எனது சுற்றத்தினன் டோடோரோ: (My Neighbour Totoro)

சில நேரங்களில் உங்களை அறியாமலேயே சில படங்களினுள் மூழ்கித் தொலைந்து போய் இருக்கின்றீர்களா? என்றோ நாம் வாழ்ந்துக் கடந்த நாட்களை நினைவுகளில் தேடிக் கொண்டு இருக்கும் பொழுது ஏதேனும் ஒரு படம் நாம் தொலைத்த அத்தருணங்களை, நாம் வாழ்ந்து மகிழ்ந்த அத்தருணங்களை மீண்டும் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவதனை உணர்ந்து இருக்கின்றீர்களா? இல்லையா...பிரச்சனை இல்லை...இந்தப் படத்தினைப் பாருங்கள் ஒரு வேளை என்னைப் போல் நீங்களும் இப்படத்தினுள் தொலைந்துப் போகக் கூடும்...!!!

சட்சுகி மற்றும் மெய் ஆகிய இரு சிறுமிகள் தங்களின் தந்தையோடு ஒரு புதிய ஊருக்கு வருவதில் இருந்தே இக்கதை தொடங்குகின்றது. அச்சிறுமிகளின் தாயார் உடல்நலக் குறைவுக் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்க, அவருக்கு அருகாமையிலேயே இருப்பதற்காக புதிய ஊருக்கு தனது மகள்களைக் அழைத்துக் கொண்டு வருகின்றார் பேராசிரியரான டாட்சுவோ குசக்காபே அவர்கள். புதிய வீடு, புதிய ஊர், புதிய மக்கள் என்று அனைத்தும் புதிதாக இருந்த போதும் சட்சுகிக்கும் அவளின் தங்கைக்கும் அவை அனைத்தும் விரைவில் பிடித்துப் போய் விடுகின்றன...பின்னே பரந்து விரிந்து இருக்கும் வயல்கள், அவற்றின் குறுக்கே ஓடும் நீரோடைகள், எங்கு காணிலும் இயற்கையின் எழில் ஓவியங்கள்...இவை போதாதென்று அவர்களை தங்களின் வீட்டினில் ஒருவராகவே எண்ணும் சுற்றத்தினர் என்று அனைத்தும் அருமையாக இருக்கும் பொழுது யாருக்குத் தான் அங்கே வாழப்பிடிக்காதுப் போய் விடும்.

புதிய வீட்டினை சுற்றிப் பார்ப்பதும், தங்களின் தந்தைக்கு உரிய உதவிகளைச் செய்வதம் ஒருவருடன் ஒருவர் விளையாடுவதும் என்றே பொழுதினை கழிக்கின்றனர் சட்சுகியும் மெய்யும். அவர்களின் தாயார் மருத்துவமனையில் இருப்பதினால் வீட்டினில் கூடுதல் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு கூடுதலாக 'அக்கா என்பவள் இன்னொரு அம்மாவுக்கு சமம்' என்பதனைப் போன்றே தனது தங்கையையும் மிக்க கவனத்துடன் கவனித்து வருகின்றாள் சட்சுகி.

இவ்வாறு நாட்கள் நகர சட்சுகியின பள்ளியும் ஆரம்பமாகின்றது. பள்ளிக்குச் செல்ல தொடங்குகின்றாள் சட்சுகி. மெய்க்கு வருத்தம் தான் ஆனாலும் பெரிய கவலையில்லை...மாலையில் அவளின் அக்கா திரும்பி வந்து விடுவாள்...அதுவரை பொழுதினைப் போக்க இருக்கவே இருக்கின்றது தோட்டம்...அதனில் விளையாடிக் கொண்டிருந்தால் நேரம் போவதனைக் கேட்கவா வேண்டும். தோட்டத்தினில் அவளாய் விளையாட ஆரம்பிக்கின்றாள் மெய். அப்பொழுது தான் அந்த வினோத மிருகங்களை அவள் காணுகின்றாள்.

இரு சிறிய மிருகங்கள் அவர்களின் தோட்டத்தின் வழியாக ஒரு மூட்டையினில் சில விதைகளை எடுத்துக் கொண்டு சென்றுக் கொண்டு இருக்கின்றன. வினோதமான மிருகங்களாக இருக்கின்றனவே என்று எண்ணியே அவைகளை மெய் துரத்த ஆரம்பிக்க, அந்த மிருகங்கள் அவளிடம் இருந்து தப்பிக்க ஒரு புதரினுள் நுழைக்கின்றன. அவைகளைத் தொடர்ந்து மெய்யும் அப்புதரினுள் நுழைகின்றாள். அப்புதரின் வழியே செல்லும் பாதை அவளை ஒரு பெரிய கற்பூர மரத்தின் அடியே கொண்டு சென்று விடுகின்றது. அம்மரத்தின் மீது அவ்விலங்குகள் ஏறி ஓட மெய்யும் தொடர்ந்து துரத்துகின்றாள்...அவ்வாறுத் துரத்துகையில் அம்மரத்தில் உள்ள ஒரு பொந்தினில் தவறி விழுந்தும் விடுகின்றாள்.

எழுந்துப் பார்க்கும் மெய்க்கு ஆச்சர்யம் காத்து இருக்கின்றது...அங்கே அவள் துரத்திச் சென்ற விலங்குகளைப் போன்ற ஒரு மிகப் பெரிய விலங்கு உறங்கிக் கொண்டு இருக்கின்றது. அதன் மேல் ஏறி அதனுடன் பேசி அதற்கு பெயரினை டோடோரோ என்றுச் சூட்டியப் பின் களைப்பில் அம்மிருகத்தின் வயிற்றின் மேலேயே உறங்கிப் போகின்றாள் மெய்.

அதே நேரம் பள்ளி முடிந்து வந்த சட்சுகி மெய்யினை காணாது வீடு முழுவதும் தேடுகின்றாள். பின்னர் மெய் நுழைந்த புதரின் வெளியே அவளின் தொப்பிக் கிடப்பதனைக் கண்டு சட்சுகியும் அப்புதரின் உள்ளே நுழைகின்றாள். அங்கே புதரின் வழியே செல்லும் பாதையில் சிறு தொலைவில் மெய் உறங்கிக் கொண்டு இருப்பதனைக் கண்டு அவளை எழுப்புகின்றாள் சட்சுகி. எழுந்த மெய் அவளின் அக்காவிடம் அவள் கண்ட மிருகம் டோடோரோவினைப் பற்றியும் அந்த மரத்தினைப் பற்றியும் ஆவலுடன் கூறுகின்றாள்...ஆனால் அதனை நம்புவது சட்சுகிக்கு கடினமாக இருக்கின்றது. காரணம் அந்த புதரின் வழியே எந்த ஒரு மரமும் அவள் பார்வைக்குக் காணப்படவில்லை மேலும் மெய்யாலும் மீண்டும் அந்தப்பாதையினை அடையாளம் காட்ட முடியவில்லை. அந்த புதரின் பாதை மீண்டும் மீண்டும் அவர்களின் தோட்டத்திலேயே சென்று முடிந்தது.

"நான் பொய் சொல்லவில்லை" என்று வருத்தத்துடன் மெய் சொல்ல அவளைப் புரிந்துக் கொண்ட அவளின் தந்தை "நானும் சட்சுகியும் உன்னை நம்புகின்றோம் மெய்....ஒருவேளை நீ வன தேவதைகளைப் பார்த்து இருக்கலாம்...அவைகளை அனைவரும் காண முடியாது...அவைகள் யாரைப் பார்க்க விரும்புகின்றனவோ அவர்கள் மட்டுமே அவைகளைக் காண முடியும்...நீ மிகவும் கொடுத்து வைத்தவள் மெய்...உனக்கு வன தேவதைகள் காட்சி அளித்து உள்ளன. வா நாம் அவைகளுக்கு நன்றி செலுத்துவோம்" என்றுக் கூறி தனது இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த வன தேவதைகள் ஆலயத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அங்கே மெய்யின் ஆச்சர்யத்திற்கு அவள் டோடோரோவை சந்தித்த கற்பூர மரம் அங்கே இருந்தது. அதனை மெய் சட்சுகியிடனும் அவர்களின் தந்தையிடனும் கூற சட்சுகி சிறிது வருத்தமடைகின்றாள்..."ஏன் வன தேவதைகள் அவளை வந்துக் காணவில்லை என்றே...". ஆனால் அவளும் நீண்டக் காலம் காத்திருக்க வேண்டி இருக்கவில்லை, ஒரு நாளில் வன தேவதைகள் அவளையும் வந்துப் பார்கின்றன. சட்சுகியும் மெய்யும் வனதேவதைகளின் உதவியோடு அவர்களின் தோட்டத்தினை நன்றாக வளர்க்கத் தொடங்குகின்றனர்.

இவ்வாறு நாட்கள் மகிழ்ச்சியாய் கழிய, சட்சுகியும் மெய்யும் அவர்களின் தாயார் முழுவதும் நலமாகி வீட்டிற்கு வரும் நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கின்றனர்...அப்பொழுது தான் அந்தத் தந்தி அவர்களுக்குக் கிடைக்கின்றது. அவர்களின் அன்னைக்கு திடீர் என்று சிறிது உடல் நலம் குறைந்து விட்டதால் அவரால் வீட்டிற்கு வர இயலாது என்ற விடயம் சட்சுகிக்கு தெரிய வர 'இப்படித்தான் சென்ற முறையும் கூறினார்கள்...எங்களின் அன்னை வீட்டிற்கு வரப் போவதே கிடையாது..அவர்கள் எங்களிடம் பொய் கூறுகின்றார்கள்' என்றே மனம் உடைந்து அழத் துவங்குகின்றாள் சட்சுகி. அக்கா அழுவதனைப் பார்த்த மெய், தங்களது அம்மாவிற்கு ஏதோ நிகழ்ந்து விட்டு இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டே அவளின் அன்னை இருக்கும் மருத்துவமனையை நோக்கி யாரும் அறியாமலேயே ஓட ஆரம்பிக்கின்றாள்.

அச்சிறுமிகளின் தாயாருக்கு என்ன ஆயிற்று? தனியாக மருத்துவமனையை நோக்கிச் சென்ற மெய் என்னவானாள்? போன்ற கேள்விகளுக்கு உணர்வுகள் மிகுந்த ஒரு அற்புதமான பயணமாய் விடை அளிக்கின்றது இப்படம்.

குழந்தைகளுக்கான ஒரு படத்தினை...இல்லைஇல்லை...ஒரு உலகத்தினை உருவாக்க வேண்டும் என்ற இலக்கினைக் கொண்டே இப்படத்தினை எடுத்துள்ளார் இப்படத்தின் இயக்குனர் மியாசாகி. அப்படிப்பட்ட ஒரு குழந்தைகளின் உலகத்தினுள் அனைத்து வயதினரும் ஈர்க்கப்பட்டு விடுவதில் தான் அவரின் வெற்றி அடங்கி இருக்கின்றது. மந்திரமயமான நிமிடங்கள், நம் மனதினுள் ஒளிந்துக் கிடக்கும் சிறுவனை/சிறுமியை மெதுவாய் உயிர்ப்பித்து, நாம் என்றோ சிறுவர்களாய் கடந்து வந்திருந்த வாழ்விற்கே நம்மை மீண்டும் அழைத்துச் செல்கின்றன.

"சிறு வயதில் என் கண்களுக்கு வன தேவதைகள் தென்பட்டன...ஆனால் ஏனோ தெரியவில்லை நான் வளர்ந்ததிற்குப் பின்னர் அவைகள் என் கண்களுக்குப் புலனாகவில்லை" என்றே இப்படத்தினில் ஒரு கதாப்பாத்திரம் கூறுகின்றார். எண்ணிப்பார்த்தால் சரி தான்...சிறுவர்களாக இருப்பவர்களின் உலகம் மிகவும் விசித்திரமானது...ஆச்சர்யங்களும் அதிசயங்களும் நிறைந்தது. ஆனால் அவ்வுலகங்கள் ஏனோ ஒவ்வொரு சிறுவனும் வளர்ந்து விடும் பொழுது மெதுவாய் மறைந்துத் தான் போய் விடுகின்றன. அவ்வுலகங்களை உயிரோடு வைத்துக் கொண்டே வளர்கின்றவர்கள் சிலரே.

அப்படிப்பட்ட ஒரு உலகிற்குத் தான் இங்கே உயிர் தந்து இருக்கின்றனர்...'இது நாம் வாழ்ந்த உலகம்...அதுமட்டுமல்ல நாம் வாழ வேண்டிய உலகும் இது தான்' என்றே இப்படம் நம்மை உணரச் செய்கின்றது. குழந்தைகளின் உலகம் பெரியவர்களின் உலகினைப் போன்று விரைவாக ஓடுவதில்லை...மாறாக அது ஒவ்வொரு நொடியும் வாழ்வினை ரசித்துக் கொண்டே நகரும் ஒரு உலகம்...அதனைப் போன்றேத் தான் இப்படமும்....மெதுவாக வாழ்வின் பொன்னான நொடிகளை, அதன் அதிசயங்களை நம்முன்னே எடுத்து வைத்துக் கொண்டே நகர்கின்றது. அதனிலேயே நாமும் மூழ்கிப் போகின்றோம்....சிறுவர்களாக!!!

குழந்தைகளாக இருப்பது ஒரு வரம் தான்...!!!

பி.கு:

1) இப்படத்தில் உள்ள ஓவியங்கள் அனைத்துமே கைகளாலே வரையப்பட்டவைகள். (ஓவியத்தினில் ஆர்வம் உடையவர்களுக்கு நிச்சயமாய் இந்த ஓவியங்கள் ஆர்வமூட்டக் கூடும்).

பிற திரைப்பட விமர்சனங்கள்:

கத்திக் கை எட்வர்ட் (Edwards Scissor hands)
அன்புடன் ஆசிரியருக்கு (To Sir with love)
மைதானத்தில் தேவதைகள் : (Angels in the outfield )
கனவுலகத்தை தேடி: (Finding Neverland)
பெரிய மீன்: (Big Fish)
உணவு.Inc : (Food.Inc)

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு