இது வரை நாம் கண்ட விடயங்களின் படி இன்றைக்கு சமூகத்தில், பிரச்சனைகளின் காரணிகளைத் தீர்ப்பதனை விட தற்காலிக தீர்வினை தருவதனையே உதவியாக பல மக்கள் செய்துக் கொண்டு இருக்கின்றனர் என்றே நாம் கண்டு இருக்கின்றோம்.

மக்கள் அவ்வாறு நிரந்திரத் தீர்வினை நாடாது தற்காலிகமான தீர்வினை நாடுவதன் காரணம், அவர்கள் உதவுவதற்கு தயாராக இருந்த போதிலும்...அந்த உதவியினால் அவர்களுக்கோ அல்லது அவர்களது இயல்பான வாழ்க்கைக்கோ அல்லது குடும்பத்திற்கோ எவ்வித பிரச்சனைகளும் வரக் கூடாது என்ற எண்ணம் அவர்களுக்குள் பலமாக இருக்கின்றது.

உண்மையில், பிரச்சனைகள் ஏதுமின்றி நிரந்தரமானத் தீர்வுகள் கிட்டப்பெறும் என்றால் மேலே நாம் கண்ட மக்கள் நிச்சயம் மனமார அதனையே தீர்வாக விரும்புவர் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. இவர்கள் நிரந்திரத் தீர்வினை நாடாது இருப்பதன் காரணம் இன்றைய உலகநடப்பில் நிரந்தரத் தீர்வுகள் என்பது மிகுந்த பிரச்சனைகளுடன் இருப்பதனால்தான்.

உதவ வேண்டும் என்று அவர்கள் அன்பின் உந்துதலால் முன்வந்தாலும்...பிரச்சனைகள் எழக் கூடும் என்ற பயத்தின் காரணத்தினால் அவர்களது உதவியினை பிரச்சனைகள் எழா வண்ணம் சுருக்கிக் கொள்கின்றனர்.

அன்பு என்னும் உணர்ச்சியினை பயம் என்ற உணர்ச்சி கட்டுப்படுத்தி விடுகின்றது. இது தான் பிரச்சனை.

ஒரு சராசரி மனிதனின் சிந்தனை இன்றைக்கு "நான் உதவி செய்யணும்னு தாங்க நெனைக்கிறேன்...ஆனா அடுத்தவங்களுக்கு உதவி பண்ண போயி பிரச்சனை அது இதுன்னு எல்லாம் உட்கார நமக்கு நேரம் இல்லைங்க...ஏற்கனவே வேலை, குடும்பம் அப்படின்னு நம்மள பாக்குறதுக்கே நேரம் இல்லை...இதுல பெரிய மாற்றம் போராட்டம் அப்படின்னு எல்லாம் போனா நம்ம பாடே திண்டாட்டம் ஆகிடும்...ஏதோ நம்மளால மனசுக்கு சரி அப்படின்னு தோணுற உதவியப் பண்ணோமா சரி அப்படின்னு இருக்குறது தாங்க சரி.." என்றவாறு தான் இருக்கின்றது.

அதாவது அவனது சிந்தனை அவனையும் அவனைச் சார்ந்தவர்களையுமே முன்னிலையில் வைத்து இருப்பதாக இருக்கின்றது. இது ஒரு சராசரி மனிதனின் இயல்பு தான்...இதனை நாம் குறை கூற முடியாது.

ஆனால் மனிதன் சராசரி அல்லவே...!!!

இவ்வுலகத்தை மாற்றும் வல்லமையையும் அழிக்கும் வல்லமையையும் அவன் பெற்று இருக்கின்றான்...அவனது செயல்களே இன்று சமூகங்களையும் பெரிய மாற்றங்களையும் உருவாக்கி இருக்கின்றன. உண்மையைக் கூற வேண்டும் என்றால் இந்த உலகமே அவனது கட்டுக்குள் இருக்கின்றது.

இந்நிலையில் அத்தகைய வல்லமையைப் பெற்ற ஒருவன் "நான் என்னை மட்டுமே கண்டு கொண்டு இருப்பேன்...மற்ற வேலைகளுக்கு நேரம் இல்லை" என்ற எண்ணத்துடன் இருப்பானாயின் அது அவனுக்குரிய கடமைகளை அவன் செய்யாது பயத்தாலும் சுயநலத்தாலும் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றான் என்றே புலனாகின்றது.  இது அவனுக்கும் சரி சமூகத்திற்கும் சரி தீங்கு விளைவிக்கும் ஒரு நிலை ஆகும்.

"உன்னுடைய உரிமை செய்யும் காரியம் மட்டுமே...காரியத்தின் முடிவும் பயனும் உன் உரிமையல்ல...பயனில் ஆசை செலுத்தி எதையும் செய்யாதே. இதைச் நான் சொன்னேன் என்று செய்ய வேண்டியன செய்யாமல் சும்மா இருந்து விடுவதில் மனம் செலுத்தாதே. பற்று வைத்துக் கொள்ளாமல், பகையை அகற்றிச் செய்வதைச் செய்...நிறைவேறுவதும் நிறைவேறாமல் போவதும் இரண்டையும் ஒன்றாகக் கருதிச் செய்" - பகவத் கீதை

நம்மில் பலர் உதவிகள் செய்வதற்கு நேரம் இல்லை என்றே கூறுகின்றனர்...ஆனால் உண்மையில் இந்த உலகத்தில் நேரம் மட்டுமே நம்மிடம் இருக்கின்றது. பிறந்து விட்டோம் என்பது நமக்குத் தெரியும்...இறந்து விடுவோம் என்பதும் நமக்குத் தெரியும்...இந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையே உள்ள காலம் தான் நம்மிடம் இந்த உலகில் இருக்கின்றது. அந்த காலம் மட்டுமே நம்மிடம் இருக்கின்றது...அல்லது அக்காலத்தின் வசம் நாம் இருக்கின்றோம் என்றும் கூறலாம்.

இந்நிலையில் நமக்கு கொடுக்கப்பட்டு உள்ள அக்காலத்தில் சில பல செயல்களைச் செய்வதற்கு மட்டுமே நமக்கு உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன.

காலம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது...உலகமும் இருக்கின்றது...அக்காலத்தில் அவ்வுலகத்தில் நாம் என்ன காரியங்களைச் செய்கின்றோம் என்பதில் தான் நாம் அடங்கி இருக்கின்றோம்...மாறாக அழியப் போகும் ஒன்று அதனை மட்டுமே கண்டு கொண்டு செல்வது என்பது அர்த்தமற்ற ஒரு செயலாகும்...மனிதன் அர்த்தமற்றவன் அல்ல. அவனின் வசம் இவ்வுலகம் கொடுக்கப்பட்டு உள்ளது...கூடவே அவ்வுலகை நல்ல உலகாக வைத்திருக்கும் கடமையும் தான்.
 
ஒரு அலுவலகத்தில் இத்தனை வருடங்கள்/ நாளுக்கு எட்டு மணி நேரம் என்ற கணக்கின் படி எவ்வாறு நம்மிடம் பொறுப்பினைத் தந்து வேலை/கடமை எதிர்பார்க்கப் படுகின்றதோ, அதனைப் போன்றே நம்முடைய வாழ்க்கையும்/நாளுக்கு 24 மணி நேரங்கள் என்ற கணக்கும் தரப்பட்டு நம்மிடம் கடமைகள் தரப்பட்டு உள்ளன...நம் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டு உள்ளது.

எவ்வாறு அலுவலகத்தில் கடமையை விட நான் என்பது பெரிதான ஒன்று இல்லையோ, அதனைப் போன்று தான் வாழ்க்கையிலும் கடமையைத் தவிர நான் என்ற ஒன்று பெரிது கிடையாது.

இந்நிலையில் நாமிருக்கும் சமூகத்தை மேன்மைப்படுத்துவதும், அதனை அனைவருக்கும் ஏற்ற ஒன்றாக நல்லதொரு சமூகமாக அமைத்து, பயமின்றி மக்கள் அனைவரும் அன்புடன் வாழ வழி செய்து அதனை அடுத்த தலைமுறையினரிடம் தந்து செல்வதே நம்முடைய கடமையாகும்...அதற்கே நமக்கு நேரம் தரப்பட்டு உள்ளது...கொடுக்கப்பட்ட நேரத்தில் எப்படி பணி செய்து நம்முடைய கடமையை செய்வது என்று சிந்திப்பதற்கே நமக்கு அறிவும் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பயத்தின் காரணமாகவோ அல்லது சுயநலத்தின் காரணமாகவோ "நான்" என்ற எண்ணம் மேல் எழுந்து, நிரந்தரத் தீர்வினை அடைய முயலாது தற்காலிக தீர்வினை மட்டுமே நாடினால் அது நாம் நம்முடைய கடமையை தவறியதற்கே சமமானமான ஒன்றாகும்.

அதனை விடுத்து, பயத்தினை ஒழித்து, நாமும் சரி நம்முடைய சமூகமும் நிரந்தரமான தீர்வினைப் பெற்று நலமாக வாழ வழி செய்ய முயல்வதே நம்முடைய கடமையாகும்...அதுனை இலக்காகக் கொண்டே நம்முடைய உதவிகளும் சேவைகளும் இருக்க வேண்டும். இல்லையேல் எதிலும் அர்த்தம் என்ற ஒன்று இல்லவே இல்லை.

"சுயநலக் கருத்தும் சுயநலப் பற்றும் அறவே துறந்து கடமைகளைச் செய்துக் கொண்டு போவது அவசியம். அறிஞன் சமுதாய நன்மைக்காகப் பற்றை ஒழித்து எல்லாக் காரியங்களையும் செய்துக் கொண்டு போவான்..." - பகவத் கீதை. நிற்க

நம்முடைய உலகம் இன்றைக்கு இருக்கும் நிலைக்கு மனிதர்களாகிய நாம் தான் காரணம். எனவே அந்த நிலையினை மாற்றும் மாற்றத்திற்கும் நாமே தான் காரணமாக இருக்க வேண்டும்...வேறு வழியில்லை...அதற்காகத் தான் நமக்கு ஆற்றலும் சிந்திக்கும் திறனும் அதனுடன் காலமும் தரப்பட்டு உள்ளது. நமது ஆற்றல்களை வைத்து நாம் நமக்கு தரப்பட்டு உள்ள இக்கால அவகாசத்தில் சமூகத்தில் என்ன செய்யப் போகின்றோம் என்பதில் தான் நாம் அடங்கி இருக்கின்றோம்.

எளிதான காரியம் அல்ல தான்...!!! இதனை அனைவரும் அறிவர்...!!! காரணம் மனிதனின் மனம் நன்மையை விட தீமையையே எளிதாக நாடுகின்றது...அன்பினை விட பயத்தினையே பெரிதாக உருவகித்துக் கொள்கின்றது.

"நன்மை செய்ய வேண்டும் என்கின்ற விருப்பம் என்னிடத்தில் இருக்கின்றது...நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை...எனவே நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல் விரும்பாத தீமையையே தொடர்ந்து செய்கின்றேன். அந்தப்படி நான் விரும்பாததைச் செய்வது நான் அல்ல...எனக்குள்ளே வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது. ஆனபடியினால் நான் நன்மை செய்ய விரும்புகிற வேளையில், என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு விதி செயல்படுவதைக் காண்கின்றேன். உள்ளான மனிதனுக்கேற்றபடி தேவனுடைய நியாயவிதிகளின் மேல் விருப்பமாயிருக்கிறேன். என்றாலும் என் மனதின் விதிகளுக்கு எதிராக போராடுகிற வேறொரு விதி எனது அவயங்களில் செயல்படுவதைக் காணுகின்றேன்; அது என் அவயங்களில் உண்டாயிருக்கிற பாவ விதிக்குள் என்னைச் சிறைப் படுத்திக் கொள்கின்றது. எவ்வளவு மோசமான மனிதன் நான்! இந்த மரண சரீரத்தில் இருந்து என்னை விடுவிப்பது யார்?" - பவுல் (ரோமர் 7: 18 - 24)

"நான்" என்ற ஒன்றைத் துறந்து செயலாற்றுவது என்பது கடினமான ஒன்று என்பதனை அனைவரும் அறிவர்...காரணம் நமக்குள்ளேயே அப்போராட்டம் மிகப் பெரிய போராட்டமாக ஓடிக் கொண்டே இருக்கின்றது. நம்மை எதிர்த்தே நாம் போராடிக் கொண்டு இருக்கின்றோம். அந்த போராட்டத்தின் காரணமாகத் தான்,

தனி ஒருவனை மட்டுமே கண்டு கொண்டிருந்த காட்டுமிராண்டி நிலையில் இருந்து குடும்பமாக இருந்த நிலைக்கும்,
தன்னையும் தன்னுடைய குடும்பத்தையுமே மட்டுமே கண்டுக் கொண்டிருந்த நிலையில் இருந்து குழுக்களாக மாறிய நிலைக்கும்,
இனக்குழுக்களாக இருந்த நிலையில் இருந்து தேசங்களாக மாறிய நிலைக்கும்,
மன்னராட்சி மாறி மக்களாட்சி வந்த நிலைக்கும் நாம் முன்னேறி இருக்கின்றோம்.
 
இத்தகைய மாற்றங்கள் எளிதாக வந்தவைகள் அல்ல...!!!

இனியும் பல தேசங்கள் என்ற நிலையில் இருந்து மாறி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற 'உலகம் முழுவதும் ஒரே தேசம் ஒரே மக்கள்' என்ற நிலைக்கும் நாம் முன்னேறத் தான் போகின்றோம்...அன்பினை மட்டுமே கொண்டிருக்கும் ஒரு அருமையான சமூகத்தினை நாம் உருவாக்கத் தான் போகின்றோம்.

அந்த மாற்றமும் எளிதாக மலரப் போவதில்லை...!!! இருந்தும் அதற்காகத் தான் நாம் உதவியும் சேவையும் செய்ய வேண்டி இருக்கின்றது.

நம்மிடையேஅன்பும் இருக்கின்றது திறமையும் இருக்கின்றது...அன்பின் அடிப்படையில் நமது திறமைகளை பயன்படுத்தி நாம் இருக்கும் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவது தான் நமது கடமை.

ஆடை இல்லாது கல்வி கற்க முடியாமல் தவிக்கும் மாணவிக்கு ஆடை வாங்கி தருவது என்பது அன்பின் அடிப்படையில் ஒரு செயல். அதே போல் நண்பர்கள் பலரும் ஒன்று சேர்ந்து பல மாணவர்களை படிக்க வைப்பதும் அன்பின் அடிப்படையில் ஒரு செயல்.

இச்செயல்களை குறைகளே கூறவில்லை...!!!

ஆனால் இச்செயல்களோடு கடமையை முடித்து விட்டோம் என்ற மனதிருப்தியினைக் கொண்டு நின்று விடாமல், சமூகத்தை நல்ல சமூகமாக உருவாக்கும் கடமையையும் மேற்கொள்ள முயலுங்கள் என்றே கூறுகின்றோம். நாமும் முயன்று, நம்மால் உதவி பெற்றவரையும் அவரது கடமையை உணரச் செய்து, மாற்றத்திற்காக முயல வைப்பதே கடமை என்கின்றோம்.

நேரம் இல்லை என்று கூறுவதனை விடுத்து, 'நேரம் மட்டுமே நம்மிடம் உள்ளது' என்பதனை உணர்ந்து நமக்கு தரப்பட்டுள்ள திறமைகள் மற்றும் சிந்திக்கும் திறன் ஆகியவற்றின் துணைக் கொண்டு மகிழ்ச்சியுடன் எவ்வாறு நாம் வாழும் சமூகத்தை பயமற்ற நல்லதொரு அன்புச் சமூதாயமாக மாற்ற முடியும் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

நண்பர்கள் பலர் ஒன்று கூடி பிறருக்கு உதவுவது என்பது ஒரு உன்னதமான செயல்...அச்செயலையே நண்பர்கள் அனைவரின் சிந்திக்கும் திறனை பயன்படுத்தி மேலும் சமூகத்திற்கு மாற்றத்தை வர வைக்கும் ஒரு செயலாக மாற்ற முடியாதா?...அத்தகைய ஒரு மாற்றமே இங்கு தேவையாக இருக்கின்றது.

பிறருக்கு உதவ வேண்டும் என்று அன்பு உந்துகின்றது...ஆனால் பயம் அன்பினை கட்டுப்படுத்துகின்றது....இவ்விரண்டு உணர்சிகளின் விகிதங்களில் தான் இன்றைக்கு நம்முடைய உதவிகள் அடங்கி இருக்கின்றன.

பயத்தினை அன்பு வென்ற நிலையில் நிரந்திரத் தீர்வினைக் காணு முயலும் நபர்கள் இருக்கின்றனர்.
அன்பினை பயம் வென்ற நிலையில் இயன்ற உதவியினை மட்டும் செய்துக் கொண்டு இருக்கும் நபர்கள் இருக்கின்றனர்.

நம்முடைய சமூகத்தை மாற்ற நாம் முதலில் வெல்ல வேண்டியது இந்த பயத்தைத் தான்.

எண்ணிப்பாருங்கள், எந்த மாதிரியான சமூகத்தை நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப் போகின்றோம்?

அநாதை இல்லங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் அதிகமாக விடுமுறை தினங்களில் சென்று அங்கே இருப்போருக்கு அன்பினைத் தரும் நபர்கள் அதிகம் இருக்கும் சமூகத்தையா?
 
அல்லது

அநாதை இல்லங்கள்/முதியோர் இல்லங்களே இல்லாது அன்பே குடும்பங்களில் நிலைத்து இருக்கும் சமூகத்தையா?

எதனை நாம் விட்டுச் செல்ல போகின்றோம்...?

ஆம்..கடினம் தான்..அநாதை இல்லங்களுக்கு சென்று உடனடியாக அன்பினை நாடுபவர்களுக்கு அன்பினை தருவது என்பதனை போல் அநாதை இல்லங்களே தேவைப்படாது அனைவரும் அவரவர் குடும்பங்களை அன்பின் வழியே நடத்துவதற்கு வழி வகுப்பது என்பது எளிதான ஒன்று அல்ல தான். நிச்சயம் கடினம் தான்.
 
காரணம் அது மேலோட்டமாக நமது கட்டுப்பாட்டில் இல்லை...பிறரது வாழ்க்கையும் அதில் அடங்கி இருக்கின்றது...இருந்தும் அது தான் நமது இலக்கு. நமது கடமை. (மீண்டும் ஒருமுறை மேலே குறிப்பிட்டுள்ள பகவத் கீதையின் வரிகளை வாசிப்பது நலமாக இருக்கும்)

அக்கடமையைச் செய்யத் தான் அன்பு மிக்கவர்களும் சிந்திக்கும் திறனைப் பெற்றவர்களும் ஒன்று சேர வேண்டி இருக்கின்றது...அவ்வாறு ஒன்று சேர்ந்து நல்லதொரு சமூகத்தை உருவாக்குவதே உண்மையான உதவியாகும்...அதுவே கடமையுமாகும்...!!!

"அவர் (இயேசு) திரளான மக்களைக் கண்ட பொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தோய்ந்து போனவர்களும் உதவியற்றவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, தம்முடைய சீடர்களை நோக்கி : அறுப்பு மிகுதி, தொழிலாளிகளோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எசமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை நோக்கி மன்றாடுங்கள் என்றார்." - மத்தேயு ( 9 : 36 - 38)

உண்மையிலேயே செய்ய வேண்டிய வேலைகள் அதிகமாக இருக்கின்றது...ஆனால் வேலைகளை செய்யத் தான் ஆட்கள் இல்லாத நிலை நிலவுகின்றது.

அந்த வேலைகள் தான் நம்முடைய கடமைகள்...என்ன செய்ய போகின்றோம் நாம்?

வெறும் உதவிகளா? அல்லது கடமைகளா?

நம்புங்கள்...நாம் சராசரிகள் அல்ல...நமது கடமையும் சராசரியல்ல...!!! நாம் என்ன செய்ய போகின்றோம் என்பதில் அடங்கி இருக்கின்றது இவ்வுலகம்.

முற்றும்...!!!

பி.கு:

இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு