நீண்ட நாட்களுக்கு முன்னர் இணையத்தில் உலாவிக் கொண்டு இருந்த பொழுது ஒரு குறிப்பிட்ட செய்தியினைத் தாங்கிக் கொண்டு இருந்த ஒரு படத்தினைக் காண நேர்ந்தது. அந்தச் செய்தியின் அடிப்படைக் கரு இது தான்

"அனைத்து அரசுத் துறைகளிலும் திறமைகள் அடிப்படையில் ஆட்களைத் தேர்ந்து எடுக்காது சாதியின் அடிப்படையில் ஆட்களைத் தேர்ந்து எடுத்து அவர்களுக்கு சலுகைகளும் வழங்குகின்றனர். பிற்படுத்தப்பட்டோருக்கு இத்தனை சதவீத இடங்கள், தாழ்த்தப்பட்டோருக்கு இத்தனை சதவீத இடங்கள் என்று வேலைகளை சாதிகளின் அடிப்படையில் வழங்குகின்றனர். இத்தகைய நடைமுறையை கிரிக்கெட் விளையாட்டிலும் அரசு நடைமுறைப்படுத்தலாமே...இந்திய அணியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இத்தனை இடங்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு இத்தனை இடங்கள் என்று இடங்களை வழங்கி அவர்களுக்கு ஏற்ப கிரிக்கெட் ஆட்டத்தின் விதிமுறைகளையும் மாற்றலாமே. தாழ்த்தப்பட்டவர் ஒரு ஓட்டம் எடுத்தால் அதற்கு நான்கு ஓட்டங்கள் வழங்கலாம்...பிற்படுத்தப்பட்டோர் ஒரு ஓட்டம் எடுத்தால்  இரு ஓட்டங்கள் வழங்கலாம்...இவ்வாறு இந்திய கிரிக்கெட் அணியின் சட்டங்களையும் மாற்றலாமே...திறமைக்குத் தான் இந்நாட்டிலே மதிப்பு கிடையாதே" என்பதே அக்கருத்தின் சாரம்.

இட ஒதுக்கீட்டை தாக்குவதாக அமைந்து இருக்கும் இக்கருத்தினை விப்ரோ நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி கூறியதாகவே இணையத்தில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அது மெய்யா என்பது எனக்குத் தெரியவில்லை...மெய்யாக இருப்பீனும் அக்கருத்தினை கூறியவரைப் பற்றி காணவோ அல்லது விமர்சனம் செய்யவோ நமக்கு எந்த ஒரு தேவையும் இல்லை. நமது இலக்கு அவர்கள் கூறியதாக கூறப்படும் கருத்தே ஆகும். இட ஒதுக்கீட்டை கிரிக்கெட் விளையாட்டிலும் கொண்டு வர வேண்டியது தானே என்று நக்கலாக கூறப்பட்டு இருக்கும் கருத்தினைப் பற்றியே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது... கூடவே கிரிக்கெட் விளையாட்டினைப் பற்றியும் தான்.

இன்றைய தேதியில் இந்தியாவில் உள்ள மக்கள் பலருக்கு விளையாட்டு என்றாலே அது கிரிக்கெட் மட்டுமே. கிரிக்கெட் விளையாட்டுக்கு அத்தகைய வரவேற்பு...விளம்பரம்...மோகம் மக்களின் மத்தியில் இருக்கின்றது.  இத்தகைய சூழலில் கிரிக்கெட் விளையாட்டினைப் பற்றியோ அல்லது அந்த விளையாட்டு வீரர்களை பற்றியோ நாம் மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் கூற ஆரம்பித்தால் இந்திய மக்களால் 'தேச விரோதி..தேச பக்தி இல்லாத அற்பப் பதர்..' என்றும் இன்னபிற வாழ்த்துரைகளிளாலும் சிறப்பிக்கப்படுவது நிச்சயம். ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாது நாம் சில விடயங்களைக் கூறியாக வேண்டிய நிலை நமக்கு இருக்கத் தான் செய்கின்றது. சரி  இப்பொழுது நம்முடைய கருத்துக்களைக் காணலாம்...

இந்திய கிரிக்கெட் அணியில் நிச்சயமாக இட ஒதுக்கீட்டினை அரசு கொண்டு வந்தாக வேண்டும் என்பதே நமது முதன்மையான கருத்து. வில்லங்கமான கருத்தாகப் படுகின்றது தானே. ஆனால் இந்தக் கருத்தினை இப்போதைக்கு நடைமுறைப்படுத்த முடியாது. ஏனென்றால் எனது இந்தக் கருத்தில் சில பிரச்சனைகள் இருக்கின்றன.

முதல் பிரச்சனை,

இந்திய கிரிக்கெட் அணி என்ற ஒரு அணி உண்மையிலேயே நம் நாட்டில் கிடையாது. பிசிசிஐ (BCCI) என்ற தனியார் நிறுவனத்தின் அணி தான் இன்று இந்திய அணி என்ற பெயரில் விளையாடிக் கொண்டு இருக்கின்றது. மற்றபடி இந்திய அரசுக்கும் அந்த அணிக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.

இரண்டாவது பிரச்சனை,

அரசு நிறுவனங்களில் மட்டுமே இட ஒதுக்கீட்டினை அரசு அமல்படுத்த முடியும். தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டினை கொண்டு வரும் சட்டத்தினை அரசாங்கம் இன்னும் இயற்றவில்லை. ஆகையினால் பிசிசிஐ தேர்ந்து எடுக்கும் கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீட்டினை இந்திய அரசால் கொண்டு வர முடியாது. நிற்க.

இப்பொழுது சில... இல்லை இல்லை பல கேள்விகளும் மாற்றுக் கருத்துக்களும் உங்களின் மனதில் நிச்சயம் தோன்றி இருக்கும். அவற்றிக்கு நான் விடையினைக் கூற வேண்டும் என்றால் நாம் சில விடயங்களைத் தெளிவாகப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

௧) இந்திய அணி என்றால் என்ன?

இந்திய தேசத்து அணி என்றால் இந்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியான விளையாட்டுத் துறையின் கீழ் அவை வர வேண்டும். அரசாங்கமே விளையாட்டு வீரர்களையும் அணிகளையும் தேர்வு செய்யும். அவர்களுக்கு உரிய ஊதியங்கள் மற்றும் இன்ன பிற சலுகைகள் ஆகிய அனைத்தையும் அரசே கவனித்துக் கொள்ளும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைய அரசாங்கக் கல்லூரிகளை எடுத்துக் கொள்ளுங்கள்... அவற்றின் அனைத்து செயல்பாடுகளும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்... அத்தகைய கல்லூரிகளையே நாம் அரசுக் கல்லூரிகள் என்று ஏற்றுக் கொள்வோம். மாறாக தனியார் கல்லூரிகளை நாம் அரசாங்க கல்லூரிகள் என்று அழைக்க முடியாது. அவ்வாறே இந்திய விளையாட்டு அணிகளிலும் எந்த விளையாட்டுகளில் அனைத்து பொறுப்புகளும் அரசின் வசம் இருக்கின்றனவோ அந்த விளையாட்டு அணிகளே இந்திய அணிகள் ஆகும். மாறாக எந்த ஒரு தனியார் நிறுவனமோ தனது அணியினை இந்திய அணியாக கூறுவது இயலாது... அது சரியான ஒன்றாகவும் இருக்காது.

௨) அப்படி என்றால் பிசிசிஐ என்பது தனியார் நிறுவனமா?

ஆம். பிசிசிஐ என்பது தனியார் நிறுவனமே. அதனை அந்த நிறுவனமே கூறியும் இருக்கின்றது. சமீப காலமாக இந்திய அரசு கிரிக்கெட் விளையாட்டை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் பிசிசிஐ தனது பண பலத்தையும் மற்ற அரசியல் செல்வாக்கினையும் வைத்துக் கொண்டு அரசுக்கு பிடி கொடுக்காமல் ஆடிக் கொண்டி இருக்கின்றது. அதாவது அரசின் சலுகைகளை அந்த தனியார் நிறுவனம் பெற்றுக் கொள்ளுமாம் ஆனால் அரசின் கீழ் அது வராதாம். இதுவே பிசிசிஐ இன் நிலை.


௩) அப்படி என்றால் பிசிசிஐ இன் சார்பாக விளையாடும் வீரர்கள் இந்திய விளையாட்டு வீரர்கள் இல்லையா?
நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகின்றீர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நிறுவனம் உங்களுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு இருக்கும். நீங்கள் இன்ன பணியினைச் செய்ய வேண்டும் அதற்கேற்றார்ப் போல் அந்நிறுவனம் சம்பளம் வழங்கும். அந்நிலையில் நீங்கள் அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் ஆகின்றீர்களே தவிர்த்து அரசாங்க ஊழியர்களாக கருதப்படமாட்டீர். அதனைப் போன்றே தான் பிசிசிஐ இன் கிரிக்கெட் வீரர்களும். அவர்களுக்கு பிசிசிஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் இருக்கின்றது. அவர்கள் பிசிசிஐயிடம் இருந்து சம்பளம் பெற்றுக் கொண்டு அதற்காக விளையாடுகின்றனர். அவர்களைத் தேர்வு செய்வதும் அவர்களுக்கு சலுகைகள் மற்றும் சம்பளம் போன்றவற்றை முடிவு செய்வதும் முழுக்க முழுக்க பிசிசிஐ நிர்வாகத்தின் கையிலேயே இருக்கின்றது. இந்திய அரசு அந்த விடயங்களில் தலையிட முடியாது. பிசிசிஐ அதன் விருப்பத்திற்கேற்ப அணியினைத் தேர்வு செய்துக் கொள்ளும்...விளையாடும்... பணம் பார்க்கும்... அரசாங்கம் வேடிக்கை மட்டுமே பார்க்கலாம்!!! இந்நிலையில் அந்த வீரர்கள் பிசிசிஐயின் வீரர்கள் ஆகின்றனரே தவிர்த்து இந்திய வீரர்கள் ஆக மாட்டார்கள். நிற்க.

இப்பொழுது இரு கேள்விகள் எழலாம்...!!!

ஒன்று - அட என்னங்க, அரசாங்கத்தின் கையில் இருக்கும் மற்ற விளையாட்டுத் துறைகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன என்று காணுகின்றீர்கள் தானே? ஒரு துறையிலும் பெரிய சாதனைகள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த விளையாட்டின் வீரர்கள் எங்கோ ஒரு மூலையில் பெயரும் இல்லாது பிழைக்க வழியும் இல்லாது இருக்கின்றனர். இந்நிலையில் நன்றாக இருக்கும் கிரிக்கெட் விளையாட்டையும் அரசின் வசம் தந்து விட்டு அதையும் நாசமாக்கச் சொல்லுகின்றீர்களா? ஒரு விளையாட்டாவது நன்றாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா? அரசாங்கம் தேர்வு செய்தால் தான் அவன் இந்திய வீரனாக ஆகின்றானோ...அப்படி என்றால் அரசாங்கம் திறமை இல்லாதவர்களை எல்லாம் சேர்த்து ஒரு அணியை உருவாக்கும்... அதனை இந்திய அணி என்று ஏற்றுக் கொள்வீர்... ஆனால் திறமையான வீரர்களை கொண்டு ஒருவன் தனியாக அணியினை அமைத்தால் அதனை இந்திய அணி என்று நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்? அப்படித் தானே...!!!

பதில்: அரசாங்கம் என்பது மக்கள் தேர்ந்தெடுத்த/ மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பினை மக்கள் கேள்வி கேட்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால் தனியார் நிறுவனங்கள் என்பன அவ்வாறு இல்லை. அவர்களை மக்கள் கேள்விக் கேட்க முடியாது. இன்றைய நிலையில் பிசிசிஐ முழுக்க முழுக்க தமிழர்களை மட்டுமே கொண்டு ஒரு அணியினை அமைத்தாலும் அதனை எதிர்த்து எவரும் கேள்வி கேட்க முடியாது. அவர்கள் திறமையின் அடிப்படையில் அணியினைத் தேர்வு செய்யலாம், மொழியின் அடிப்படையில் தேர்வு செய்யலாம், சாதியின் அடிப்படையிலும் தேர்வு செய்யலாம்...அது அவர்களின் விருப்பம். அவற்றை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அந்நிலையில் ஒரு தனியார் நிறுவனம் அதன் விருப்பதிற்கேற்ப தேர்வு செய்யும் ஒரு அணியினை இந்திய நாட்டின் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு அணியாக நாம் கருத முடியாது. ஏனெனில் அந்த அமைப்பினை குறித்து நாம் கேள்விகளோ அல்லது அவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கங்களோ நாம் எழுப்பவும் கோரவும் முடியாது. எனவே மக்களின் பங்கு சிறிதும் இல்லாத தனியார் அமைப்புகள் தேர்வு செய்யும் அணியினை நாம் எக்காரணம் கொண்டும் மக்கள் அனைவரையும் குறிக்கும் இந்திய நாட்டு அணியாக ஏற்றுக் கொள்ள முடியாது. திறமை இல்லாதவர்களை அரசாங்கம் தேர்ந்து எடுத்தால் அதனை சுட்டிக் காட்டி கேள்விகளை கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது. ஆனால் அதே உரிமை தனியார்களிடத்து செல்லுபடியாகாது.

இரண்டு - பிசிசிஐ இன் அணி இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அதனை ஏன் ஊடகங்கள் இந்திய அணி என்று கூறுகின்றன... இந்திய அரசும் ஏன் அதனை மெளனமாக வேடிக்கைக் கண்டுக் கொண்டு இருக்கின்றது?

இந்த கேள்விக்கும் சரி முதல் கேள்வியில் நான் பதில் கூறாது விட்ட பகுதியான 'அரசாங்கத்தின் கையில் இருக்கும் மற்ற விளையாட்டுத் துறைகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன என்று காணுகின்றீர்கள் தானே? ஒரு துறையிலும் பெரிய சாதனைகள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்த விளையாட்டின் வீரர்கள் எங்கோ ஒரு மூலையில் பெயரும் இல்லாது பிழைக்க வழியும் இல்லாது இருக்கின்றனர்' என்பதற்கும் ஒரே விடை.

அரசியல்!!!

இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால்,

பார்ப்பன‌ அரசியல்!!!

ஆம். பார்ப்பன‌ அரசியலே மற்ற விளையாட்டுத் துறைகள் இந்திய நாட்டில் வளராது இருப்பதற்கும், கிரிக்கெட் இவ்வளவு பெரிய விளையாட்டாக வளர்ந்து நிற்பதற்கும் காரணம் ஆகும்.

"ஆரம்பிச்சிடீங்களா...இதுக்கும் பார்ப்பன‌ன் தானா பழி போடுவதற்கு கிடைத்தான்" என்று நண்பர்கள் சிலர் இந்நேரம் பேச ஆரம்பித்து இருப்பர். இந்நிலையில் நாம் வெறும் குற்றச்சாட்டுகளை மட்டுமே வைத்தோம் என்றால் நம்மை 'இவன் பார்ப்பன‌ர்களை குறை சொல்வதையே குறியாக வைத்து இருக்கின்றான்... சாதிகளை யாரும் பார்க்காத இக்காலத்திலும் சாதியினைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான்' என்று பழியினை நம் மீது திருப்பி விடுவர். எனவே நாம் குற்றச்சாட்டுகளோடு சில ஆதாரங்களையும் வைக்க வேண்டி இருக்கின்றது. அதற்கும் சில விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது.

தொடரும்...!!!

3 கருத்துகள்:

ம்ம். புதிய தகவல் எனக்கு. இப்ப்போது பதிவுகளில் நல்ல தெளிவும் முன்னேற்றமும் தெரிகிறது. அப்ப இந்தியா வெற்றி, இந்தியா அபாரம், இந்தியா அசத்தல், இந்தியா படுதோல்வி. இந்திய வீரர் சாதனைன்னும் போட்டு உசுப்பேத்தறதெல்லாம் பொய்யா ?

//இப்ப்போது பதிவுகளில் நல்ல தெளிவும் முன்னேற்றமும் தெரிகிறது//

இந்த வரிகளுக்கு மன்னிக்க உங்களை வேறொருவர் என்று எண்ணியதால் அப்படிச் சொல்லி விட்டேன்.

////இப்ப்போது பதிவுகளில் நல்ல தெளிவும் முன்னேற்றமும் தெரிகிறது//

இந்த வரிகளுக்கு மன்னிக்க உங்களை வேறொருவர் என்று எண்ணியதால் அப்படிச் சொல்லி விட்டேன். //

பிரச்சனை இல்லைத் தோழரே ... :)

//அப்ப இந்தியா வெற்றி, இந்தியா அபாரம், இந்தியா அசத்தல், இந்தியா படுதோல்வி. இந்திய வீரர் சாதனைன்னும் போட்டு உசுப்பேத்தறதெல்லாம் பொய்யா ? //

ஒரு தனியார் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஒரு விளையாட்டினை எவ்வாறு இந்திய நாட்டு விளையாட்டாக எடுத்துக் கொள்கின்றார்கள் என்று எனக்கும் புரியவில்லை நண்பரே...!!!

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி :)

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு