முந்தையப் பதிவு

 சூத்திரம் 7: அறியும் தன்மை ஆன்மாவிற்கே

யாவையும் சூனியம் சத்து எதிர் ஆகலின்
சத்தே அறியாது அசத்து இலது அறியாது
இருதிறன் அறிவுளது இரண்டலா வான்மா.

பதவுரை:

சத்து எதிர் : என்றும் நிலைத்திருக்கும் ஒன்றாகிய கடவுளின் முன்னர்

யாவையும் சூனியம் ஆகலின் : எல்லாப் பொருள்களும் அழிந்து ஒழியக் கூடியவைகளே ஆதலால்

சத்தே அறியாது : நிலைத்திருக்கும் ஒன்றாகிய கடவுளே முற்றறிவு உடையவனாதலின் இன்னொன்றை அறிய வேண்டிய அவசியமற்றவன்

அசத்து இலது அறியாது : அழியக்கூடிய பொருளுக்கு அறியுந் திறன் இல்லை. ஆகவே இது எதையும் அறியாது.

இரண்டலா : என்றும் நிலைத்திருக்கும் முற்றறிவுடைய சத்தாகிய கடவுளும் முழுவதும் அழியக்கூடிய அறிவற்ற அசத்தாகிய உலகப் பொருளும், ஆகிய இரண்டும் அல்லாமல்

ஆன்மா : குறை அறிவும் அழியாமையையும் உடைய சதசத்தாகிய ஆன்மா

இருதிறன் அறிவுளது : சத்தாகிய கடவுளையும், அசத்தாகிய உலகப் பொருளையும் அறியக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளது.

பொருள்:

என்றும் நிலைத்திருக்கும் ஒன்றாகிய கடவுளின் முன்னர் எல்லாப் பொருட்களும் அழிந்து ஒழியக் கூடியவைகளே. ஆதலால் நிலைத்திருக்கும் ஒன்றாகிய கடவுளே முற்றறிவு உடையவனாகையால் இன்னொன்றை அறிய வேண்டிய அவசியமற்றவன். அழியக் கூடிய பொருளுக்கு அறியுந் திறன் இல்லை. ஆகவே அது எதையும் அறியாது. என்றும் நிலைத்து இருக்கும் முற்றறிவுடைய சத்தாகிய இறைவனும், முழுவதும் அழியக்கூடிய அறிவற்ற அசத்தாகிய உலகப் பொருளும் அல்லாமல், குறை அறிவும் அழியாமையும் உடைய சதசத்தாகிய ஆன்மா, சத்தாகிய கடவுளையும் அசத்தாகிய உலகப் பொருளையும் அறியக் கூடிய தன்மையைக் கொண்டு உள்ளது.

கடவுளுடைய அருள் இல்லாவிட்டால் கடவுளை உணரவோ, உணர்ந்து தொழவோ ஆன்மாவிற்கு இயலாது என்று கூறும் பொழுது, ஆன்மா எப்படிப்பட்டது? என்ற கேள்வி எழுகின்றது. அதே நேரத்தில், தன்னுடைய அருளால் ஆன்மாவிற்கு உணர்த்தும் கடவுள் எப்படிப்பட்டவன்? என்ற கேள்வியும் எழுகின்றது. கடவுள் என்றும் அழியாது நிலை நிற்கும் சத்துப் பொருள் ஆவான். அவன் இன்றி எப்பொருளும் நிலை பெறுவதில்லை. என்றும் நின்று நிலைக்கும் கடவுள் பிறிதொன்றை அறிய வேண்டிய அவசியமற்ற, முழுவதும் அறியும் முற்றறிவு உடையவன் ஆவான்.

சத்தாகிய கடவுள் அல்லாத மற்ற உலகப் பொருள்கள் அழியக்கூடியவை. பிறிதொன்றை அறியும் திறனும் அற்றவை. ஆகவே, அவை அசத்துப் பொருள்களாகும். சத்தாம் கடவுளும், அசத்தாம் உலகப் பொருளும் ஆகிய இரண்டும் அல்லாத மூன்றாவது பொருள் ஒன்று உண்டு. அது கடவுளைப் போல் முழு அறிவுடையதாக அல்லாமல் குறை அறிவு உடையதாகவும், உலகப் பொருளைப் போல் அழியக் கூடியதாக அல்லாமல் அழியாமையை உடையதாகவும், சத்தும் அசத்தும் அல்லாமல் இரண்டன் தன்மைகளையும் கொண்டது சதசத்தாகிய ஆன்மா ஆகும். இந்த ஆன்மாவே சத்தாகிய கடவுளையும், அசத்தாகிய உலகப் பொருளையும் அறியக்கூடிய தன்மையைக் கொண்டது. எனவே கடவுள் வந்து உணர்த்தினால் உணர்வுப் பெறக் கூடிய தன்மை ஆன்மாவிற்கு உண்டு.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு