மனு நூல்...அல்லது மனு தர்ம சாஸ்திரம்.

இன்றைக்கு நம் நாட்டினில் 'தர்மம் காக்கவும்...தர்மம் தழைக்கவும்...' என்று பல இந்துத்துவ அமைப்புகள் முழங்குவது எல்லாம் மேலே நாம் கண்டுள்ள மனு தர்மத்தையே ஆகும். அப்படிப்பட்ட ஒரு நூலினைப் பற்றியே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. காரணம் இறைவன் மனிதர்களை நான்கு வர்ணமாகப் படைத்தான் என்று வேதத்தில் ஒரு வரியோடு நின்று விட்ட ஒரு விடயத்தினைப் பற்றி விரிவாக பேசுவது இந்த நூலே ஆகும். பிறப்பால் இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர் என்று கூறும் நூலினை நாம் சாதி ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிப் பார்க்கும் பொழுது நிச்சயம் காணத் தானே வேண்டி இருக்கின்றது.

"அந்த பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம் தோள் தொடை பாதம் இவைகளில் இருந்து உண்டான பிராமண, சத்திரிய, வைசிய சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கு மறுமைக்கு உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்" - மனு அத்தியாயம் 1 - 87

"நாலு வருணத்தாருக்குள் பிராமணன் சத்திரியன் வைசியன் இம்மூவரும் இரண்டு விதமாகப் பிறப்பதனால் துவிஜாதிகள் என்று சொல்லப்படுகின்றார்கள். சூத்திரனுக்கு உபநயம் முதலியன இல்லாததால் ஒரு சாதியாகவே இருக்கின்றான். இந்த நான்கு வருணத்தார் தவிர ஐந்தாவது வருணத்தான் கிடையாது." மனு அத்தியாயம் 10 - 4

பிரம்மா மனிதர்களை நான்கு வர்ணங்களாகப் படைத்து அவர்களுக்கென்று தனித்தனி கர்மங்களை வகுத்து வைத்தார் என்றும் இவர்களைத் தவிர வேறு வருணத்தார் கிடையாது என்றக் கருத்தினை நாம் மேலே உள்ள மனு தர்ம வசனங்களால் அறிந்துக் கொள்கின்றோம். ஆனால் அக்கருத்துக்கள் மட்டுமே அங்கே கூறப்பட்டு இருக்கவில்லை...கூடுதலாக பிராமண, சத்திரிய மற்றும் வைசிய வருணத்தினைச் சார்ந்தவர்கள் துவிஜாதிகள் என்றுக் குறிக்கப்பட்டு இருக்கின்றது. சூத்திரன் துவிஜாதி அல்ல என்றும் கூறப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் துவிஜாதி என்றால் என்ன என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

துவிஜாதி என்றால் இருப்பிறப்பாளர்கள் என்றே, அதாவது இரண்டு முறை பிறந்தவர்கள் என்றே அர்த்தம் வரும். ஒரு மனிதன் ஒருமுறைப் பிறப்பான் அதில் நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை...ஆனால் இங்கே இரண்டு பிறப்பு பிறக்கின்றார்கள் என்றே கூறுகின்றார்களே அது ஏன்? மேலும் அது என்ன இரண்டாம் பிறப்பு என்றக் கேள்விகள் இங்கே இயல்பாக எழும் தானே. அக்கேள்விகளுக்கு விடையினைத் தேடினால் மனு தர்மத்திலேயே விடை கிட்டுகின்றது.

"துவிஜனுக்கு முதற்பிறப்புத் தாயாலும், இரண்டாவது உபநயநத்தாலும் மூன்றாவது எக்கிய தீட்சையிலாலும் உண்டாகின்றது என்று வேதத்திற் சொல்லப்படுகின்றது." மனு அத்தியாயம் 2 - 169

அதாவது இரு பிறப்பாளர்கள் எனப்படும் முதல் மூன்று வருணத்தார் முதல் பிறப்பினை தாயிடம் இருந்து பெறுகின்றனர் என்றும் இரண்டாவது பிறப்பு உபநயம் செய்வதன் மூலமாகவும் பெறுகின்றனர் என்றுமே நாம் மேலே உள்ள வசனத்தின் மூலம் அறிந்துக் கொள்ளுகின்றோம். மேலும் மூன்றாவது பிறப்பினைப் பற்றிய ஒரு குறிப்பும் அங்கே இருக்கின்றது, ஆனால் அது இப்போதைக்கு நமக்குத் தேவை இல்லாததால் அதனைப் பற்றி நாம் காண வேண்டியதில்லை.

இது வரை நாம் கண்ட விடயங்களின் படி உபநயம் செய்வதால் மட்டுமே பிராமண, சத்திரிய, வைசிய வருணங்களைச் சார்ந்தோர் இருப்பிறப்பாளர்கள் என்று அறியப்படுகின்றனர் என்றும் உபநயம் செய்ய தடை உள்ளதால் சூத்திர வருணத்தார் ஒருப் பிறப்பினை மட்டுமே உடையவராய் இருக்கின்றனர் என்றும் நாம் அறிந்து இருக்கின்றோம். இந்நிலையில் தான் மற்றுமொரு மனு தர்ம வசனத்தைக் காண வேண்டி இருக்கின்றது.

"உபநயம் செய்துக் கொள்வதற்கு முன்னால் இவன் சூத்திரனுக்கு ஒப்பானவன். ஆனால் மாதா பிதா கர்மத்தில் மாத்திரம் அதற்கு வேண்டிய வேத மந்திரத்தைச் சொல்லலாம்." மனு அத்தியாயம் 2 - 172

உபநயம் செய்தால் இருப்பிறப்பாளர்கள் ஆகின்றனர் என்றுக் கண்டோம் சரி...ஆனால் இங்கே அவன் உபநயம் செய்யும் வரை, அது பிராமணனாக இருக்கட்டும்...சத்திரியனாக இருக்கட்டும்...வைசியனாக இருக்கட்டும் , அவர்கள் சூத்திரர்களாகவே காணப்படுவர் என்றே கூற்று வருகின்றதே.

இதன் படி பார்த்தோம் என்றால் தாயின் மூலம் வரும் முதல் பிறப்பில் அனைவரும் சூத்திரர்களாகவே பிறக்கின்றனர் என்றே பொருள் வருகின்றதே. சூத்திரனாக பிறந்த ஒருவன் உபநயம் செய்துக் கொள்வதன் வாயிலாகவே இரு பிறப்பாளன் ஆகின்றான் என்றால்,

பிரமன் படைக்கும் போதே பிராமணன் ஆக படைத்தான் சத்திரியனாகப் படைத்தான் என்ற கூற்றுகள் அடிப்பட்டுப் போய் விடுகின்றதே. ஏனென்றால் ஒருவன் உபநயம் செய்யாமல் இருந்தால் அவன் மனு தர்மத்தின் கூற்றின் படி இறுதி வரை சூத்திரனாகவே தானே இருப்பான்.

மேலும் சூத்திரத்தன்மையோடு இருப்பவர்கள் உபநயம் செய்வதன் மூலம் உயர் நிலையை அடைகின்றனர் என்றால் இவர் தான் உபநயம் செய்ய வேண்டும் என்றும் இவர்கள் எல்லாம் செய்யக் கூடாது என்று எதன் அடிப்படையில் யார் பிரித்துக் கூற முடியும்? ஏனெனில் முதற் பிறப்பில் அனைவரும் சூத்திரர்களாகத் தானே பிறக்கின்றனர். அவர்களுள் எவ்வாறு பிறப்பின் அடிப்படையில் வேற்றுமைகளைக் காண முடியும்?

மேலும், பிராமண சத்திரிய வைசிய சூத்திர வர்ணங்கள் ஆகிய நான்கு வர்ணங்களைத் தவிர வேறு வர்ணங்கள் இல்லை என்றே மனு தர்மத்தில் வருகின்றது...ஆனால் பஞ்சமர் என்ற வர்ணம் கடவுளில் இருந்து வாரா ஒரு வர்ணமாக இன்று அறியப்படுகின்றது. நிற்க.

இப்பொழுது ஏன் இந்த முரண்பாடுகள் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் சில விடயங்களை நாம் அறிந்துக் கொள்வது நலமாக இருக்கும்.

1) இப்பொழுது இலங்கை ஈழத் தமிழர்களின் மேல் படை எடுத்துச் சென்று போரில் வெற்றிப் பெற்று இருக்கின்றது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் அங்கே அடிமையாக இருப்பர். சிங்களவர்களின் சட்டங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும். ஆனால் சிங்களவர்களின் சட்டம் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் மேல் செல்லுபடியாகாது. சரி தானே.

அதைப் போல் தான் கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவின் வடக்குப் பகுதியை பிடித்த ஆரியர்கள் அவர்கள் பிடித்த பகுதியை ஆரிய வர்த்தம் என்று அழைத்துக் கொண்டு, அப்பகுதிகளில் வாழ்ந்த இந்தியர்களை அடிமைகள் என்ற பொருள்படி சூத்திரர்கள் என்றுக் குறித்து சட்டம் இயற்றினர். அச்சட்டம் தான் மனு தர்மம்.

அதாவது ஆரியர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த இடத்தில் வாழ்ந்த மக்களுக்காக ஆரியர்களால் இயற்றப்பட்ட ஒரு சட்ட நூல் தான் மனு தர்மம். அச் சட்டத்தின் படி,

பிராமணர்கள் - ஆரிய பிரோகிதர்கள்
சத்திரியர்கள் - போர் செய்யும் ஆரியர்கள்
வைசியர்கள் - வணிகம் செய்யும் ஆரியர்கள்

என்ற ஆரியப் பிரிவுகள் உயர்ந்ததாகவும்....அங்கே வாழ்ந்து வந்த இந்திய மக்கள் அனைவரும் அடிமைகள் என்று குறிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட சூத்திர பிரிவு தாழ்ந்ததாகவும் அமைக்கப்பட்டது.

அவர்களின் ஆட்சிக்கு அடிபணியாத மற்ற தேசங்களில் ஆரியர்களின் செல்வாக்கும் செல்லாது அவர்களின் சட்டமும் செல்லாது என்பதனால் அவர்கள் பஞ்சமர் அல்லது எதிரிகள் என்று குறிக்கப்பட்டனர்.

2) இருப்பிறப்பாளர்கள் என்றச் சொல் ஆன்மீகச் சான்றோர்களைக் குறிக்கும் சொல். முதல் பிறப்பு மானுடப் பிறப்பு...இரண்டாம் பிறப்பு ஆன்மீகப் பிறப்பு. இதற்கும் உபனயதிற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. (இருப்பிறப்பினைப் பற்றி நாம் மற்றதொரு பதிவில் காண்போம்)

இந்தியாவின் மேல் படை எடுத்து வந்த ஆரியர்கள், இந்தியாவில் நிலவிய பல வழக்கங்களைக் கைப்பற்றிக் கொண்டு அதன் அர்த்தங்களை காலங்களில் மாற்றிக் கொண்டனர்.

சற்று புதிதான/புதிரான கூற்றுகளாகத் தானே இருக்கின்றன. இப்பொழுது இவற்றைப் பற்றித் தான் நாம் விரிவாகக் காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்....!!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு