நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்தப் பதிவினை எழுதுவதால் இப்பதிவிற்குள் போகும் முன் முன்னர் எழுதிய இந்த இரு பதிவுகளைப் படித்து விட்டு வருவது நலமாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.


சரி இப்பொழுது நமது பதிவிற்கு வருவோம்.

தொண்டை நாடு என்பது இன்றைய தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம், சென்னை, மயிலாப்பூர் ஆகியப் பகுதிகளைக் கொண்டு விளங்கியதே ஆகும். வள்ளுவப் பெருமகனார் மற்றும் முதல் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களான 'பேயாழ்வார்' 'பூதத்தாழ்வார்' மற்றும் 'காரைக்கால் அம்மையார்' போன்றவர்களும் இந்தத் தொண்டை நாட்டில் இருந்தே தோன்றி இருக்கின்றனர். மேலும் ஒளவைப்பாட்டியால் 'தொண்டை நாடு சான்றோர் உடைத்து' என்றும் சிறப்பாக வழங்கப்பட்ட ஒரு நாடாகும் அது. இத்துடன் தோமா இறுதியாக வாழ்ந்து இறந்த இடமாக அறியப்படும் மயிலையும் தொண்டை நாட்டிலேயே அமைந்து இருக்கின்றது.நிற்க.

நம்முடைய பதிவுகளின் படி இந்தியாவில் தோமா ஆற்றிய இறைப்பணியின் காரணமாகத் தான் சைவ வைணவ சமயங்கள் வளர்ச்சிப் பெற்றன என்று சில கருத்துக்கள் நிலவிக் கொண்டு இருக்கின்றன என்றுக் கண்டுக் கொண்டு இருக்கும் பொழுது, தோமா அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தினைச் சுற்றியே முதல் நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி இருப்பது சற்றுச் சிந்தனைக்குரிய விடயமாகத் தான் இருக்கின்றது.

"அட என்னங்க, தோமா இந்தியாவிற்கு வந்ததாக கூறப்படும் ஆண்டோ கி.பி முதல் நூற்றாண்டு...ஆனால் முதல் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்றிய ஆண்டோ கி.பி ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றே கருதப்படுகின்றது. இந்நிலையில் சுமார் நானூறு ஆண்டுகால இடைவெளியில் உள்ள அவர்களை எவ்வாறு ஒன்றிணைக்கின்றீர்கள்?" என்றக் கேள்வி இப்பொழுது இயல்பாகவே எழலாம்.

உண்மைதான் நானூறு ஆண்டுக் கால இடைவெளியில் இருக்கும் மனிதர்களை வெறும் அவர்கள் தோன்றிய இடத்தினை வைத்து மட்டுமே ஒன்றிணைத்துக் கூறுவது சரியானதொன்றாக அமையாது. இந்நிலையில் அவர்களை நாம் ஒன்றிணைத்துக் கூறுவதற்கு மற்றத் தக்கச் சான்றுகள் இருக்கின்றனவா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது. அவ்வாறு சான்றுகள் இருக்கின்றனவா என்று நாம் பின்னர் காண்போம். ஏனெனில் தோமா தமிழகத்தில் மயிலையில் வாழ்ந்த காலம் என்றுக் கூறப்படுகின்ற அதே காலத்தில் அதே ஊரினில் வாழ்ந்த ஒருவர் இப்பொழுது நமக்காகக் காத்துக் கொண்டு இருக்கின்றார்.

அவர் வேறுயாருமில்லை 'தமிழகம் வான்புகழ் அடையக் காரணமாயிருந்த வள்ளுவரே அவர்'.

தோமா மயிலையில் வாழ்ந்து இருந்ததாக கூறப்படும் அதே முதல் நூற்றாண்டில் அதே மயிலையில் இருந்து தோன்றியவர் தான் திருவள்ளுவர். இப்பொழுது, தோமா தமிழகத்தில் வாழ்ந்து இறைக் கருத்துக்களை பரப்பினார் என்றால் அவர் வாழ்ந்த அதே காலத்தில் அதே நகரத்தில் வாழ்ந்த வள்ளுவரும் அக்கருத்துக்களைக் கேட்டு இருக்க வேண்டுமே...அவ்வாறு கேட்டு இருந்தால் அக்கருத்துக்கள் அவரது நூலான திருக்குறளினில் இடம் பெற்று இருக்க வேண்டுமே...அவ்வாறு இடம் பெற்று இருந்தால் தானே தோமா மயிலையில் இறைக் கருத்துக்களைப் பரப்பினார் என்று நாம் கருத முடியும். எனவே இப்பொழுது நாம் திருக்குறளில் தோமா பரப்பிய கிருத்துவின் கருத்துக்கள் யாவேனும் இருக்கின்றனவா என்பதனைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் சற்றுக் காணத்தான் வேண்டி இருக்கின்றது.

பொதுவாக இன்றுவரை வள்ளுவரின் சமயம் குறித்து விவாதங்கள் நீண்டுக் கொண்டேத் தான் சென்றுக் கொண்டு இருக்கின்றன. சிலர் அவரை சமண சமயத்தினைச் சார்ந்தவர் என்றுக் கருதுகின்றனர். சிலர் அவரை சைவ வைணவ சமயத்தினைச் சார்ந்தவர் என்றுக் கருதுகின்றனர். ஆனால் சமீப காலமாக வள்ளுவர் கிருத்துவக் கருத்துக்களைச் சார்ந்தவராக இருக்கலாம் என்றக் கருத்தும் நிலவி வருகின்றது. அவ்வாறு அவர்கள் கருதுவதற்கு திருக்குறளில் கிருத்துவின் கருத்துக்களின் தாக்கம் பல தென்படுகின்றன என்ற எண்ணமே முக்கியமானதொன்றாகும். இப்பொழுது அவர்கள் கூறும் அந்த கிருத்துவின் கருத்துகளின் தாக்கங்கள் என்னென்னவென்று நாம் சற்றுக் காணலாம்.

1) திருக்குறளின் பாயிரம் அமைப்பு:

திருக்குறளின் பாயிரத்தில் நான்கு அதிகாரங்கள் உள்ளன,

1) கடவுள் வாழ்த்து
2) வான் சிறப்பு
3) நீத்தார் பெருமை
4) அறன் வலியுறுத்தல்

பொதுவாக அனைத்து தமிழ் நூல்களிலும் முதலில் இறை வணக்கப் பகுதி இடம் பெறுவது இயல்பு. அதன்படியே திருக்குறளிலும் முதலில் கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரம் வருகின்றது. ஆனால் ஆய்வாளர்களைக் குழப்புவது என்னவென்றால் பாயிரத்தில் கடவுள் வாழ்த்து வர வேண்டியது சரி, ஆனால் ஏன் அதனைத் தொடர்ந்து வான் சிறப்பு என்றும் நீத்தார் பெருமை என்றும் அறன் வலியுறுத்தல் என்றும் மூன்று அதிகாரங்களை வள்ளுவர் பாயிரத்தில் சேர்த்து இருக்கின்றார் என்ற ஒரு கேள்வி தான் அது.

இன்று பெரும்பாலும் 'வான் சிறப்பு' என்றால் மழையைச் சிறப்பிக்கும் அதிகாரம் என்றும் 'நீத்தார் பெருமை' என்பது துறவறம் மேற்கொள்பவர்களை குறிக்கும் அதிகாரம் என்றுமே பொருள் எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆனால் அந்தப் பொருள்கள் முழுமையான அர்த்தத்தினைத் தரவில்லை. காரணம் மழையைச் சிறப்பாக வருணித்து பாயிரத்தில் சேர்க்கும் வழக்கம் நூல் ஆசிரியர்களிடையே இருந்தது இல்லை. சிலர் மழை இல்லாது உலகம் அமையாது அதனால் தான் வள்ளுவர் மழையைச் சிறப்பித்து இருக்கின்றார் என்றும் கூறுவர். ஆனால் சற்றுச் சிந்தித்துப் பார்த்தோம் என்றால் மழை மட்டுமே உலகில் முக்கியமான ஒரு பொருள் கிடையாது, நிலம், காற்று போன்ற மற்ற விடயங்களும் முக்கியமானவைகளே. எனவே ஏன் வள்ளுவர் மழையை மட்டும் சிறப்பித்து வைத்து இருக்கின்றார் என்று ஒரு கேள்வியும் நிலவிக் கொண்டு இருக்கின்றது.

பின்னர், 'நீத்தார் பெருமை' என்ற அதிகாரத்தில் வள்ளுவர் ஏன் தனியாக துறவு மேற்கொள்பவர்களைப் பற்றி எழுத வேண்டும்?... அதான் அறத்துப்பாலில் 'துறவறம்' என்று தனியாக துறவிற்கே ஒதுக்கி இருக்கின்றாரே பின்னர் ஏன் பாயிரத்திலும் அதனைப் பற்றித் தனியாக எழுத வேண்டும்? என்ற ஒரு கேள்வியும் இன்று நிலவிக் கொண்டு இருக்கின்றது.

இந்த நிலையில் தான் சில ஆராய்ச்சியாளர்கள் சில புதிய நோக்கினைக் மேலே கூறியுள்ள அந்த அதிகாரங்களுக்கு வழங்கும் பொழுது நாம் அந்த நோக்கினிலும் சற்றுச் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. இப்பொழுது அவர்கள் கூறும் கருத்துக்களைப் பார்ப்போம். அவர்களின் கூற்றுப்படி,

'வான் சிறப்பு' என்று பாயிரத்தில் வழங்கி இருக்கும் அதிகாரம் மழையைக் குறிப்பதில்லை மாறாக இறைவனின் அருள்/ பரிசுத்த ஆவியினைக்  குறிக்கின்றது மேலும்,

'நீத்தார் பெருமை' என்ற அதிகாரம் துறவறம் மேற்கொள்பவர்களைக் குறிக்காது மக்களுக்காக உயிர் நீத்த இயேசுவைக் குறிக்கின்றது மேலும்,

ஒரே இறைவன் மூன்று நிலைகளில் விளங்குவதினால், பாயிரத்தில் வெறும் கடவுள் வாழ்த்தினை மட்டும் வைக்காது இறைவனின் மற்ற நிலைகளையும் விளக்கும்படி 'வான் சிறப்பு' என்று கடவுளின் சக்தியினைப் பற்றியும் 'நீத்தார் பெருமை' என்று மக்களுக்காக பலியான இறைவனின் நிலையினைப் பற்றியும் வைத்துவிட்டு பின்னர் அத்தகைய இறைவன்  வலியுறுத்தும் அறனை  விளக்க 'அறன் வலியுறுத்தல்' என்ற அதிகாரத்தினையும் சேர்த்து பாயிரமாக வைத்து உள்ளார். இதுவே அவர்கள் கூறும் கூற்று.

ஆனால் வழக்கம் போல எந்த ஒருக் கூற்றினையும் சான்றுகள் இன்றி நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்நிலையில் மேலே கூறப்பட்டுள்ள கூற்றுகளுக்கு சான்றுகளோ அல்லது விளக்கங்களோ இருக்கின்றனவா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

2) வான் சிறப்பு:

பொதுவாக பலரால் இன்று வரை இந்த அதிகாரம் மழையின் சிறப்பினை கூறுவதாகவே எண்ணப்பட்டுக் கொண்டு வருகின்றது. ஆனால் இப்பொழுது இது மழையைக் குறிப்பது அல்ல மாறாக கடவுளின் ஆற்றல்/ பரிசுத்த ஆவியினை குறிக்கும் ஒரு அதிகாரம் என்ற கருத்து சிலரால் எழுப்பப்பட்டு உள்ளது. இக்கருத்தினைப் பற்றி நாம் மேலும் காணும் முன்னர் சில விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது.

i) “கதிரவனை இடமாகக் கொண்ட சிவபிரான் வெம்மையினால் அச்சம் விளைக்கும் தந்தைத் தெய்வமாகக் கருதப்பட்ட போது தண்ணளியுடைய தாய்த் தெய்வத்தின் வடிவம் தண்ணீராகக் கருதப்பட்டது. ஆழமுள்ள தண்ணீரின் நிறம் நீலமாதலின் தாய் தெய்வத்தின் நிறமும் நீலமாயிற்று.” “பாதி ஆணும் பாதி பெண்ணும் ஆகிய சிவ வடிவத்தில் ஆண்பகுதி செந்நிறமாகவும் பெண்பகுதி நீல நிறமாகவும் கொள்ளப்பட்டது.” (அதாவது சிவன் நெருப்பின் தன்மையினால் சிகப்பாகவும்…சக்தி நீரின் தன்மையினால் நீலமாகவும் வழங்கப்பட்டு இருக்கின்றனர்) - கா.சு.பிள்ளை (இதன் மூலம் நாம் இறைவனின் சக்தி நீரின் தன்மையோடு குறிக்கப்பட்டு உள்ளதாக கருத்து இருப்பதினை அறிகின்றோம்.)

ii) “கதிரவனைச் சிவத்திற்கு உவமையாகவும் அவன் ஒளியைச் சக்திக்கு உவமையாகவும் வழங்கிய போது அவ்வொளி பரவிய இடமாகிய விண்ணும் சக்திக்கு பெயராயிற்று. விண்ணு என்ற பெயரே விண்டு எனவும் விஷ்ணு எனவும் மாறிற்று.”

"வியாபக ஆற்றல் ஆண் தன்மையாகக் கருதப்பட்ட பொழுது விண்டு அல்லது விஷ்ணு என்ற சொல் சக்தியின் ஆண்வடிவத்தைக் குறிப்பதாகக் கருதப்பட்டது. அக்கருத்தை உடைய ஆகம சுலோகமும் உண்டு. விஷ்ணுவுக்கும் சிவசக்திக்கும் நீல நிறமே பேசப்படுதல் காண்க.” - கா.சு.பிள்ளை (இதன் மூலம் 'வான்' என்றச் சொல்லே மருவி விஷ்ணு என்று வந்து இருக்கின்றது என்றும் (வான் - விண் - விண்ணு - விண்டு - விஷ்ணு), விஷ்ணுவும் சக்தியும் ஒன்றே என்றும் அவர்களுக்கு நீரின் தன்மையான நீல நிறமே வழங்கப்பட்டு இருக்கின்றது என்பதனையும் அறிகின்றோம்)
 
iii) விவிலியத்திலும் பரிசுத்த ஆவியினை நீரின் தன்மையுடைவராகவே குறிப்பிடப்பட்டு உள்ளது.நிற்க

மேலே உள்ள சில விடயங்கள் மூலமாக இறைவனின் சக்தியை நீரின் தன்மையோடு காணும் போக்கு சமயங்களில் இருக்கின்றது என்றே நாம் அறிய முடிகின்றது. மேலும் சில திருக்குறள் ஆய்வாளர்களின் கருத்துக்களும் வான் சிறப்பு என்பது இறைவனின் ஆற்றல்/ கருணை ஆகியவற்றைக் குறிப்பதாகவே கருதுகின்றனர்.

"இறை வாழ்த்துப் அதிகாரத்தில் கடவுளின் பண்பாற்றல்களை எல்லாம் தொகுத்துரைத்த வள்ளுவர், இந்த வான் சிறப்பு அதிகாரத்தில் வெளிப்படையாகவே மழைச் சிறப்பு மட்டும் கூறுகின்றாரானாலும், உண்மையில் அவர் முதற் பொருள் மழையை வருணிப்பதன்று; கடவுளின் கருணை ஆற்றலை வகுத்துரைப்பதேயாகும்." என்றே பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் அவர்கள் கூறுகின்றார்.

"கடவுளுடைய தண்ணருளைக் குறிப்பதற்கு, மழையே சிறந்த அறிகுறியாகி இருக்கின்றது. மழைச் சிறப்புக் கூறுதல், திருவருட்சக்தி வணக்கங் கூறுதலாக முடிகின்றது" என்றே எம். சுப்ரமணிய பிள்ளை அவர்களும் கூறுகின்றார்.

எனவே வான் சிறப்பு என்பது மழையினைக் குறிக்காது மாறாக இறைவனின் அருட்சக்தியினைக் குறிக்கும் ஒன்று என்றக் கருத்தினை நாம் கருதுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. சரி இப்பொழுது நீத்தார் பெருமையைப் பற்றிக் காணலாம்.

3) நீத்தார் பெருமை:

இது வரையிலும் 'நீத்தார் பெருமை' என்பது துறவறம் மேற்கொண்டவர்களை பற்றிக் கூறும் ஒரு அதிகாரமாகவே கருதப்பட்டு வந்துள்ளது. காரணம் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் அவ்வாறே எழுதி வைத்துச் சென்று உள்ளனர் (அவர்கள் 1000 ஆண்டுகளுக்கு பின்னரே திருக்குறளுக்கு உரை எழுதினர் என்ற விடயமும் இங்கே கருதத்தக்கது). சரி இப்பொழுது நாம் சிலர் 'நீத்தார் பெருமை' என்பது மக்களுக்காக உயிர் நீத்த இறைவனைக் குறிக்கும் அதிகாரம் என்று கூறுகின்றார்கள். அக்கூற்றினைப் பற்றித் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது.

வள்ளுவர் தனது குறளில் தேவை இல்லாது எந்த ஒரு வார்த்தையையோ அல்லது அதிகாரத்தையோ அல்லது கருத்தையோ வைத்தது இல்லை.

குறளுக்கு ஏழு வார்த்தைகள்...அவ்வளவே!!! அந்த ஏழு வார்த்தைகளுள் தான் சொல்ல வந்தக் கருத்தினை கூறி இருக்கின்றார். (ஏழு என்ற எண் திருக்குறள் முழுவதிலுமே சிறப்பாக கையாளப்பட்டு இருக்கின்றது. இதனைப் பற்றி நாம் பின்னர் காண்போம்). இப்பொழுது அவ்வாறு அவர் பயன்படுத்திய ஒரு வார்த்தையைத் தான் நாம் இப்பொழுது காண போகின்றோம்.

'ஐந்தவித்தான்' என்ற வார்த்தையே அது. பொருளில் ஐம்பொறிகளையும் கடந்தவன் என்று விளங்கும் இந்த வார்த்தையினை வள்ளுவர் இரு இடங்களில் மட்டுமே பயன்படுத்தி உள்ளார். ஒன்று கடவுள் வாழ்த்துப் பகுதியில் 'பொறிவாயில் ஐந்தவித்தான்' என்று கூறி உள்ளார், மற்றொன்று 'நீத்தார் பெருமை' பகுதியில் 'ஐந்தவித்தான் ஆற்றல்' என்றுக் கூறி உள்ளார்.

அதாவது ஐந்தவித்தான் என்றச் சொல்லின் மூலம் இறைவனையும் சரி நீத்தாரையும் சரி ஒன்றாகவே குறிப்பிட்டு உள்ளார். இது ஏன் என்று சிந்திக்கத்தக்கதான ஒன்றாக இருக்கின்றது. மேலும் துறவினைக் குறிக்கும் அதிகாரங்களில் அவர் எந்த ஒரு இடத்திலும் ஐந்தவித்தான் என்றச் சொல்லினை பயன்படுத்தி இருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

மேலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆய்வக வெளியீடான 'திருக்குறளும் விவிலியமும்' என்னும் நூல் 'பொறிவாயில் ஐந்தவித்தான்' என்னும் தொடரோ கிருத்துவ இறையியற் கொள்கைக்கே மிக ஏற்புடையதாகும். அங்கு அது எவ்வித இடர்ப்பாடுமின்றிப் பொருந்தும் என்றே கூறுகின்றது.

எனவே கருத்துக்கள் இவ்வாறு இருக்கையில் 'நீத்தார் பெருமை' என்பது மனிதனாக வந்து மனிதர்களுக்காக தன்னுயிர் நீத்த இறைவனைக் குறிக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் நாம் அறிய முடிகின்றது.


மேலும் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் கடவுள் வாழ்த்தை மூவராகிய முதற் கடவுளரை வாழ்த்தும் வாழ்த்தாக கருதுகின்றார். இதுவும் ஏன் என்று நாம் சிந்தித்துப் பார்க்கத்தக்க ஒன்றாக இருக்கின்றது.   மேலே கண்டுள்ள கருத்துக்கள் மூலம் திருக்குறளில் கிருத்துவ கருத்துக்கள் இருக்கலாம் என்ற சிந்தனையும் ஆராய்ச்சிகளும் நம் சமூகத்தில் இருக்கின்றன என்பதனை நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது. இதனைப் பற்றி நாம் இன்னும் விரிவாக காணலாம் ஆனால் அது ஒரு ஆராய்ச்சிப் பதிவாக மாறி விடும் என்பதனால் அதனை இப்பொழுது இங்கே காண வேண்டாம் என்றே எண்ணுகின்றேன்.

இப்பதிவின்படி தோமா மறைந்ததாக அறியப்படும் மயிலையில் அவர் வாழ்ந்த அதே காலத்தில் திருவள்ளுவரும் வாழ்ந்து இருக்கின்றார் என்பதும், தோமாவின் கருத்துக்களின் தாக்கம் திருக்குறளிலும் தென்படுகின்றன என்ற கருத்தும் நிலவுகின்றது என்பதையும் நாம் அறிகின்றோம். நிற்க.

மேலும் சில விடயங்கள் நாம் கவனிக்கத்தக்கவைகளாகவே இருக்கின்றன...

1) திருக்குறளை மொழிப்பெயர்த்து உலகிற்கு வெளிப்படுத்தியவர்கள் கிருத்துவர்கள்.

2) விவிலியத்திற்கு பின்னர் உலகில் அதிக அளவு மொழிப்பெயர்க்கப் பட்ட நூல் திருக்குறளே ஆகும்.

3) அப்படிப்பட்ட ஒரு நூலினை 'தீக்குறள்' என்றும் அதனை படிக்கக் கூடாது என்றும் இந்தியாவில் உள்ள சிலர் கூறியும் இருக்கின்றனர்.

4) உலகப் பொதுமுறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை பஞ்சம சாதியினை சார்ந்தவராக கூறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடரும்...

5 கருத்துகள்:

திருவள்ளுவர் எங்கள் மதத்தை சார்ந்தவரே என்று இந்து மதம், புத்த மதம், சமண மதம், ஜைன மதம் என்று பல மதத்தை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள் அந்த வரிசையில் இப்பொழுது கிறிஸ்துவ மதம் சேர்ந்துள்ளது...

பொதுவாக பார்த்தால் ஏன் திருவள்ளுவருக்கு இவ்வளவு பேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்றால், திருவள்ளுவர் திருக்குறளில் சொல்லி உள்ள கருத்துக்கள் எம் மதத்தை சார்ந்தவையே என்று பெருமை பாராட்டி கொள்ளவே அல்லாமல் வேறொன்றுமில்லை...

அப்படி பார்த்தால் எந்த மதத்திலும் சொல்லாத கருத்துக்களை கூட திருவள்ளுவர் சொல்லி உள்ளார் என்பதே உண்மை...

அவ்வளவு ஏன் கற்பனையில் வரையப்பட்ட அவரது உருவத்திற்கே வேட்டு வைப்பது போல் "வளர்த்தலும், நீட்டலும் தவறு" என்ற குறள் உள்ளது, அதாவது தலை முடியை வளர்த்தாலும், தாடியை நீட்டலும் என்ற குறள் உள்ளது...

சரி திருவள்ளுவர் கடவுளாக குறிப்பிடுபவர் யார் என்று சொன்னால் முதல் அதிகாரம் அதாவது கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் முதல் குறளே அதற்கு சாட்சி...

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

புரிந்தவர்கள் என் கருத்துக்கு விடை சொல்லலாம்...

வள்ளுவர் இந்து, கிறிஸ்து, முஸ்லீம், புத்த, ஜைன மதத்தவரின் பொதுவான கருத்துகளை விளக்கியுள்ளார். திருக்குறள் தனிப்பட்ட மனிதனுக்கோ, மதத்திற்கோ, நாட்டிற்கோ அல்லாமல் நாடு, இனம், மொழி, சமயம் எல்லாவற்றையும் கடந்து மக்களாய்ப் பிறந்த அனைவருக்கும் எக்காலத்திற்கும் இயைந்த கருத்துகளைக் கூறுகிறது.


அனைத்து மதங்களுக்கும் உள்ள திருக்குறள்கள் மற்றும் அதனுடைய விளக்கங்கள்
பார்க்க: http://thoguppukal.wordpress.com/2011/10/05/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

தோமா இந்திய வந்தார் என்பது மதநம்பிக்கையே தவிர வரலாற்று ஆதாரம் ஏதும் இல்லை என்பதே உண்மை.
பார்க்க: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D)

நம் செந்தமிழ் நாட்டில் எவ்வளவோ கவிஞர்களும் புலவர்களும் எல்லா காலங்களிலும்(கி.மு-கி.பி) பல நூல்களை இயற்றி உள்ளனர் அவர்கள் எங்கேயாவது தோமாவை பற்றியோ அல்லது கிறிஸ்துவம் பற்றியோ யாதேனும் குறிப்பிட்டு இருந்தால் கூறுங்கள்...

தோமா என்பவர் வந்திருந்தால் அவர் வள்ளுவரின் காலத்திற்கு பின்பே வந்திருக்ககூடும். அதனால் வள்ளுவரின் செய்யுளில் தோமாவின் கருத்தினை ஏற்ற முயற்சிப்பது முன்னாளில் வைதீக மதம், சைவ மதத்தில் மேற்கொள்ள முயற்சித்த ஆதிக்கத்தை தாங்களும்(கிருத்துவமும்) முயற்சிப்பது போல் தென்படுகிறது. எந்த மதமும் காலத்திற்கேற்ப நல்லதை எடுத்தும் ஒவ்வாததை விடுத்தும் வந்திருக்கின்றன. சைவ வைணவ மதங்களில் புத்த சமண மதங்கள் அரசு உதவியுடன் செய்த தாக்கத்தை விட தோமா என்ற ஒரு மனிதரால் பாரிய மாற்றம் ஏற்பட்டது என்று தாங்கள் கூறுவது நம்பத்தக்கதாக இல்லை.

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு