"வேண்டும் தனி நாடு...!!!"

1970 களில் பெருன்பான்மையான ஈழத் தமிழர்களின் மத்தியில் இருந்த சிந்தனை இது தான். சிங்களவர்களின் அடக்குமுறை, இளைஞர்களின் எழுச்சி, அமைதியானப் போராட்டங்களின் தோல்விகள் என்றுப் பல காரணிகள் அவர்களை அம்முடிவிற்கு வர வைத்து இருந்தாலும் அவர்களை மேலும் கனவுக் காணவும் தனி நாடுக் குறித்துப் போராடவும் வைத்த மற்றுமொரு நிகழ்வும் இருக்கத்தான் செய்தது.

அது தான் வங்க தேசப் பிரிவினை.

1971 இல் அன்றைக்கு மேற்கு பாகிஸ்தானுக்கும் (இன்றைய பாகிஸ்தான்) கிழக்கு பாகிஸ்தானுக்கும் (இன்றைய வங்காள தேசம்) இடையில் நிகழ்ந்த மோதலில் இந்திரா காந்தியின் தலைமையில் இந்தியா கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவு அளித்து அவர்களுக்கு வங்காள தேசம் என்ற தனி நாட்டினைப் பெற்றுத் தந்து இருந்தது.

அந்த நிகழ்வினைத் தான் ஈழத் தமிழர்கள் ஆர்வத்துடன் கண்டுக் கொண்டு இருந்தனர்...'கண்டீர்களா...இந்தியா வங்காளதேசத்திற்கு விடுதலைப் பெற்றுத் தந்து விட்டது. ஒரு வழியாக வங்காளத்து மக்கள் விடுதலை அடைந்து விட்டார்கள்... இன்று அவர்கள்... நாளை நாம்... ஏன் நடக்காது...நம்முடைய உறவுகள் இந்தியாவில் இருக்கின்றார்கள் தானே... நிச்சயம் நமக்காக அவர்கள் குரல் கொடுப்பார்கள்...இந்தியா நிச்சயம் நமக்கு உதவி செய்யும்...நாமும் வங்காள மக்கள் போல் விரைவில் சுதந்திரம் அடைந்து விடுவோம்...!!!" என்றே அவர்கள் நம்பிக்கையுடன் இந்தியாவினைக் கண்டுக் கொண்டு இருந்தனர்.

இந்தியாவும் அவர்களைக் கண்டுக் கொண்டு தான் இருந்தது. இந்த நிலையில் தான் நாம் அன்றைய உலக அரசியல் நிலவரத்தினை சற்றுக் கண்டு விட வேண்டி இருக்கின்றது.

இந்தியாவினை எடுத்துக் கொண்டோம் என்றால் அதன் வடக்கு எல்லையில் இருக்கும் நாடுகளுடன் நட்புறவுகள் என்று ஏதும் பெரிதாக இல்லை...காரணம் அனைத்து நாடுகளும் ஆசியாவிலே யார் வல்லரசு ஆவது என்ற போட்டியினிலே ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு இருந்தன...அதன் காரணமாக வடக்குப் பகுதியில் யுத்தம் என்பது சர்வ சாதாரணமான ஒரு விடயமாக இருந்து வந்தது.

ஆனால் இந்தியாவின் தெற்குப் பகுதியிலோ அதற்கு முற்றிலும் மாறுப்பட்ட ஒரு சூழலே நிலவி வந்தது. காரணம் மூன்று புறமும் கடல் சூழ்ந்து உள்ள தென்னாட்டின் மீது எவரும் இலகுவில் படை எடுத்து வந்து விட முடியாது. அதன் காரணமாக வட இந்தியாவினை விட தெற்கு இந்தியா மிகவும் பாதுகாப்பானதொன்றாக இருக்கின்றது. தென் இந்தியாவின் மீது தாக்குதல் நிகழ்த்த வேண்டும் என்றால் ஒன்று மாபெரும் கடற்படையோடு வர வேண்டும்...இல்லையெனில் இந்தியாவின் காலின் கீழ் சிறு கண்ணீர்த் துளியினைப் போன்று இருக்கும் தீவான இலங்கையினை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும்.

இது அமெரிக்காவிற்கு தெரியும்...சீனாவிற்கு தெரியும்...பாகிஸ்தானிற்கு தெரியும்...இந்தியாவிற்கும் தெரியும்...!!! அந்த ஒரு காரணத்தினாலேயே தான் அந்நாடுகளுக்கு இலங்கையின் மீது ஒரு கண் இருந்துக் கொண்டே தான் இருக்கின்றது. (இன்றும் கூட பல உலக நாடுகள் இலங்கைக்கு உதவிக் கொண்டு இருப்பதற்கு இது ஒன்று தான் முக்கியமானக் காரணம்)

மேலாக இந்தியா 1970 களிலும் சரி 1980 களிலும் சரி ஒரு தீவிர சோவியத் ஆதரவு நாடாகத் தான் இருந்தது...சோவியத் ஆதரவு என்றாலே அமெரிக்க எதிர்ப்பு என்பது அங்கே இயல்பாகவே வந்து விடும் தானே. இந்தியா அப்படி ஒரு நாடாகத் தான் இருந்தது அக்காலத்தில்.

அக்காலத்தில் தான் இந்திரா காந்தி இலங்கையினைக் கண்டுக் கொண்டு இருக்கின்றார்...தமிழர்கள் அங்கே தனி நாடுக் கேட்கத் தொடங்கி இருக்கின்றனர்...அவர்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டிலும் குரல்கள் எழும்பத் தொடங்கி உள்ளன. மேலும் இலங்கை அமெரிக்காவிற்கு ஆதரவாக வேறு செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது...அது போதாதென்று பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் வேறு நல்லுறவுகள் இருந்துக் கொண்டே தான் இருக்கின்றது.

இந்திரா காந்தி சிந்திக்கின்றார்..."எந்நேரம் வேண்டும் என்றாலும் இலங்கை இந்தியாவிற்கு எதிராகத் திரும்பும் வாய்ப்புகள் இருக்கின்றன... ஏற்கனவே அமெரிக்கர்களுடனும் பாகிஸ்தானியர்களுடனும் நட்புறவை இலங்கை வளர்த்துக் கொண்டு தான் இருக்கின்றது...இது இந்தியாவிற்கு ஆபத்து. இலங்கையினை நாம் கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும். கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும் என்றால் நாம் அங்கு இருக்கும் தமிழ் மக்களுக்கு உதவிப் புரிய வேண்டும்...இலங்கையில் தமிழர்கள் வலுவாக இருந்தனர் என்றால் அங்கே வேறு நாட்டவர்கள் அவர்களது செல்வாக்கினை எளிதில் நிலை நாட்ட முடியாது... மேலாக ஈழத் தமிழர்களும் சரி இந்தியத் தமிழர்களும் சரி ஒருவருக்கொருவர் துரோகம் செய்ய மாட்டார்கள்... அவ்வாறு இருக்க இந்தியாவின் தெற்குப் பகுதி பாதுகாப்பாக இருக்கும்...கூடுதலாக தமிழகத்தில் இருந்து வேறு ஈழத் தமிழர்களுக்கு உதவிப் புரியுங்கள் என்று கூறிக் கொண்டு இருக்கின்றனர்... இந்நிலையில் ஈழத் தமிழர்களுக்கு நாம் உதவிப் புரிந்தோம் என்றால் இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி தமிழர்கள் மத்தியில் நல்ல பெயரினை எடுத்து விடலாம்...கூடுதலாக சிங்களவர்களையும் கட்டுக்குள் வைத்துக் கொண்டு தெற்குப் பகுதியினை பாதுகாப்பானதாக பார்த்து கொள்ளலாம்...ஒரே கல்லில் இரண்டு மாங்காய்..நமக்கு நல்லது தானே!!!" என்று எண்ணிய வண்ணம் ஈழத் தமிழர்களுக்கு உதவ முன் வருகின்றார் இந்திரா காந்தி.

இந்தியா ஈழத் தமிழர்களுக்கு தன்னுடைய கதவுகளைத் திறந்து வைக்கின்றது..."சுதந்திரத்திற்காக போராடப் போகின்றீர்களா...நல்லது...இன்னின தேதிகளில் உங்களுக்கான பயிற்சி முகாம்கள் இருக்கின்றன...உங்களுக்கான பயணத் திட்டங்கள் இதோ...சரியாக உங்களின் அமைப்பின் உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு வந்து விடுங்கள்..." என்றே இந்தியா தமிழ் ஆயுதப் போராளி இயக்கங்களுக்கு அழைப்பினை விடுக்கின்றது.

உற்சாகமாக தமிழ் போராளி அமைப்புகள் இந்தியாவினுள் பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பிக்கின்றன (ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் அமைப்புகள் பல இருந்தன..விடுதலைப் புலிகள் அப்படிப்பட்ட அமைப்புகளில் இருந்த ஒரு அமைப்பே ஆகும்). இலங்கையோ இந்தியாவினை என்ன செய்வது என்றே எண்ணிக் கொண்டு இருந்தது.

இந்தியாவின் ஆதரவில் ஈழத் தமிழர்களின் போராட்டம் புத்துணர்வுடன்  தொடர்கின்றது....நிச்சயம் நமக்கென்று ஒரு தேசம் நாம் உரிமையுடன் வாழ கிடைத்து விடும் என்று எண்ணியே ஈழத்தில் மக்களும் கனவுகளைக் கண்டுக் கொண்டு இருந்தனர். "அதோ இந்திரா அம்மையார் இருக்கின்றாரே...நமக்கென கவலை...நிச்சயம் நமக்கு சுதந்திரம் கிட்டி விடும்..." என்றே மக்கள் எண்ணிக் கொண்டு இருந்தனர். இந்தியா அவர்களுக்கு உதவி செய்வது வெறும் அரசியல் நோக்கிற்காக மட்டுமே என்பதனை அறிந்திருந்த சில போராளி இயக்கங்களும் இந்திராவின் மேல் மரியாதையை வைத்து இருந்தன. ஆனால் முழுதாய் இந்தியாவினை அவர்கள் நம்பவில்லை.

"இந்தியாவிற்கு நம்முடைய உதவிகள் தேவை...அதனால் நமக்கு அவர்கள் உதவுகின்றனர்....மாறாக நாம் படும் இன்னல்களை எண்ணி அவர்கள் உதவுகின்றனர் என்று நாம் கருத முடியாது...இருப்பீனும் அவர்களுடைய உதவிக்கு நாம் நிச்சயம் நன்றிக் கடன் பட்டவர்களாகத்தான் இருப்போம்...நம்முடைய உரிமைகளுக்கு அவர்களால் பங்கம் வராத வரை" என்ற எண்ணம் அவ்வியக்கங்களுள் இருந்துக் கொண்டு தான் இருந்தது.

இந்நிலையில் தான் இந்திரா காந்தி கொலை செய்யப்படுகின்றார். சிங்களவர்கள் கொண்டாடுகின்றனர்... தமிழர்களோ 'ஐயகோ... ஈழத்தினைப் பெற்றுத் தருவார் என்று எண்ணிய அம்மையார் இறந்து விட்டார்களே...அடுத்து நம்முடைய நிலை என்னவாகும்...இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்...' என்று கவலைக் கொள்ளத் தொடங்கினர்.

இந்தியாவில் இந்திராவினைத் தொடர்ந்து ராசீவ் காந்தி பிரதமராக பதவி ஏற்கின்றார்.

தொடரும்....!!!

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு