நேற்று இணையத்தினில் உலாவிக் கொண்டு இருக்கும் பொழுது ஒருச் செய்தியினைக் காண நேர்ந்தது. அந்தச் செய்தியின் சுருக்கம் இதோ...

"தமிழர் கோவில்களை தமிழர்கள் மீட்டெடுப்பது நல்லதே. இதைக் கடவுள் நம்பிக்கையில்லாத 'தீரா விடமான' திராவிட வேடதாரிகள் செய்வது நகைமுரண். எம்மைப் பொறுத்தவரையில் ஆரியர் எதிரி; திராவிடர் துரோகி. தமிழினத் துரோகிகளிடம் நாம் தொடர்ந்து ஏமாற முடியாது. தமிழ்ச்சாதியாக ஒன்றுபட்டுத் தி.க முன்னெடுக்கும் போராட்டத்தை எதிர்க்க ஆயிரக் கணக்கில் நாம் களம் இறங்குகிறோம்." நிற்க.

"கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம்" என்று தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ள போராட்டத்திற்கு எதிராக 'தமிழ் தமிழர் காவல் இயக்கம்' என்ற ஒரு அமைப்பு மேலே உள்ள அறிக்கையை வெளியிட்டு உள்ளதாகவே அந்த செய்தி தெரிவிக்கின்றது. இந்த செய்தியினைப் புரிந்துக் கொள்வதற்கு இன்றைய தமிழக சூழலை சற்று நாம் கவனிக்க வேண்டி இருக்கின்றது.

இன்று தமிழகத்தில் உள்ள நிலவரத்தினை சற்று நின்று கவனித்தாலே ஒரு விவாதம் மிகவும் தீவிரமாக நடந்துக் கொண்டு இருப்பதனை நாம் அறிந்துக் கொள்ள முடியும். "திராவிடம் தான் தமிழை வீழ்த்தியது" என்று ஒரு சாரார் கூறிக் கொண்டு இருக்க மற்றொரு சாரார் "இல்லை...தமிழும் தமிழர்களும் தன்மானத்தோடு நிற்க வழிவகுத்ததே திராவிடம் தான்" என்று கூறிக் கொண்டு இருக்கின்றனர். இந்த விவாதத்தினைப் பற்றி நாம் மேலும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றால் "திராவிடத்தைப்" பற்றியும் "தமிழைப்" பற்றியும் மேலும் சிறிது வரலாற்றினைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் அவற்றை நாம் இங்கே இப்பொழுது காணப் போவதில்லை. காரணம் இப்பதிவின் நோக்கம் மேலே உள்ள செய்தியில் உள்ள விடயங்ளைப் பற்றிப் பார்ப்பதே ஆகும்.

தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் ஒரு போராட்டத்தினை அறிவிக்கின்றது. அதனை தமிழ், தமிழர் காவல் இயக்கம் என்றொரு அமைப்பு எதிர்க்கின்றது. ஏன் அந்த அமைப்பு எதிர்க்கின்றது என்று கண்டோம் என்றால் நமக்கு விடையாய் கிட்டுவது...

௧) கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆன திராவிடர் கழகத்தினர் தமிழர் கோவில் தொடர்பான போராட்டங்களை நடத்துவது சரியல்ல.

௨) திராவிடர்களை நம்பி நம்பி நாம் ஏமாந்து விட்டோம். எனவே தமிழர்களுக்காக திராவிடம் பேசுவோர் போராட வேண்டியதில்லை.

இவையே அவர்கள் முன் வைக்கும் காரணம். மாறாக திராவிடர் கழகத்தினர் போராடும் காரணத்தை, அதாவது "கோவில் கருவறையில் தமிழர்கள் நுழைய வேண்டும்' என்ற காரணத்தை தவறு என்று அவர்கள் சொல்ல வரவில்லை. மாறாக அந்தக் காரணம் சரியான ஒன்றே என்றும் அவர்கள் கூறி இருக்கின்றனர்.

அதாவது போராட்டம் தேவையான போராட்டம் தான்...ஆனால் அதனை தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் முன் எடுக்க வேண்டியதில்லை, அதாவது "தமிழர்களுக்கு தமிழர்களே போராடிக் கொள்வோம்" என்பதே அவர்களின் வாதம்.

சரி இவர்களின் வாதம் சரி என்றே நாம் வைத்துக் கொள்வோம், அப்படி இருந்தால் இவர்கள் எடுத்த முடிவு எவ்வாறு இருந்து இருக்க வேண்டும்...

"தமிழர்களுக்காக நீங்கள் என்ன போராடுவது...நாங்களே எங்களின் போராட்டங்களை முன் எடுத்துக் கொள்வோம்..." என்றுக் கூறி தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் கருவறை நுழைவுக்காக குறித்து இருந்த தேதிக்கு முன்னரே கருவறை நுழைவுப் போராட்டததினை நிகழ்த்தி இருக்க வேண்டாமா? அவ்வாறு நிகழ்த்தி இருந்தால் ஒரே செயலில் இரண்டு வெற்றிகள் பெற்று இருக்க கூடுமே.

௧) கோவிலில் தமிழர்களுக்கு மறுக்கப்படும் நீதியினை நாம் பெற்று இருக்கலாம்.

௨) கோவிலின் உரிமையை நாம் நாமே பெற்று விட்டப் பின் திராவிடர் கழகத்தின் போராட்டம் தேவை இல்லாத ஒன்றாக போய் இருக்குமே... அதாவது 24 ஆம் தேதிக்கு முன்னரே கருவறை நுழைவுப் போராட்டததினை தமிழ் கூறும் இயக்கங்கள் நிகழ்த்தி இருந்தால், அதே போராட்டததினை பின்னர் திராவிடர் கழகம் எடுக்க வேண்டிய தேவை யாது? தமிழர்களுக்காக தமிழர்களே வென்று இருப்போமே.

ஆனால் அதனை விடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் எடுக்கும் போராட்டததினை எதிர்த்து மட்டுமே என்ன பயன் கிட்டப் போகின்றது தமிழர்களுக்கு... கோவில் கருவறையுள் பார்ப்பனர்கள் மட்டுமே நுழையும் நிலையே தொடருமே?

அப்படி இருக்க இத்தகைய ஒரு முடிவினை, அதாவது "தந்தை பெரியார் திராவிடர் கழகம்" முன் எடுக்கும் போராட்டத்தினை எதிர்க்கும் முடிவினை, எடுப்பதன் மூலம் தமிழர்களுக்கு யாது ஒரு நன்மையும் கிட்டாது, இது "அவனும் போராடக் கூடாது...நானும் போராட மாட்டேன்" என்றுக் கூறி தமிழர்களுக்கு கோவில்களுள் அவர்களின் உரிமையை மறைமுகமாக மறுக்கும் ஒரு சதியாகத் தான் காண முடிகின்றது.

மாறாக இதில் தமிழர்களுக்கு இம்மி அளவும் நன்மை இருப்பதாகத் தெரியவில்லை.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு