வேண்டிய வரிகளைத் தாருங்கள்...அரசு உங்களிடம் இருந்து எதனைக் கேட்கின்றதோ அதனைத் தாருங்கள் என்று கூறி இருக்கின்றார். எனவே ஒரு கிருத்துவன் அரசுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அது பிழையில்லை. அதனைப் போலவே பல்வேறு அரசுகள் இங்கே இருப்பதும் பிழையில்லை' என்றே அவர்கள் கூறுகின்றனர். இதனைத் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது. அதற்கு முதலில் இயேசு எப்பொழுது அவ்வாறு கூறினார் என்பதை நாம் காண வேண்டி இருக்கின்றது.

தன்னுடைய சீடர்களுக்கு போதித்துக் கொண்டிருந்த பொழுது தன்னுடைய சீடர்களிடம் அவ்வாறு கூறினாரா?
இல்லை...!!!

பொது மக்கள் அனைவருக்கும் பொதுவாக இறைவனைப் பற்றியும் அவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதனைப் பற்றியும் போதித்துக் கொண்டிருக்கும் பொழுது அவர் அவ்வாறு கூறினாரா?
இல்லை...!!!

பின்னே அவர் எப்பொழுது அவ்வாறு கூறினார்?
தன்னைச் சிக்கலில் சிக்க வைப்பதற்காக யூத மதத்தைச் சார்ந்த மதகுருக்கள் எப்பொழுது திட்டம் போட்டு தன்னிடம் வந்தார்களோ...அப்பொழுது அவர்களிடம் இயேசு அவ்வாறு கூறி இருக்கின்றார். இதனைப் பற்றி சற்று விரிவாக காண்பது நலமாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.

அன்றைய சூழலில் இயேசுவை ஒரு சாதாரண மனிதனாக, யோசேப்பின் மகனாக மட்டுமே மக்கள் அறிந்திருந்தனர். இயேசுவின் சீடர்களுக்கு கூட அவர் யார் என்பதைப் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்குமா என்றால், இல்லை என்றே நம்மால் கூற முடியும் (அவர் யார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்றால் அவரை எப்பொழுது வீரர்கள் கைது செய்தார்களோ அப்பொழுது அவர்கள் அவரை விட்டு ஓடி இருக்க மாட்டார்களே). அப்படிபட்ட ஒரு சாதாரண மனிதனான இயேசு அங்கிருந்த யூத சமய மதகுருக்களின் கொள்கையை எதிர்த்துக் கொண்டிருந்ததை, சமூகத்தில் புகழும் அதிகாரமும் பெற்று விளங்கிக் கொண்டிருந்த அந்த மதகுருக்கள் விரும்பி இருக்கவில்லை. தங்களது அதிகாரத்தையும் நம்பிக்கையையும் ஒரு சாதாரண மனிதன், ஒரு சில நூல்களைப் படித்துக் கொண்டு கேள்வி கேட்கின்றானே என்றே தான் அவர்கள் எண்ணினர். தங்களின் செல்வாக்கு மக்களின் மத்தியில் குறைவதை உணர்ந்த அவர்கள் இயேசுவை எப்படியாவது கைது செய்து விட வேண்டும் என்றே எண்ணினர்.

அக்காலத்தில் யூதர்கள் ரோமப் பேரரசுக்கு அடிமையாக இருந்தனர். ரோமர்களுக்கு வரியும் செலுத்தி வந்தனர். இந்நிலையில் ரோமர்களுக்கு வரியினைச் செலுத்த வேண்டாம் என்று எவனாவது கூறினான் என்றால் அவனை புரட்சியாளன் என்று கூறி ரோமப் பேரரசு கைது செய்து விடும். எனவே எப்படியாவது இயேசுவை கைது செய்து விட வேண்டும் என்பதற்காக அவர்கள் திட்டம் போட்டு பின்வரும் கேள்வியை இயேசுவைப் பார்த்து கேட்கின்றனர்.

"ரோமர்களுக்கு யூதர்கள் வரி செலுத்த வேண்டுமா கூடாதா? இறைவன் என்ன கூறுகின்றார் என்று கூறுங்கள்."

இக்கேள்விக்கு இயேசு 'வரி செலுத்துங்கள்' என்று விடை கூறி இருந்தார் என்றால் அவர்களால் அவர்  மீது "இவன் நம்மை மீட்க வந்தவன் இல்லை...இவன் நம்மை ரோமர்களுக்கு வரி கட்ட வேண்டும் என்று கூறுகின்றான். இவன் யூத இனத் துரோகி...இவனா நம்மை ரோமர்களிடம் இருந்து காப்பாற்ற போகின்றான் என்று நீங்கள் நம்புகின்றீர்கள்" என்று குற்றம் சுமத்தி, யூத மக்களை அவரிடம் இருந்து பிரித்திருக்க முடியும்.

ஒருவேளை இயேசு 'வரி செலுத்தாதீர்கள்' என்று கூறி இருந்தால் அவர்கள் நேராக ரோம அதிகாரிகளிடம் சென்று "இவன் வரி செலுத்த வேண்டாம் என்று கூறி மக்களை புரட்சிக்குத் தூண்டுகின்றான்" என்று கூறி அவரை கைது செய்ய வைத்திருப்பார்கள். இது தான் அவர்களது திட்டம். 'என்ன சொன்னாலும் மாட்டுவான்' என்றே தான் அவர்கள் அக்கேள்வியை இயேசுவின் முன்னே வைத்தனர்.

அவர்களின் நோக்கத்தை இயேசு நன்றாக அறிவார். எனவே அவர் அவர்களைப் பார்த்து "நீங்கள் வரியினை எதன் மூலமாக கட்டுவீர்கள்" என்றே வினவினார். அதற்கு அவர்கள் ரோம நாணயத்தை எடுத்துக் காட்டினார்கள். அதில் சீசரின் படம் பொறிக்கப்பட்டு இருந்தது. யூதர்கள் அன்று ரோமர்களுக்கு அடிமையாக இருந்தார்கள் என்று நாம் மேலே கண்டோம். எனவே அனைத்துப் பணப் புழக்கமும் ரோமர்களின் நாணயங்களின் வாயிலாகவே இருந்தன. ஏனென்றால் யூத தேசம் அப்பொழுது ரோம பேரரசின் ஒரு அங்கமாகவே தான் இருந்தது.

அந்த நாணயத்தைப் பார்த்த இயேசு "இது யாருடைய படம்?" என்றார்.

"சீசரின் படம்" என்றே அவர்கள் கூறினர்.

அதனைக் கேட்ட இயேசு "அப்படி என்றால் சீசருக்கு உரியதை சீசருக்குத் தாருங்கள்...இறைவனுக்கு உரியதை இறைவனுக்குத் தாருங்கள்" என்றே அவர்களுக்கு விடை பகின்றார்.

இந்த ஒரு வசனத்தை வைத்துக் கொண்டு தான் கிருத்துவ மக்கள், அரசுக்கு கட்டுப்பட்டு இருப்பதையும், பல்வேறு தேசங்களாகப் பிரிந்து இருப்பதையும் இன்றைய கிருத்துவ சமயமானது அனுமதித்துக் கொண்டிருக்கின்றது. சரி இருக்கட்டும், இப்பொழுது இயேசு கூறிய அந்த பதிலின் அர்த்தத்தை சற்று பார்த்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

'ரோம நாணயம்' ரோமர்களால் உருவாக்கப்பட்டது. அதனை வைத்துக் கொண்டே வணிகம் முதலான தங்களுடைய வாழ்க்கைத் தேவைகளை யூதர்கள் அமைத்துக் கொண்டிருந்த சூழல் அன்றிருந்தது. எனவே "அவனுடைய பொருளை நீ பயன் படுத்திக் கொண்டிருக்கிறாய்...எனவே அவனது பொருளை அவன் கேட்டான் என்றால் அவனிடம் தந்து விடு. ஆனால் நீயோ இறைவன் படைத்த பொருளாக இருக்கின்றாய். எனவே இறைவன் உன்னிடம் என்ன கேட்கின்றானோ அதற்கே நீ உன்னைத் தர வேண்டி இருக்கின்றது. ரோமனின் நாணயத்தை அவனிடம் தந்து விடு. மாறாக உன்னை அவனிடம் தந்து விடாதே...ஏனென்றால் நீ இறைவனுக்கு உரியவன்...ரோமனுக்கு உரியவன் அல்ல" என்று பொருள் படுமாறு இயேசு அவர்களிடம் கூறினார்.

இந்த பதிலின் மேல் எந்த குற்றச்சாட்டையும் வைக்க முடியாமல் அந்த மதகுருக்கள் கிளம்புகின்றனர். இது தான் அந்த வசனத்தின் முழு அர்த்தம். மாறாக ஒரு கிருத்துவன் அரசுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதோ பல்வேறு அரசுகள் இருக்க வேண்டும் என்பதோ அல்ல. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு மனிதன் இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதே இதன் பொருளாக வருகின்றது. நிற்க!!!

இப்பொழுது இந்த பதிலினைப் பற்றியே தான் நாம் இன்னும் சிறிது நுணுக்கமாக காண வேண்டி இருக்கின்றது...காண்போம்!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு