இணையத்தில் நீண்ட நாட்களாகவே ஒரு தகவல் உலாவிக் கொண்டு இருக்கின்றது.ஆங்கிலேயர்களில் ஒருவரான திரு.மெக்காலே அவர்கள் எவ்வாறு இந்திய மக்களின் கல்வி முறையை மாற்றியதன் மூலம் இந்திய மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்து விட்டு அவர்களை அடிமைகளாக்கினார் என்பதனைக் கூறும் ஒரு தகவல் தான் அது. அதனை அடிப்படையாகக் கொண்டே இன்று 'மெக்காலே வழிக் கல்வி' என்ற சொல்லும் பரவலாக பயன் படுத்தப்படும் சொல்லாக மாறிக் கொண்டு தான் வருகின்றது. இப்பொழுது அந்தச் செய்தியினைத் தான் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.

மெக்காலே அவர்கள் பெப்ருவரி 2 ஆம் தேதி 1835 ஆம் வருடத்தில் கூறியதாக கூறப்படும் கருத்துக்கள் இவை தான்.

"இந்திய தேசத்தின் அனைத்து எல்லைகளுக்கும் நான் பயணித்து விட்டேன். என்னால் ஒரு திருடனையோ அல்லது பிச்சைக்காரனையோக் கூடக் காண முடியவில்லை. அப்படிப்பட்ட செல்வமும் தகுதி வாய்ந்த மக்களும் குண நலன்களும் இந்நாட்டினில் திகழ்கின்றன. இந்நிலையில் நாம் இந்த மக்களின் முதுகெலும்பான ஆன்மீகம் மற்றும் கலாச்சாரப் பண்பாட்டினை உடைக்கவில்லை என்றால் நம்மால் இவர்களை ஆள முடியாது. எனவே நான் முன் மொழிவது என்னவென்றால் இவர்களின் பழமையான கல்வி முறையினை மாற்றி அவர்களுக்கு ஆங்கிலம் கற்பது தான் சரியான ஒன்று, அது அவர்களுக்கு மிக்க நலனைத் தரும் என்றுக் கூறி அந்நிய முறையினை அவர்கள் சிறப்பான ஒன்றாக கருதச் செய்ய வேண்டும். அவ்வாறு நாம் செய்தோம் என்றால் அம்மக்கள் அவர்களின் சுய மரியாதையை இழந்து, அவர்களின் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றினை மறந்து நமக்கு கீழ் வாழத்தலைப்படுவர். அப்பொழுது நாம் இத்தேசம் முழுமையும் நமக்குக் கீழ் கொண்டு வந்து விடலாம்."

இந்தத் தகவல் தான் இணையத்தில் உலாவிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் இத்தகவலினைக் கண்ட பொழுது ஒரு சிறிய சந்தேகம் எழத் தான் செய்தது. காரணம் மெக்காலே அவர்கள் இந்தியாவிற்கு வந்ததாக சொல்லப்படும் காலம் கி.பி 1835. அக்காலத்தில் இந்திய மக்களுள் பெரும்பான்மையானோர் தீண்டத்தகாதவர்களாகவும் தாழ்த்தப்பட்டவர்களாகவும் கல்வி அறிவு மறுக்கப்பட்டு மூட நம்பிக்கைகளில் உலாவிக் கொண்டு இருந்தவர்களாகவும் வாழ்ந்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் ஒருவர் வந்து இந்திய மக்கள் அனைவரும் நன்றாக வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர் என்று கூறினால் அது உண்மையான நிலவரத்திற்கு முரணான கருத்தாக அமையும். எனவே இந்நிலையில் தான் மெக்காலே அவர்கள் உண்மையிலேயே மேலே கூறிய கூற்றினைக் கூறினாரா இல்லையா என்பதனை நாம் காண வேண்டி இருக்கின்றது.

அவ்வாறுக் கண்டோம் என்றால் அவர் அவ்வாறுக் கூறவில்லை என்றே வரலாறு நமக்குக் காண்பிக்கின்றது.

மெக்காலே 2/2/1835 ஆம் தேதி அன்று இந்தியாவினைப் பற்றி பேசி இருக்கின்றார். கல்வி முறையைப் பற்றியும் பேசி இருக்கின்றார். ஆனால் மேலே கூறிய கருத்தினை அவர் கூறி இருக்கவில்லை. அன்றைய நிலையில் இந்தியாவில் நிலவிய சூழலினை முன்னேற்ற அவர் பார்வையில் அவர் அவரது கருத்துக்களைக் கூறி இருக்கின்றார். அவற்றுள் சிலவற்றினை இங்கே நாம் காண்பது நலமாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

1) அன்றைய ஆங்கிலேய அரசு சமசுகிருதம் மற்றும் அரேபிய மொழி ஆகியவற்றினை படிக்கும் மாணவர்களுக்கு மானியம் வழங்கிக் கொண்டு வந்தது. அதாவது அம்மொழிகளைப் படிக்கும் மாணவர்கள் அரசிடம் இருந்து பணத்தினைப் பெற்றுக் கொண்டு அம்மொழிகளைப் படித்துக் கொண்டு வந்தனர். அதனை தேச மொழிகளைப் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாகவே அது கண்டது. ஆங்கிலம் கற்க விரும்பிய மாணவர்களோ பணத்தினைச் செலுத்தி ஆங்கிலம் கற்றுக் கொண்டு வந்தனர். மேலும் சமசுகிருதம் மற்றும் அரேபிய மொழி மற்றும் இலக்கியங்கள் படித்த மாணவர்கள் அவர்கள் படிக்கும் காலம் முடிந்தப் பின் அரசிடம் 'தாங்கள் படித்த படிப்பிற்கு வேலை இல்லை எனவே அரசு தங்களுக்கு வேலையினைத் தர வேண்டும்' என்று விண்ணப்பித்த நிலையும் இருந்து வந்து இருக்கின்றது.

இந்நிலையில் தான் மெக்காலே அவர்கள் "எதற்காக சமசுகிருதம் மற்றும் அரேபிய மொழிகளுக்கு நாம் மானியம் வழங்க வேண்டும்?...மானியமும் தருகின்றோம் பின்னர் அதனைப் படித்த மாணவர்களுக்கு நாம் தான் வேலையும் தர வேண்டி இருக்கின்றது. அவர்கள் படிக்கும் படிப்பால் தெளிவான பயன் என்று ஒன்றுமே இல்லாத பொழுது எதற்காக அரசாங்கப் பணத்தினை விரயம் செய்ய வேண்டும்?. மேலும் அம்மொழியின் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் பதிக்கப் பெறும் நூல்களும் நூலகத்தில் சேர்ந்த வண்ணமே இருக்கின்றனவே ஒழிய அவற்றைப் படிப்போரும் எவரும் இலர்...இந்நிலையில் எவரும் படிக்காத நூல்கள் ஆயிரம் இருந்தால் என்ன பத்தாயிரம் இருந்தால் என்ன...நாம் எதற்காக பயன் இல்லாது எவரும் படிக்காத நூல்களை அச்சுப் பதித்துக் கொண்டே இருக்க வேண்டும்?" என்றுக் கூறி அம்மொழிகளுக்கு அரசு வழங்கிக் கொண்டிருந்த மானியத்தினை நிறுத்த வலியுறுத்தி இருக்கின்றார்.

2) அம்மொழிகளுக்கு செலவளிப்பதற்கு மாற்றாக உலகம் முழுவதும் பரவி இருந்த ஆங்கிலத்தையும் அதுக் கொண்டு இருந்த அறிவியல், மருத்துவம் போன்ற விஞ்ஞானத்தையும் மக்களுக்கு மத்தியில் கொண்டு சென்று அறிவை வளர்பதற்கு உதவ பயன் படுத்த வேண்டும் என்றுமே அவர் கூறி இருக்கின்றார். நிற்க

இங்கே அவர் கூறி இருக்கும் கருத்திற்கும் அவர் கூறியதாக கூறப்பட்டு இருக்கும் கருத்திற்கும் தொடர்பு ஏதேனும் உள்ளதா?

அவர் சமசுகிருதம் கற்க சிலர் பெற்று வந்த மானியத்தை நிறுத்தி இருக்கின்றார். சமசுகிருதத்தினை இந்தியாவில் கற்பவர்கள் பெரும்பாலும் யாராக இருப்பர்? அதுவும் கி.பி பதினெட்டாம் நூற்றாண்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எவர் சமசுகிருதத்தினை கற்று இருப்பர்? பொது மக்களா அல்லது பிராமணர்களா?

பிராமணர்கள் தான். பொது மக்களுக்குத் தான் கல்விக் கற்கவே அன்று உரிமை இல்லையே. பின்னர் அவர்கள் எங்கனம் போய் சமசுகிருதம் கற்பது. இந்நிலையில் சமசுகிருதம் பெற்றுக் கொண்டு வந்த மானியத்தினை நிறுத்துவது என்பது சில பிராமணர்களை பாதிக்கும் ஒரு செயலாகவே அமையுமே அன்றி ஒட்டுமொத்த இந்தியர்களையும் பாதித்த ஒரு விடயமாக அமையாது.

மேலும் இந்திய மொழிகளைப் பற்றிய அவர் கொண்டு இருந்த கருத்திலேயும் நாம் குறைக் கூறுவதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை. அவர் வந்து கண்ட பொழுது இந்திய மக்கள் எந்த நிலையில் இருந்தனரோ அதனை அடிப்படையாக வைத்துத் தான் அவர் அவரது கருத்தினைக் கூறி இருக்கின்றார்.

அன்றைக்கு இந்திய மக்களுக்கே இந்திய வரலாறு முழுமையாக தெரிந்து இருக்குமா என்பது கேள்விக்குறியே? அவர்களது மொழியின் பெருமை வரலாறு போன்றவற்றை அறியாது அறியாமையில் மூடிக் கிடந்த ஒரு சமூகம் தான் அன்று இம்மண்ணில் வாழ்ந்துக் கொண்டு இருந்தது. தமிழின் வரலாறோ...தமிழர்களின் வரலாறோ...இராச இராச சோழன் போன்ற அரசர்களைப் பற்றியோ அன்று தமிழர்களுக்கு தெரிந்து இருக்குமா என்பதே சந்தேகம் தான். காமராஜர் போன்றவர்கள் வந்து ஐம்பது ஆண்டுகள் ஆனப் பின்னரும் நமக்கு நம்முடைய வரலாறு முழுமையாகத் தெரியாத பொழுது அடிமையாகக் கிடந்த அக்காலத்தில் என்ன தெரிந்து இருக்கும்?

நமக்கே ஒன்றும் தெரியாத பொழுது எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயனுக்கு என்ன தெரிந்து இருக்கும்? ஒன்றும் தெரிந்து இருக்காது. அதன் அடிப்படையிலேயே அவன் பேசி இருக்கின்றான். அவ்வளவே!!!

எனவே மெக்காலே அவர்கள் கண்ட பொழுது மக்கள் மூட நம்பிக்கைகளில் உலாவிக் கொண்டு இருந்து இருக்கின்றனர்...அதில் இருந்து அவர்களை வெளிக் கொணர ஆங்கிலம் உதவும் என்றே கருதி அவர் அவரதுக் கருத்தினை வெளி இட்டு இருக்கின்றார். அதைத் தவிர வேறு காழ்புணர்ச்சி இருப்பதாகப் படவில்லை. நிற்க.

"அட என்னங்க...ஆங்கிலேயனுக்கும் ஆங்கிலத்துக்கும் போய் இப்படி வக்காலத்து வாங்கி ஒரு பதிவ போட்டு இருக்கீங்க?...அந்நிய மோகத்தில் இருந்து வெளியேறி நம்முடைய மக்கள் நம்முடைய செல்வங்களையும் பெருமைகளையும் அறிந்துக் கொள்வது நல்லது தான...அப்படி இருக்கும் பொழுது எதுக்காக இப்படி ஒரு பதிவு" என்று நிச்சயமாய் நண்பர்கள் சிலர் எண்ணக் கூடும்.

அந்நிய மோகத்தில் இருந்து விடுபட்டு நாடும் மக்களும் உண்மையாக முன்னேற வேண்டும்...உண்மையான வரலாற்றையும் அறிவையும் அவன் மொழியின் சிறப்பையும் மக்கள் அறிந்துக் கொண்டு வாழ வேண்டும் என்ற கருத்தில் சிறிதளவு கூட மாற்றுக் கருத்துக்கள் என்னிடம் கிடையாது. அப்படி இருக்க இந்த பதிவை எழுதியதற்கு காரணம்....ஒரு சூழ்ச்சி!!!

ஆம்...ஒரு சூழ்ச்சி தான். இன்று மெதுவாக நம்முள், இந்தியாவும் இந்திய மக்களும் தாழ்ந்த நிலைக்கு காரணம் மொகலாயர்கள் படையெடுப்பும் ஆங்கிலேயர்களின் படையெடுப்பும் தான் என்ற ஒரு கருத்து மெதுவாக கட்டமைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அவர்கள் வரும் முன் இந்தியா மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் அவர்கள் தான் இந்தியாவினை ஒன்றுமில்லாது ஆக்கி விட்டனர் என்ற கருத்துக்களும் வெகுவாகப் பரப்பப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

உதாரனத்திற்க்கு மெக்காலே கூறியதாக பரப்பப்பட்ட கருத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன்...பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் பாலாரும் தேனாறும் ஓடியதாம்...அதனை ஆங்கிலேயன் வந்து கெடுத்து விட்டானாம் என்பதனைப் போல் அக்கருத்து இருக்கின்றது. ஆனால் உண்மையில் நிலைமை அப்படியா இருந்தது?

பார்க்கத் தகாதவர்களாக, தீண்டத் தகாதவர்களாக, தாழ்த்தப்பட்டவர்களாக, கல்வி அறிவு இல்லாதவர்களாக மக்களை ஒடுக்கி வைத்து இருந்தது யார்? ஏன் அதனைக் கூற மறுக்கின்றனர். மனு நூல் என்று ஒன்றைக் கூறி மக்கள் தாழ்த்தப்பட்டு இருப்பது இறைவன் வகுத்தது என்றுக் கூறி மக்களை ஒடுக்கியவர்கள் ஏன் இன்று "ஆம்...அது இறைவன் வகுத்தக் காரியம் தான்...இறைவனின் காரியத்தை நாங்கள் செய்தோம்...இனியும் செய்வோம்..." என்று உரிமைப் பாராட்ட முன் வர மாட்டேன்கின்றார்கள்? ஏன் அந்த நிகழ்வுகளை மறைத்து ஆங்கிலேயனையும் இசுலாமியரையும் எதிரிகளாக சித்தரிக்க முயல வேண்டும். மேலும் சமசுகிருதத்திற்கு வழங்கப் பட்ட மானியத்தை எதிர்த்ததற்காகவா மெக்காலேவை இங்கே வம்பிற்கு இழுத்து பொய்யான தகவலை பரப்பி இருக்கின்றனரா என்றும் நாம் சிந்திக்கத் தான் வேண்டி இருக்கின்றது.

அது தான் சூழ்ச்சி.

அடுத்தவனை எதிரி என்றுக் காட்டுவதன் மூலம் நம்மை உத்தமன் என்றுக் காட்டிக் கொள்ளலாம்....பறித்த குழிகளை மூடியும் கொள்ளலாம். அதற்குத் தான் சிலர் முயன்றுக் கொண்டு இருக்கின்றனர். அதனால் தான் நாம் இத்தகைய பதிவுகளை எழுத வேண்டி இருக்கின்றது.

அந்நிய மோகம் நீங்க வேண்டும், மக்கள் உண்மையிலேயே தெளிவடைந்து சுதந்திரம் பெற வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்துக்கள் சிறிதும் இல்லை. அது நமது கடமை...காலத்தின் தேவையும் கூட.

ஆனால் அதனை நிறைவேற்ற பொய்கள் நமக்குத் தேவை இல்லை. பொய்கள் என்றுமே உதவுவதும் இல்லை. மெய்யான தத்துவங்கள் பலவற்றினைக் கொண்டு நீண்ட நெடிய வரலாற்றினோடு தமிழ் தாய் எங்களுக்கு வழி காட்டிக் கொண்டு இருக்கின்றாள். மெய்யின் துணைக் கொண்டே நாம் வெல்வோம்.

உண்மை நம்மை விடுவிக்கும்...!!!

பி.கு:

மெக்காலேவின் முழு உரையினைக் காண இந்தச் சுட்டியினை அழுத்தவும்.
மெக்காலே உரை

10 கருத்துகள்:

பகிர்வுக்கு நன்றி

அற்புதம்

உமது கணக்குப் படி இந்தியா தரித்திரம் பிடித்திருந்தது, ஒன்னுமேயில்லை என்றே வைத்துக் கொள்வோம். அப்புறம் எதற்காக வெள்ளைக் காரன் இங்கே வந்தான்? இந்தியாகாரனுக்கு ஷூ போட்டுக் கொள்ள கத்துக் கொடுத்து அதுக்கு பாலீஷ் போட்டு பிழைக்கலாம்னா?

என்ன கொடுமை சரவணா இது?

@Jayadev Das

//உமது கணக்குப் படி இந்தியா தரித்திரம் பிடித்திருந்தது, ஒன்னுமேயில்லை என்றே வைத்துக் கொள்வோம். அப்புறம் எதற்காக வெள்ளைக் காரன் இங்கே வந்தான்? இந்தியாகாரனுக்கு ஷூ போட்டுக் கொள்ள கத்துக் கொடுத்து அதுக்கு பாலீஷ் போட்டு பிழைக்கலாம்னா?//

இந்தியாவில் அனைத்தும் இருந்தது தோழரே...ஆனால் வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன்னர் அவை அனைத்தையும் வேறொரு கூட்டம் கொள்ளை அடித்து இங்கே மக்களை அடிமைப் படுத்தி வைத்து இருந்தது. அதை மறைக்கத்தான் இன்று வெள்ளைக்காரர்கள் மட்டுமே எதிரிகள் என்பதனைப் போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்க முயன்றுக் கொண்டு இருக்கின்றனர் அவர்கள்.

நீங்கள் சொல்வது சரியே. இது ஒரு சூழ்ச்சியான தகவல் பரப்பும் செயல். இதை வெளிநாடுகளிளிருந்து (குறிப்பாக பிரிட்டன் ,அமரிக்கா) ஒரு கூட்டத்தினர் பரப்பி வருகின்றனர்.மெக்காலே கொண்டுவந்த கல்வி முறை அப்போது இருந்த உயர்சாதியினரின் குருகுல கல்விமுறைக்கு சாவுமணி அடித்ததால்தான் இத்தனை ஆவேசம்.வெறும் ஜோசியத்தையும் செத்துப்போன சமஸ்கிருத்ததையும் புராண பொய்களையும் கல்வி என்ற பெயரில் கற்பித்துக்கொண்டு வந்தபோது வெள்ளைக்காரன் ஆங்கிலத்தையும் அறிவியலையும் கணிதத்தையும் கற்றுக்கொடுத்தால் அதுவும் "கீழ்சாதி" மக்களுக்கு. அவனுக்கு கோபம் வராமலா இருக்கும்?இத்தனை காலங்கள் வெள்ளைக்காரன் கல்வி முறையிலேயே நன்றாக படித்துவிட்டு இன்டர்நெட் யுகத்தில் புராண பெருமை பேசுகிறார்கள் சில மதவெறியர்கள் இதற்க்கு நாட்டுப்பற்று என்று ஒரு பூசிமெலுகள்.
வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு மட்டுமா வந்தான்? அவன் ஆப்ரிக்காவுக்கும் சென்று அங்கே எதியோப்பியா, சோமாலியா,போன்ற நாடுகளையும் அடிமைபடுத்தி வைத்திருந்தான். ஆஸ்திரேலியா,தென் அமேரிக்கா போன்ற இடங்களுக்கும் போனவன்தான்.இந்தியாவில் மட்டும்தான் பாலும் தேனும் ஓடியதா? அடித்து உதைத்து போராடி பெற வேண்டிய விடுதலையை பிச்சை கேட்டு பெற்ற நாம் இத்தனை உணர்ச்சிவசப்படலாமா?

காரிகன், //அடித்து உதைத்து போராடி பெற வேண்டிய விடுதலையை பிச்சை கேட்டு பெற்ற நாம் இத்தனை உணர்ச்சிவசப்படலாமா//
ஏன் என்னாச்சு.அதெல்லாம் முதலே போடாம லாவம் பாக்குற வேலை.ஜைனமும்,பௌத்தமும் போதித்த அகிம்சையை தனத்தாக்கிக் கொண்டவர்கள் கத்தியின்றி ரத்தமின்றி வாங்கி தந்த சுதந்திரத்தை இப்படியெல்லாம் சொல்லக்கூடாது.

////இந்தியாவிற்கு வந்ததாக சொல்லப்படும் காலம் கி.பி 1835. அக்காலத்தில் இந்திய மக்களுள் பெரும்பான்மையானோர் தீண்டத்தகாதவர்களாகவும் தாழ்த்தப்பட்டவர்களாகவும் கல்வி அறிவு மறுக்கப்பட்டு மூட நம்பிக்கைகளில் உலாவிக் கொண்டு இருந்தவர்களாகவும் வாழ்ந்துக் கொண்டு இருந்தனர்////

உண்மை தான்... அருமை பதிவு......

இப்போதைய சூழ்நிலையில் தமிழ் படித்தால் கதைக்கு உதவாது. அப்ப எல்லா தமிழ் மீடியம் பள்ளிகளை ஆங்கில வழிக்கல்வியா மாத்திடலாம்.

பாலாறும் தேனாறும் ஓடீடும்...

இவ்வளவு பேசும் பார்பான் , வெறும் சமஸ்கிருதம் மட்டும் படித்து கொள்ளட்டுமே..
பாலாறும் தேனாறும் ஓடுகிறதா என்று பார்க்கலாம் ...
பேசகூட ஆட்கள் இல்லை ..

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு