முதல் உவமை:

நல்லதொரு மேய்ச்சல் நிலத்தில் களைகள் முளைத்து இருந்தன. அவற்றை நீக்குவதற்காக அந்த நிலத்தின் உரிமையாளர்கள் அந்த நிலத்தினை நன்கு உழுதனர். இருந்தும் களைகள் எண்ணிக்கையில் அதிகமாக வளரத் தான் செய்தன. ஒரு நாள் ஞானமுள்ள நல்ல மேய்ப்பவன் ஒருவன் அந்த நிலத்தின் உரிமையாளர்களைச் சந்தித்து, களைகளை அழிப்பதற்கு அதனை உழுவது பயன் தராது, அவ்வாறு செய்வது களைகளை மேன்மேலும் வளரத்தான் வழி வகுக்கும், மாறாக களைகள் வேரோடு பிடுங்கி எடுக்கப்பட வேண்டும் என்று அவர்களுக்கு தான் தந்த பல்வேறு அறிவுரைகளுடன் களைகளைப் பற்றியும் கூறிச் சென்றான்.

ஆனால் அந்த வயல்களின் சொந்தக்காரர்கள் அந்த நல்ல மேய்ப்பன் கூறிய பல கூற்றுக்களுள் களைகளைப் பற்றியக் கூற்றினை கவனிக்காது விட்டதினாலோ, அல்லது அவரது கூற்றினை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியாத காரணத்தினாலோ, அல்லது அவர்களது சொந்த காரணத்தினால் களைகளைப் பற்றிய கூற்றினை பின்பற்ற விரும்பாததினாலோ, களைகளைக் களைவதனைப் பற்றிய அந்த மேய்ப்பனின் கூற்று, அது கூறப்பட்டே இருக்காததனைப் போலவே நிறைவேற்றப்படாது போயிற்று. மக்களும் தொடர்ந்து களைகளை உழுத வண்ணமாய் அதனைப் பரப்பிக் கொண்டு இருந்தனர்.

தொடர்ந்த சில வருடங்களில் சில மனிதர்கள் வயல்களைப் பற்றியும் அந்த நல்ல மேய்ப்பனின் கூற்றினைப் பற்றியும் அந்த வயல்களின் சொந்தக்காரர்களுக்கு நினைவுப்படுத்தினாலும், அவர்களின் கூற்றிற்கும் யாதொரு கவனமும் தரப்படவில்லை.

அந்த வயல்களின் சொந்தக்காரர்கள் தாங்கள் முன்னர் செய்துக் கொண்டிருந்ததைப் போலவே தொடர்ந்து செய்யத் துவங்கினர். அதனால் களைகளைக் கண்ட உடன் அதனை உழுது விடுவது என்பது அவர்களுக்கு ஒரு பழக்கமாக மட்டும் ஆனதோடு நில்லாமல் ஒரு புனித சடங்காகவே மாறிவிட்டது. அச்செயல்களால் அந்த வயலும் களைகளால் நிரப்பப்பட்டுக் கொண்டு இருந்தது. விரைவில் களைகளைத் தவிர வேறொன்றும் இல்லாத நிலைக்கு அந்த வயல் சென்று விட்டு இருந்தது.

மக்கள் குறைக் கூறிக் கொண்டே இப்பிரச்சனைக்கு தீர்வினைக் காண பல முறைகளை சிந்திக்க ஆரம்பித்தனர், ஆனால் நீண்ட நாட்களுக்கு முன்னர் அவர்களுக்கு அந்த நல்ல மேய்ப்பனால் கூறப்பட்டு இருந்த தீர்வினை அவர்கள் பயன் படுத்தவில்லை.

இந்நிலையில் தான் ஒரு மனிதன், வயலின் அந்த இழிவான தீய நிலையினைக் கண்டு, அதற்குத் தீர்வாய் களைகளை உழக் கூடாது மாறாக அவற்றை வேரோடு புடுங்க வேண்டும் என்ற விதியினை நீண்டகாலமாய் மறக்கப்பட்டு இருந்த அந்த மேய்ப்பனின் கூற்றுகளில் இருந்து அறிந்துக் கொண்டு, அந்த வயலின் சொந்தக்காரர்களிடம் அவர்கள் முட்டாள்தனமாக நடந்துக் கொண்டார்கள் என்றும் அவர்களின் ஞானமின்மை நீண்ட காலத்திற்கு முன்னரே விவேகமும் நற்குணமும் மிக்க அந்த மேய்ப்பனால் சுட்டிக்காட்டப் பட்டு இருந்தது என்றும் கூறி அவர்களுக்கு அந்த மேய்ப்பன் கூறிய தீர்வினை நினைவுப்படுத்தினார்.

ஆனால், அந்த மனிதன் அவர்களுக்கு நினைவுப்படுத்திய தீர்வு சரியா என்பதனை ஆராயாமலும், அது சரியானதொன்றாக இருப்பின், களைகளை உழுவதை நிறுத்தியும், அல்லாது அத்தீர்வு தவரானதொன்றாக இருப்பின், அவர்களுக்கு நினைவூட்டிய அவனுக்கு அவனது கூற்றில் இருக்கும் பிழையினை நிரூபிக்கவோ அல்லது அந்த நற்குணமிக்க விவேகம் மிகுந்த மேய்ப்பனின் கூற்றுகள் அடிப்படை அற்றவை என்றும் அக்கூற்றுகள் அவர்களுக்கு ஒவ்வாதவை என்றும் கூற முயலாமலும், அந்த வயலின் உரிமையாளர்கள், மேலே கூறிய எவற்றையும் செய்யாது, அந்த மனிதன் அவர்களுக்கு நினைவூட்டியதற்காக அவன் மீது கோபம் கொண்டு அவனைத் திட்ட ஆரம்பித்தனர். சிலர் அவனை, அவன் மட்டுமே அந்த நல்ல மேய்ப்பனின் கூற்றினை அறிந்தவன் என்று கற்பனை செய்துக் கொண்ட அறிவில்லாத தற்பெருமைகாரன் என்றனர். சிலர் அவனை வன்மம் மிகுந்த தவறான கருத்தினைப் பரப்புபவன் என்றனர். சிலர், அவன் அவனது கருத்தினைக் கூறவில்லை மாறாக உலகம் முழுவதும் மதிக்கப்படும் அந்த மேய்ப்பனின் கூற்றினைத் தான் அவர்களுக்கு அவன் நினைவுப்படுத்தி இருக்கின்றான் என்பதனை மறந்து அவனை ஆபத்தானவன் என்றும், அவன் உலகம் முழுவதும் களைகளைப் பரப்பி மக்களின் நிலத்தை அவர்களிடம் இருந்து பறிப்பவன் என்றும் கூறினர்.

"இவன் நாம் நமது வயல்களில் விளைந்த களைகளை உழக் கூடாது என்றுக் கூறுகின்றான். ஆனால் நாம் களைகளை அழிக்காது விட்டோம் என்றால் அந்த களைகள் எண்ணிக்கையில் வளர்ந்து நமது முழு வயலையுமே பாழாக்கி விடும். நமக்கு எதற்காக வயல் தரப்பட்டு இருக்கின்றது...களைகளை வளர்க்கவா?" என்று வேண்டுமென்றே 'அவன் களைகளை அழிக்க வேண்டாம் என்கின்றான்' என்று அவனது கூற்றினைத் திரித்துக் கூறுகின்றனர்.(அவன் களைகளை உழாதீர்கள் மாறாக அவற்றை வேரோடு புடுங்குங்கள் என்றே கூறி இருந்தான்)

அந்த மனிதன் பையித்தியக்காரன் என்ற எண்ணமோ அல்லது கருத்தினைத் திரிப்பவன் என்ற எண்ணமோ அல்லது மக்களின் வீழ்ச்சியை கருத்தில் கொண்டிருப்பவன் என்ற எண்ணமோ அனைவராலும் அவர்களின் எண்ணப்படி உறுதிசெய்யப்பட்டு விட்டதனால் அனைவரும் அவனை திட்டவோ அல்லது கேலி செய்யவோ துவங்கினர்.

அந்த மனிதன் அவர்களுக்கு எவ்வளவு தான் 'களைகளை பரப்புவது அவனது எண்ணம் அல்ல மாறாக ஒரு விவசாயியின் முக்கியக் கடமை களைகளை அழிப்பதே ஆகும் என்ற கொள்கையே அவன் எண்ணமாகும் என்றும் இதுவே அவன் அவர்களுக்கு நியாபகப்படுத்திய கூற்றினைக் கூறிய மேய்ப்பனின் புரிதலுமாகும்' என்று எடுத்துக் கூறி அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்தாலும் அவர்கள் அவனைக் கண்டுக் கொள்ள வில்லை.

அவர்கள் உறுதியாக முடிவு செய்து விட்டு இருந்தனர் ஒன்று அவன் பையித்தியக்காரனாகவோ அல்லது தலைக்கனம் மிக்கவனாகவோ இருந்து வேண்டுமென்றே அந்த நற்குணமிக்க விவேகமான மேய்ப்பனின் கூற்றினை திரித்துக் கூறிக்கொண்டு இருக்கின்றான் என்றோ, அல்லது மக்களை களைகளை அழிக்க அழைக்காது களைகளை வைத்துக் கொண்டு அவற்றை வளர்க்க முயலும் ஒரு அயோக்கியன் என்றோ அவர்கள் முடிவு செய்து விட்டு இருந்தனர்.

அதே நிலைமை தான் நான் எப்பொழுது தீமையை எதிர்க்காது இருப்பதனைப் பற்றிய சுவிசேசத்தின் கூற்றினைப் பற்றிக் கூறிய பொழுது எனக்கும் நிகழ்ந்தது. தீமையை வன்முறையால் எதிர்க்காது இருப்பது என்ற விதியானது கிருத்துவால் கூறப்பட்டு, அவருக்கு பின்னர் அவருடைய உண்மையான சீடர்களால் எக்காலமும் கூறப்பட்டும் கடைபிடிக்கப்பட்டும் வந்துள்ளது. ஆனால் இவ்விதியினை அவர்கள் கவனிக்காததினாலையோ அல்லது இவ்விதியினை அவர்களால் புரிந்துக் கொள்ள இயலாததினாலையோ, அல்லது இந்த விதியினை பின்பற்றுவது என்பது அவர்களுக்கு கடினமான ஒன்றாக இருந்ததினாலையோ காலப்போக்கில் இவ்விதி மறக்கப்பட்டு விட்டது. இது இன்று எந்த நிலைமைக்கு வந்து விட்டது என்றால், இந்த விதியானது மக்களால் ஏதோ கேள்விப்படாத புதிய ஒன்றினைப் போலவும், விசித்திரமானதைப் போலவும் ஏன் பையித்தியக்காரத்தனமாகவும் கருதப்படும் நிலைக்கு வந்து விட்டது.

களைகளை உழக் கூடாது மாறாக அவற்றை வேரோடு புடுங்க வேண்டும் என்ற அந்த நற்குணமுள்ள விவேகமான மேய்ப்பனின் பழைய கூற்றினை மக்களுக்கு நினைவூட்டிய மனிதனுக்கு என்ன நேர்ந்ததோ அதுவே தான் எனக்கும் நேர்ந்தது.

அந்த வயல்களின் உரிமையாளர்கள் எவ்வாறு 'களைகளை அழிக்க வேண்டாம் என்றுக் கூறவில்லை மாறாக தெளிவான முறையில் அவற்றை அழிக்க வேண்டும்' என்ற அவனது அறிவுரையை கள்ள மௌனத்தினால் மறைத்து "இவன் பையித்தியக்காரன்...களைகளை அழிக்காது அவற்றை பெருக்க வேண்டும் என்று நம்மிடம் கூறுகின்றான்" என்று கூறினரோ, அதே வகையில் 'கிருத்துவின் கூற்றின்படி தீமையை அழிக்க அதனை வன்முறையால் எதிர்கொள்ளாது இருப்பது தேவையாகும்...அன்பின் வேர்களாளையே தீமையை அழிப்பது தேவையாகும்' என்ற எனது கூற்றிற்கு பதிலாக "இவன் கூறுவதை நாம் கேட்க மாட்டோம்...இவன் பையித்தியக்காரன்...தீமை நம்மை அழிப்பதற்கு ஏதுவாக நாம் தீமையை எதிர்க்கக் கூடாது என்று அறிவுரை செய்கின்றான்" என்று கூறுகின்றனர்.

நான் என்ன கூறினேன் என்றால், கிருத்துவின் கூற்றுகளின்படி, தீமையை தீமையால் அழிக்க முடியாது...தீமையை வன்முறையால் எதிர்க்கும் ஒவ்வொரு தருணமும் தீமையை வளர்க்கவே செய்கின்றது...தீமை நன்மையினாலையே அழிக்கப்படுகின்றது. "உங்களை சபிப்பவர்களை ஆசீர்வதியுங்கள்...உங்களுக்கு தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்...உங்களது எதிரிகளை நேசியுங்கள்..." - உங்களுக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள்.

கிருத்துவின் போதனைகளின்படி மனிதனின் வாழ்க்கை முழுவதுமே தீமையோடு நிகழும் ஒரு போராட்டம் தான் என்றும் அன்பையும் அறிவையும் துணையாய் கொண்டு தீமையை எதிர்க்கும் ஒரு போராட்டமே அது என்றும் தீமையை தீமையால் எதிர்க்கும் வழியை கண்டித்து அதனை தீமையை எதிர்க்கும் மற்ற வழிகளில் இருந்து கிருத்து விலக்கி வைத்து இருக்கின்றார் என்றே நான் கூறி இருந்தேன்.

எனது இந்த வார்த்தைகள் தீமையை எதிர்க்கவே கூடாது என்றே அர்த்தம் கொள்ளும் வண்ணம் புரிந்துக்கொள்ள பட்டு இருக்கின்றன. யாருடைய வாழ்க்கை வன்முறையை அடிப்படையாக கொண்டு அமைந்து இருக்கின்றதோ, அதனால் யாருக்கு வன்முறை நெருக்கமானதொன்றாக இருக்கின்றதோ அவர்கள் எனது வார்த்தையினையும் கிருத்துவின் வார்த்தையினையும் அந்த வடிவத்திலையே ஏற்றுக் கொண்டு, தீமையை வன்முறையால் எதிர்க்கக் கூடாது என்ற கூற்று பொய் என்றும், முட்டாள்தனமானது என்றும் ஆபத்தானது என்றும் அறிவிக்கின்றனர்.

இதனால் மக்களும் அமைதியாக தீமையை ஒழிக்கின்றோம் என்ற தோற்றத்தில் பெருமளவு தீமையை வளர்த்துக் கொண்டே இருக்கின்றனர்.

தொடரும்...!!!

பி.கு:

இது இரசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் கட்டுரையான 'Three Parables' என்பதன் ஒரு பகுதியின் எனது தமிழ் மொழிபெயர்ப்பே ஆகும்.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு