சென்ற பதிவினில் வள்ளுவர் இறைவன் என்று கூறுவது சூரியனையே என்று சிலர் கருதுவதையும் அது எவ்வாறு பொருந்தாது என்பதையும் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது நாம் வள்ளுவர் பௌத்த சமயத்தை அல்லது சமண சமயத்தைச் சார்ந்தவராக இருக்கலாம் என்றக் கருத்தினைத் தான் காண வேண்டி இருக்கின்றது.

திருவள்ளுவர் பௌத்தம் அல்லது சமணச் சமயத்தைச் சார்ந்தவரா?

இப்பொழுது ஒரு கேள்வி, ஒருவர் ஒரு சமயத்தைச் சார்ந்தவர் என்றோ அச்சமயத்தைச் சார்ந்தவர் அல்லர் என்றோ கூற வேண்டும் என்றால் முதலில் என்ன தெரிந்து இருக்க வேண்டும்?

அந்த சமயத்தைப் பற்றித் தெரிந்து இருக்க வேண்டும் தானே. அதனைப் பற்றித் தெரிந்தால் தானே ஒருவர் அச்சமயத்தைச் சார்ந்தவர் என்றோ அல்லது சார்ந்தவர் அல்ல என்றுக் கூற முடியும். இந்நிலையில் வள்ளுவர் சமணம் அல்லது பௌத்தம் ஆகிய சமயங்களைச் சார்ந்தவர் என்றுக் கூற வேண்டும் என்றால் முதலில் அச்சமயங்களைப் பற்றி நாம் அறிந்து இருக்க வேண்டும் தானே. அது தானே சரியானதொன்றாக இருக்கும். எனவே நாம் முதலில் அந்த சமயங்களின் கருத்துக்களை சிறிது மேலோட்டமாகப் பார்த்து விடலாம்...!!!

பௌத்த சமயமாக இருக்கட்டும் அல்லது சமணச் சமயமாக இருக்கட்டும் இரண்டுமே இறை மறுப்புச் சமயங்கள்...அதாவது நாத்திக சமயங்கள்...அவைகளைப் பொறுத்த வரை இறைவன் என்ற ஒருவன் இல்லை. அச்சமயங்களுள் இறைக் கோட்பாடு கிடையாது. அதனால் பிறவிச் சுழற்சிக் கோட்பாடு உண்டு. அதாவது இந்த பிறவியில் நீ செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அடுத்த பிறவி நிகழும்...உன்னுடைய ஒவ்வொரு பிறவியிலும் உன்னுடைய பழைய வினை உன்னை தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கும்...அதை யாராலும் மாற்ற இயலாது.

இதையே தான் சிலப்பதிகாரத்தில் வரும் 'ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்' என்ற கூற்று வெளிப்படுத்துகிறது. இந்நூலினை இயற்றியவர் சமண சமயத்தைச் சார்ந்த இளங்கோவடிகள் என்பதை நாம் அறிவோம்...அதனால் சமணத் தத்துவமாகிய 'ஒருவனது வினை அவனை எப்பிறவி ஆயினும் அடைந்தேத் தீரும்' என்ற கருத்து அவரது படைப்பில் வெளிப்பட்டு உள்ளது.

பற்றுகளை அறுப்பதன் மூலமே உன்னால் அப்பிறவிச் சுழற்சியில் இருந்து விடுபட முடியும்...இதுவே அச்சமயங்களின் அடிப்படைக் கூற்றாகும்...உலகத் தோற்றம், உயிர், உடல், மாற்றம் என்பன போன்ற பல தத்துவங்கள் அவற்றுள் கூறப்பட்டு உள்ளனவாயினும் நம்முடைய தலைப்பிற்கு அவை தேவை இல்லாத காரணத்தினால் அவற்றை நாம் இங்கே காணப் போவதில்லை. நிற்க.

சுருக்கமாக, சமண பௌத்த சமயங்கள் இறைக் கொள்கை இல்லாத சமயங்கள்...பிறவிச் சுழற்சியில் நம்பிக்கை கொண்டுள்ள சமயங்கள்...ஒருவனது வினை அவனை எப்பிறவியிலும் அடைந்தேத் தீரும் என்ற நம்பிக்கைக் கொண்டுள்ள சமயங்கள்...அவ்வினைகளிடம் இருந்து அவனை யாராலும் காப்பாற்ற முடியாது...பற்றினை அறுத்து துறவு நிலைக்கு செல்வதன் மூலமாகவே அவனால் பிறவித் தளையில் இருந்து விடுப்பட்டு வீடுப் பேற்றினை அடைய முடியும் என்ற கொள்கையினை உடையச் சமயங்கள்.

இந்நிலையில் வள்ளுவர் சமண சமயத்தைச் சார்ந்தவராகவோ அல்லது பௌத்தச் சமயத்தைச் சார்ந்தவராகவோ இருந்து இருந்தால், அச்சமயக் கொள்கைகள் தான் அவருடைய குறள்களில் வெளிப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் வள்ளுவரின் குறள்களின் கருத்துக்கள் பௌத்த சமண கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக இருக்கின்றன.

1. வள்ளுவர் இறை நம்பிக்கை உடையவர். இதனை சிறப்பாயிரத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியினை வைத்துத் துவங்கி இருப்பதில் இருந்தே நாம் அறிய முடிகின்றது.

2.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - 5
 
இக்குறளில் வள்ளுவர் ஒருவனை இருளில் சேர்த்து விடும் இரு வினைகளும் அவன் இறைவனின் அடி சேர்ந்து விட்டால் அவனை ஒன்றும் செய்யாது என்றே கூறுகின்றார். இது பௌத்த சமண சமயங்களின் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட கூற்றாகும்.

அச்சமயங்களின் கொள்கைகள் படிஒருவனது வினைகளைப் போக்கும் வல்லமை வேறு ஒருவனுக்கு கிடையாது...ஒருவனது வினை அவனைத் ஒவ்வொரு பிறவியாகத் தொடர்ந்துக் கொண்டே இருக்கும்...அதில் இருந்து விடுபட அவன் பற்றுகளை அறுத்து துறவியாக வேண்டும். பற்றுகளை எவ்வாறு ஒரு மனிதன் அறுக்க முடியும் என்பதற்கு சமண சமயமும் புத்த சமயமும் தனித்தனியே வழிகள் வைத்து இருக்கின்றன. அவைகளைப் பின்பற்றினால் ஒழிய ஒருவனால் அவனது வினைகளை விட்டு விலக முடியாது.

ஆனால் வள்ளுவர் அக்கருத்தினை முற்றிலுமாக இங்கே உடைத்து விடுகின்றார். இறைவனின் அடி சேர்ந்தவனுக்கு வினைகளால் யாதொரு ஊரும் நேராது என்றும் அவனை வினைகள் சேராது என்றுமே அவர் கூறிச் சென்று இருக்கின்றார். வள்ளுவரின் கூற்றின் மூலம் இறைவன் மனிதனின் வினையைத் தீர்க்கும் வல்லமைப் பெற்று இருக்கின்றான். மேலும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். - 10
 
என்று இறைவனின் அடி சேர்ந்தவர்களால் மட்டுமே அவர்களது பிறவிக் கடலைக் கடக்க முடியும் சேராதவர்களால் முடியாது என்று வள்ளுவர் கூறுவதன் மூலம் பௌத்த சமண கொள்கையான 'ஒருவன் அவனது முயற்சியால் மட்டுமே பிறவிச் சுழற்சியில் இருந்து விடுபட முடியும்' என்ற கூற்றினை மறுக்கின்றார்.

வள்ளுவரின் கூற்றின் மூலம் ஒருவன் அவனாகவே அவனது வினையில் இருந்தோ அல்லது பிறப்பில் இருந்தோ தப்பி கரை சேர இயலாது...அதற்கு இறைவனின் துணை வேண்டும்.

இக்கருத்துக்கள் பௌத்தம் மற்றும் சமண சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே மறுப்பவை. இந்நிலையில் வள்ளுவர் பௌத்தம் அல்லது சமணச் சமயத்தைச் சார்ந்தவர் என்றுக் கூறுவது பொருந்தாது போய் விடுகின்றது. நிற்க

இதுவரை நாம் எவ்வாறு வள்ளுவர் பௌத்த சமயத்தையோ அல்லது சமண சமயத்தையோ சார்ந்தவர் அல்லர் என்பதையும், அவர் கூறிய இறைவன் சூரியன் அல்ல என்பதையும் கண்டு இருக்கின்றோம்.

இப்பொழுது வள்ளுவரின் கொள்கை யாது என்றும்...வள்ளுவர் கூறிய இறைவன் யார் என்றுமே நாம் காண வேண்டி இருக்கின்றது....!!!

காணலாம்...!!!

தொடரும்...!!!

பி.கு:

திருக்குறளினைப் பற்றிய முந்தையப் பதிவுகளைப் படிக்க

ஆய்வாளர்.தெய்வநாயகம் ஐயா என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2 கருத்துகள்:

பெளத்த மற்றும் சமன மதங்களில் குறப்படும் துறவறம் புகுதல் என்ற கொள்கையையே வள்ளுவன் இறைவனடி சேருதல் என்று குறிப்பிட்டிருகலாம் அல்லவா அண்ணா

@ தமிழ் வசந்தன்,

சகோதரருக்கு வணக்கங்கள்...தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களது கேள்விக்கு விடையினைக் காணலாம்...

வள்ளுவர் இறைவனடி சேருதல் என்று துறவறம் புகுதலை கூறி இருக்கவில்லை. ஏனென்றால் துறவறம் புகுதல் தான் முக்தி என்றால் வள்ளுவர் இல்லறத்தை சிறப்பிக்க வேண்டியத் தேவை இல்லையே. வள்ளுவர் அறத்துப் பாலினில் இல்லறம் துறவறம் என்று இரண்டாக வைத்து உள்ளார். துறவறம் பூண்டவர்கள் தான் முக்தியினை அடைய முடியும் என்பது சமணக் கொள்கை. ஆனால் வள்ளுவர் அக்கொள்கைக்கு மாறாக இல்லறத்தை சிறப்பித்து உள்ளார். மேலும் துறவு என்னும் அதிகாரத்தில்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

என்றே வள்ளுவர் கூறி இருக்கின்றார். அதாவது துறவறம் மேற்கொள்வோர் பற்றற்ற இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறி இருக்கின்றார்.

எனவே திருவள்ளுவர் இறைவனடி சேருதல் என்றுக் கூறியது பௌத்த சமண கொள்கையான துறவறம் புகுதலை அல்ல.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு