சரி இப்பொழுது நாம் முருகனை ஏன் தமிழ் கடவுளாக தமிழர்கள் மட்டும் சிறப்பாக கொண்டாடுகின்றனர் என்று அந்த ஆய்வாளர்கள் கூறும் காரணத்தினைக் கண்டு விடலாம். அதற்கு நமது புராணக் கதையினுள் ஒன்றினைக் நாம் காண வேண்டி இருக்கின்றது.

'கந்தன் கருணை' படம் கண்டு இருக்கின்றீர்களா?

அப்படத்தினில் பிரமனுக்கு படைப்புப் பொருள் மறந்து விட்டதால் அவரை முருகன் சிறைப்பிடிப்பது போலவும் பின்னர் படைப்புப் பொருளினை சிவனுக்கு உபதேசிப்பது போலவும் ஒரு காட்சி இருக்கும். அனைவரும் கண்டு இருப்போம் என்றே நம்புகின்றேன். அந்த காட்சியினைத் தொடர்ந்தே அருமையான பாடலான 'சொல்ல சொல்ல இனிக்குதடா' என்றப் பாடலும் வரும். சரி இருக்கட்டும். இப்பொழுது நாம் காண வேண்டியது பிரமனை முருகன் சிறைப் பிடிக்கும் விடயத்தைத் தான். அதற்கு முன்னர் நாம் சில விடயங்களை அறிந்துக் கொள்வது நல்லது.


ஒன்று, ஆரம்பக் காலங்களில் இந்தியாவில் வடக்கு தெற்கு என்ற பாகுபாடுகள் இருந்தது கிடையாது. இந்தியா முழுமையுமே தமிழ் பேசும் மக்களே நிறைந்து இருந்தனர். இதனை நாம் நம்முடைய முந்தையப் பதிவுகளில் கண்டு இருக்கின்றோம் மேலும் அம்பேத்கர் போன்ற அறிஞர்களும் இக்கூற்றினைக் கூறி இருக்கின்றனர். ஆனால் காலங்கள் நகர நகர இந்தியா பல அரசியல் மாற்றங்களுக்கு உட்பட்டது, உட்பட்டு வட பகுதி முழுமையாக அந்நியர்களின் வசம் கி.பி ஏழாம் நூற்றாண்டு முதல் சென்று விட்டது. இதனை நாம் இந்தப் பதிவுகள் மூலம் கண்டு இருக்கின்றோம் (ஆரியர்கள் யார்).

எனவே அக்காலம் தோன்றி இந்தியாவில் பல மாற்றங்களும் சரி போராட்டங்களும் சரி சூழ்ச்சிகளும் சரி நிலவிக் கொண்டே தான் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் சமயங்கள் வடக்கே இருந்து தெற்கே வந்தவை என்றக் கருத்துக்கள். அதன் விளைவே இன்று சைவ சமயமும் வைணவ சமயமும் எங்கே தோன்றின என்றால் நம்மில் பெரும்பாலானோர் அவை வடக்கே தோன்றியவை என்ற எண்ணத்தினையே கொண்டு இருக்கின்றோம்.

தெற்கே இருந்து வடக்கே போன சமயங்களை சிலர் கைப்பற்றிக் கொண்டு அதன் அர்த்தங்களை அவர்களுக்கு ஏதாக மாற்றிக் கொண்டு கதை புனைய ஆரம்பிக்க அன்றைய அரசியல் சூழ்நிலைகள் காரணமாக சமயங்களும் அவற்றின் மெய்யான அர்த்தங்களை துறந்து போலி அர்த்தங்களை சுமக்க ஆரம்பிக்கின்றன. இதன் தாக்கத்தினை நாம் காவடி எடுக்கும் கதையிலையே காணலாம்.

அந்தக் கதைப்படி இடும்பன் வடக்கில் இருந்து இரு மலைகளை தெற்கே கொண்டு வருகின்றானாம்.

ஏன் வடக்கில் இருந்து மலைகள் வர வேண்டும்? தெற்கிலே மலைகளே இல்லையா? அவை சிறப்பானவை இல்லையா? அனைத்து ஆழ்வார்களும் நாயன்மார்களும் உதித்த தெற்கிலே இல்லாத சிறப்பு வடக்கில் இருக்கின்றதா? இவ்வாறு கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் வடக்கு சிறப்பாக கூறப்பட்டு இருக்கின்றது. நிற்க.


இவ்வாறு ஒரு காலத்தில் சைவ சமயமும் சரி வைணவ சமயமும் சரி அரசியல் காரணங்களாக மாறுகின்றன. வைணவமாவது பரவா இல்லை, சைவம் முற்றிலுமாக அந்த அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகின்றது (இதனைப் பற்றி நாம் பின்னர் பார்க்கலாம்). ஆனால் இந்த சமயங்களை உருவாக்கியோர் அத்தகைய தவறான மாற்றங்களை கண்டு கொண்டு சும்மா இருப்பரா என்ன? சமயங்களை நல் வழிப் படுத்த அவர்களும் முயலத் தான் செய்கின்றனர்.

அந்நியர்களின் சூழ்ச்சியினை எதிர்த்து அவர்கள் போராட இந்திய தேசத்தில் பல காலமாக சமயப் போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருந்து இருக்கின்றன. சரி இப்பொழுது நமது கதைக்கு வருவோம்.


நம்முடைய பதிவுகளின் படி, முருகன் - இறைவனின் மைந்தன். இவர் பிரமனை கைது செய்கின்றார். பிரமன், இவர் யார் என்றுப் பார்த்தால் இவரும் இறைவனின் மைந்தன். படைப்புக் கடவுளாக அறியப்படுபவர். அப்படி இருக்க இறைவனின் பிள்ளையாக அறியப்படுபவர் மற்றொரு பிள்ளையாக அறியப்படுபவரை ஏன் சிறை எடுக்குமாறு புராணம் படைக்கப் பட வேண்டும்? அதுவும் காரணமாக கூறப்படுவது என்னவென்று பார்த்தோம் என்றால் பிரமன் படைப்பின் அர்த்தத்தை மறந்து விட்டதாக கூறப்படுகின்றது. இதைத் தான் நாம் சற்று விரிவாக காண வேண்டி இருக்கின்றது.

எல்லாம் வல்ல ஒரு இறைவன் எவ்வாறு தனது கடமையை மறக்க முடியும்? அவ்வாறு மறப்பவன் எவ்வாறு இறைவனாக இருக்க முடியும்? எனவே இக்கதையினுக்கு வேறு அர்த்தம் இருக்கின்றதா என்று நாம் காண வேண்டி இருக்கின்றது. அவ்வாறு பார்த்தால் பிரமன் மனிதர்களை நான்கு வர்ணமாக படைத்தான் என்ற ஒரு கூற்று நமக்கு கிடைக்கப் பெறுகின்றது. அதன் அடிப்படையில் மனிதர்களும் சிலர் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்றும் சிலர் பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றும் பிரிக்கப்பட்டு இருக்கின்றனர் என்றும் நாம் அறிவோம். ஆனால் பல அறிஞர்களின் கூற்றுப்படி இவை நம்முடைய சமயங்களில் இடைச் செருகல்களாக இணைக்கப்பட்டவை என்றும் ஆரம்ப காலங்களில் இக்கருத்துக்கள் நம்மிடையே இருந்ததில்லை என்றும் நாம் அறியப்பெருகின்றோம். எனவே நம்முடைய வரலாற்றின் இடையில் பிரமனின் வாயிலாக மக்களை பிறப்பால் பிரிக்கும் கருத்துக்கள் பரப்பப்பட்டன என்று நாம் அறிகின்றோம்.

இந்நிலையில் தான் சைவ வைணவ சமயத்தின் உண்மையான அர்த்தங்களுக்காக போராடியோர் பிரமன் மனிதர்களை பிறப்பால் பிரித்தான் என்றக் கருத்தினையும் மக்கள் அனைவரும் பிறப்பால் வேறுப்பட்டவர் என்ற கருத்தினையும் எதிர்க்க சில புராணங்களை எழுதுகின்றனர். அந்நிலையில் தான் நாம் மேலே உள்ள இந்தக் கதையினைக் காண வேண்டி உள்ளது.

பிரமன் தனது படைப்பு கொள்கையினை மறந்து மக்களை பிரிவு படுத்துகின்றான். அதனைக் கண்டு முருகன் அவனை கைது செய்கின்றார். கைது செய்து உலகப் படைப்பின் உண்மையான அர்த்தத்தினை உலகிற்கு உரைக்கின்றார் என்பதனையே நாம் அந்தப் புராணக் கதையின் வாயிலாக அறிந்துக் கொள்ள முடியும் செய்தியுமாக இருக்கின்றது.

அதாவது வட மொழியினை தங்களின் ஆதிக்கத்திற்கு கொண்டு வந்த சிலர் படைப்புக் கொள்கையினை பிரமன் என்ற இறை மைந்தனை வைத்து மாற்ற, அதனை சைவ வைணவ சமயத்தினைப் படைத்த தமிழர்கள் முருகன் என்றத் தமிழ் கடவுளை வைத்து எதிர்க்கின்றனர். வடக்கை தெற்கு எதிர்க்கின்றது. சமசுகிருதத்தினை தமிழ் எதிர்க்கின்றது. இந்நிலை இன்றும் தொடர்வதனை நாம் காணலாம். இதுவும் முருகன் தமிழ் கடவுளாக சிறப்பாக வணங்கப்படுவதற்கு ஒரு காரணியாகும்.


மேலும் பிரமன் பொய் சொல்பவனாகவும், அவனுக்கு என்று தனியே கோவில் எதுவுமே இல்லாதவனாகவும் நம்முடைய சமயங்களில் கூறப்பட்டுள்ளமையும் இங்கே கவனிக்கத்தக்கது.

இதன் வாயிலாக இன்று பலரும் நம்புவது போல சைவ வைணவ சமயங்கள் மனிதர்களில் பிரிவுகளை உருவாக்கவில்லை என்றும் அப்பிரிவுகளை எதிர்த்து அச் சமயங்கள் போரிட்டுக் கொண்டே வந்து இருந்து இருக்கின்றன என்பதனையும் ஆனால் காலத்தில் அவை அரசியல் சூழ்ச்சியினில் சிக்கி வீழ்ந்தன என்பதனையும் நாம் அறிய முடிகின்றது.

இதற்கு சான்றாக சித்தரான சிவ வாக்கியாரின் பாடல் சிலவற்றைக்  கண்டு விடுவோம்...

"பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ?"

அர்த்தம்: பறைச்சி என்பவர் யார்? பணத்தி என்பவர் யார்? அவர்களின் வேறுபாடுகள் என்று நீங்கள் கூறுவது அவர்களின் எலும்பு அல்லது தோல் அல்லது சதையிலோ குறிக்கப்பட்டு உள்ளதோ?


"சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீராலோ
பூத வாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ"


அர்த்தம்: சாதிகள் என்பது ஏதடா... உடம்பில் ஓடும் குருதி ஒன்றாக இருக்கின்றது...பஞ்ச பூதங்களும் ஒன்றாக இருக்கின்றன...இந்நிலையில் சாதி பேதங்கள் மட்டும் எங்கிருந்து மாறுபடுகின்றன?

இவ்வாறு பாடிய சித்தர்கள் அனைவரும் குகை இடிக் கலகம் என்ற ஒன்றின் மூலமாக கொலை செய்யப்பட்டனர் என்பதும் வரலாறு. அதனை நாம் முன்னர் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது நமக்கு முக்கியம் என்னவென்றால் நம்முடைய தேசத்தில் பல போராட்டங்கள் நிகழ்ந்து உள்ளன...பல மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. பல உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன. சில விடயங்களுக்கு தவறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு அதன் அர்த்தங்கள் மாற்றப்பட்டு உள்ளன. அவ்வாறு மாற்றப்பட்டவைகளையும், மறைக்கப்பட்டவைகளையும் மீட்பதற்காக போராட்டங்களும் ஆண்டாண்டுக் காலங்களாக தொடரப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. இவையே நம்முடைய புராணங்களில் இருந்து நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய விடயங்களாகும்.

சரி இப்பொழுது சிலர் வேதங்களில் இருந்து தான் சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்று கூறுகின்றனர். அவர்களின் கூற்றுகள் சரியா என்பதனை காண நாம் வேதங்களைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

காண்போம்...!!!

1 கருத்துகள்:

ஐயா எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன...உஙகள் தொடர்பு எண் தாருங்கள்

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு