இந்துவிற்கு ஒரு கடிதம்- லியோ டால்சுடாய்:

'சுதந்திர இந்தியா'வின் ஆசிரியருக்கு டால்சுடாய் எழுதிய பதில் கடிதம் தொடர்கின்றது. 
                              6                                            
"அடிமைத்தளையில் இருந்துக் கொண்டு தொடர்ந்து சுதந்திரத்திற்காக ஏங்கிக் கொண்டும் அதை தேடிக் கொண்டும் இருக்கும் மனிதனே, நீ அன்பினை மட்டுமே தேடு. அன்பே அமைதி... மேலும் அதுவே உனக்கு முழு மனநிறைவைத் தரும். நிம்மதி மட்டுமே நிறைந்து இருக்கும் ஒரு அரிய உலகத்திற்கு இட்டுச் செல்லும் நுழைவாயிலினை திறக்கும் கருவி நானே!" - கிருசுனர்

ஒருவன் தனது பாலப் பருவத்தில் இருந்து காளைப் பருவத்திற்குள் நுழையும் போதும், காளைப் பருவத்தில் இருந்து தலைவன் பருவத்திற்குள் நுழையும் பொழுதும் அவனைச் சுற்றி என்ன செயல்கள் நிகழுமோ அதேச் செயல்கள் தான் இப்பொழுது மேற்க்கத்திய மக்களுக்கும் கிழக்கத்திய மக்களுக்கும் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. அந்த பருவ மாற்றக் காலத்தில் ஒருவன் தன் வாழ்வினை அதுவரை வழிநடத்தி வந்த கட்டுப்பாடுகளை இழந்துவிட்டு ,அவனின் காலத்திற்கு ஏற்ப புதிய கட்டுப்பாடுகளை அறிந்துக் கொள்ள இயலாது நிற்கின்றான். அந்த நிலையில் போகும் திசைகள் அறியாமலேயே  அவன் வாழ ஆரம்பிக்கின்றான். இலக்கினை அறியாமல் பயணிப்பதால் தோன்றும் கவலைகளில் இருந்தும் அர்த்தமில்லாத அவன் வாழ்க்கையினில் இருந்தும் தனது கவனத்தை திருப்புவதற்கு அவன் பல்வேறு தொழில்களையும், கவனச் சிதறல்களையும் முட்டாள்தனங்களையும் உருவாக்கிக் கொள்கின்றான். அத்தகைய ஒரு சுழல் நீண்ட நாட்களுக்கு நீடிக்கலாம்.

ஒருவன் வாழ்க்கையின் ஒரு பருவத்திலிருந்து மற்றொரு பருவத்திற்குள் நுழையும் பொழுது அவன் அது வரை கடைப்பிடித்துக் கொண்டு இருந்த அர்த்தமில்லாத செயல்களை தொடர்ந்து செய்ய முடியாத ஒருக் காலமும் வருகின்றது. இது வரை அவனை வழிநடத்திக் கொண்டு வந்த அந்தச் செயல்களை விட உயர்ந்தக் கட்டத்திற்கு அவன் வந்து விட்டான் என்று அவன் புரிந்துக் கொள்ள வேண்டும். உயர்ந்த கட்டம் என்று சொல்வதால் அவன் எந்த ஒரு சரியான வழிமுறையும் இன்றி வாழ வேண்டும் என்று அர்த்தம் இல்லை. மாறாக அவனின் வயதிற்கு ஏற்ப வாழ்க்கையினைப் பற்றி அவன் புரிந்துக் கொண்டு சில வழிமுறைகளை அவனே உருவாக்கிக் கொள்ள வேண்டும்... உருவாக்கிக் கொண்டு அவற்றின் படியே அவன் வழிநடக்க வேண்டும்.

அந்த மனிதனைப் போலவே தான் மனிதக்குலத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஒருக் காலம் வரும். அத்தகைய காலம் இப்பொழுது வந்து விட்டதாகவே நான் நம்புகின்றேன், இப்பொழுது என்றால் இது 1908 ஆம் வருடம் என்பதினால் அல்ல மாறாக மனித வாழ்க்கையின் முரண்பாடுகள் இப்பொழுது ஒரு உச்சக் கட்ட அழுத்த நிலையினை அடைந்து இருக்கும் காரணத்தினாலேயே அவ்வாறு நம்புகின்றேன். ஒருப் பக்கம் அன்பின் விதியினை பற்றிய விழிப்புணர்வு இருக்கின்றது, ஆனால் மறுப்பக்கமோ நூறாண்டுக்காலமாக நடைமுறையில் இருந்து வரும் நிம்மதியில்லாததும், பொருள் ஒன்றும் இல்லாமல் வன்முறையினால் உருவாக்கப்பட்ட ஒருக் குழப்பமான வாழ்க்கை முறை அந்த அன்பின் விதியோடு மாறுப்பட்டுக் கொண்டு நிற்கின்றது.
இந்த முரண்பாட்டினை நாம் எதிர்க் கொள்ளத் தான் வேண்டும். அப்படி எதிர்க்கொள்ளும் பொழுது ஏற்படும் முடிவு நிச்சயம் அந்தப் போலியான வன்முறையின் விதிக்கு சாதகமாக இருக்காது மாறாக பழையக் காலங்களில் இருந்தே மக்களின் மனதினில் அவர்களின் இயல்பாக வீற்று இருக்கும் அன்பின் விதி என்னும் உண்மைக்கே சாதகமாக இருக்கும்.

ஆனால் மக்கள் எப்பொழுது அவர்களை முழுதாக அனைத்து வித அறிவியல் மற்றும் மத மூட நம்பிக்கைகளில் இருந்தும் மற்றத் தவறான விளக்கங்களில் இருந்தும் விடுவித்துக் கொள்கின்றார்களோ அப்பொழுது தான் அந்த மூட நம்பிக்கைகளினால் அது வரை மறைக்கப்பட்டு இருந்த அந்த உண்மையினை அதன் முழு அளவில் அவர்கள் உணர்ந்துக் கொள்ள முடியும்.

முழ்கிக் கொண்டு இருக்கும் ஒருக் கப்பலைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அந்தக் கப்பலில் இருக்கும் எடைக் கூடியப் பொருட்களை அந்தக் கப்பலை விட்டு நீக்க வேண்டும். ஆனால் அந்தப் பொருட்கள் நமக்கு ஒரு காலத்தில் பயன் அளித்தன என்று பார்த்தோம் என்றால் அந்தப் பொருட்களே கப்பலினை மூழ்கடித்து விடும். அதைப் போன்று தான் மனிதக் குலத்தின் மேம்பாட்டுக்கான உண்மையினை மறைத்துக் கொண்டு இருக்கும் அறிவியல் மூட நம்பிக்கைகளும். 

மக்கள் உண்மையினை அவர்களின் மேலான விதியாக உணர்ந்து அரவணைத்துக் கொள்ள வேண்டுமே அன்றி, சிறு வயதில் அவர்கள் உண்மையினை அறிந்து இருந்த குழப்பமான நிலையிலோ அல்லது ஒருப் பக்கமாகவோ அல்லது அவர்களின் மத மற்றும் அறிவியல் ஆசிரியர்களால் தவறாகப் போற்றுவிக்கப் பட்டவாரோ அல்ல. எல்லாவிதமான மூட நம்பிக்கைகளில் இருந்தும், அது போலி மதமாகட்டும் அல்லது போலி அறிவியலாகட்டும், உண்மை முழுமையாக விடுதலைப் பெற வேண்டியது நிச்சயம் இன்றியமையாத ஒரு தேவையாகும். அத்தகைய விடுதலை முயற்சி பகுதிகளாகவோ அல்லது காலத்தால் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகளுக்கோ அல்லது மக்களின் பழக்க வழக்கங்களுக்கு இணங்கியோ இருக்கக் கூடாது. மத உலகினில் சீக்கியர் என்னும் பிரிவினை உருவாக்கிய குரு நானக்கின் தாக்கத்தைப் போலவோ அல்லது கிருத்துவ உலகினில் லூத்தரினைப் (Luther) போலவோ அல்லது மற்ற மதங்களில் இருக்கும் மற்ற சீர்திருத்தக்காரர்களைப் போலவோ அந்த முயற்சி இருக்க கூடாது. அந்த முயற்சியானது, பழைய மதம் மற்றும் புதிய அறிவியல் சார்ந்த அனைத்து மூட நம்பிக்கைகளில் இருந்தும் ஆன்மீகத் தெளிவினை அதன் உண்மை வடிவினிலேயே தூயதாக பிரித்து எடுப்பதை தனது அடிப்படைக் கொள்கையாக கொண்டு இருக்க வேண்டும்.

எப்பொழுது மக்கள், ஆர்முசுடுக்கள் (Ormuzds), பிரம்மாக்கள் மற்றும் சபாவ்துகளிலும் (Sabbaoth) இருந்தும், அவர்கள் தான் கிருசுனர் மற்றும் கிருத்துவின் மறுபிறவி என்ற நம்பிக்கைகளிலும் இருந்தும்... சொர்க்கம் மற்றும் நரகத்தில் இருக்கும் நம்பிக்கையில் இருந்தும்... மறுபிறவிகள் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகிய நம்பிக்கைகளில் இருந்தும்... உலகில் நிகழும் வெளிநிகழ்வுகளில் இறைவன் குறுக்கிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தும்... அனைத்திற்கும் மேலாக வேதங்கள், விவிலியம், சுவிசேசங்கள்(Gospels), திருபிடங்கள் (Tripitakas) , குரான் மற்றும் இவற்றைப் போன்ற மற்ற நூல்களின் இறவாத் தன்மையின் மீது இருக்கும் நம்பிக்கையில் இருந்தும்... அதேப் போன்று  எண்ணிலடங்காத உலகங்களில் இருக்கும் கணக்கில்லாத சிறிய அணுக்களைப் பற்றியும் அவற்றின் தோற்றம் மற்றும் செயல்பாடுகளைப் பற்றிய அறிவியல் கூற்றுகளின் மீது இருக்கும் குருட்டு நம்பிக்கையில் இருந்தும்... இப்பொழுது மனிதகுலம் ஏற்று இருக்கும் அந்த  அறிவியல் விதிகளின் இறவாத் தன்மையில் இருக்கும் நம்பிக்கையில் இருந்தும்... வரலாறு மற்றும் பொருளாதார விதிகள் மற்றும் போராட்டம் இருந்தால் மட்டுமே பிழைத்து இருக்க முடியும் என்ற நம்பிக்கைகளில் இருந்தும்...மனதின் அடித்தளத்திலும் நினைவுகளிலும் சேர்த்து வைத்து இருக்கும் 'அறிவியல்' எனப்படும் அனைத்து பயனில்லா செயல்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் எப்பொழுது  தங்களைத் தாமே விடுவித்துக் கொள்ளுகின்றனரோ... அப்பொழுது தான்  மனிதனுள் இயல்பாகவே இருந்துக் கொண்டு அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தரக் கூடிய மிகவும் எளிய அன்பின் விதியானது அவர்களுக்கு மிகவும் தெளிவாக புலப்பட ஆரம்பிக்கும்.

தொடரும்...   

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு