இந்துவிற்கு ஒரு கடிதம்- லியோ டால்சுடாய்:

'சுதந்திர இந்தியா'வின் ஆசிரியருக்கு டால்சுடாய் எழுதிய பதில் கடிதம் தொடர்கின்றது.

                             4                                                
குழந்தைகளே, உங்கள் இதயம் எதன்படி வழிநடத்தப்பட வேண்டும் என்று அறிந்துக் கொள்ள வேண்டுமா? அர்த்தம் ஒன்றும் இல்லாத உலகப் பொருட்களின் மேல் நீங்கள் கொண்டு இருக்கும் நாட்டத்தினை தூக்கி எறியுங்கள். மகிழ்ச்சியினையும் அறிவினையும் பற்றி நீங்கள் கொண்டுள்ள தவறான எண்ணங்களையும் உங்களது வெற்று ஆசைகளையும் களையுங்கள். இவை அனைத்தையும்  நீங்கள் நீக்கினால் உண்மையான அன்பினை நீங்கள் அறிவீர்கள் - கிருசுனர்.


உங்களை நீங்களே அழிப்பவர்களாக இராதீர்கள். உங்களது மெய்யான தன்மையினை உயர்ந்து அடையுங்கள். அதன் பின் நீங்கள் பயம் கொள்வதற்கு இவ்வுலகில் ஒன்றும் இராது. - கிருசுனர்

பழைய கொள்கைகள் என்று ஒழிக்கப்பட்ட அந்தப் போலி ஆன்மீக கருத்துக்களின் இடத்தில இப்பொழுது புதுக் கருத்துக்கள் தோன்ற ஆரம்பித்தன. இந்தப் புதுக் கருத்துக்களும் பழைய கருத்துக்களைப் போல் அரைகுறையாகத் தான் இருந்தன. ஆனால் இந்தக் கருத்துக்கள் புதியனவாக இருந்ததினால் அநேக மக்களால் அதன் குறையினை உடனடியாக அறிந்துக் கொள்ள முடியவில்லை. மேலும் இந்தப் புதிய போலிக் கருத்துக்களை அதிகாரத்தில் உள்ளோர் மிகவும் திறமையாக பிரசாரம் செய்யவே,மக்களின் மத்தியில் இந்தக் கருத்துக்கள் மறுக்கப்பட முடியாத கருத்துக்களாய் தோன்ற ஆரம்பித்தன. தாங்கள் ஒடுக்கப்படுவதையும் துயரப்படுவதையும் இந்தக் கருத்துக்கள் சரி என்று நியாயப்படுத்தினாலும் அந்தக் கருத்துக்களைப் பல மக்களுக்கு மறுக்க தோன்றவில்லை. இந்த புதுக் கருத்துக்கள் அறிவியல் என அழைக்கப்பட்டன. ஆனால் முன்பு மதம் என்று எதைப் புரிந்துக்கொண்டோமோ அதையேத் தான் இன்று அறிவியல் என்றுப் புரிந்துக் கொள்கின்றோம். முன்பு எப்படி மதம் என்றுக் கூறப்பட்டதை அது மதம் தொடர்புடையது என்பதனாலையே கேள்விக் கேட்கக்கூடாது என்று இருந்ததோ, அதே போல் இன்று அறிவியல் என்று சொல்லப்படுவதையும் எவரும் கேள்விக் கேட்கக்கூடாது. 'அரசன் - இறைவனின் பிரதிநிதி' என்றுக் கூறிக் கொண்டு வன்முறையை ஆதரித்து அழிந்துப் போன மதக் கருத்துக்களின் இடத்தை இந்த அறிவியல் கருத்துக்கள் நிரப்ப ஆரம்பித்தன.

அறிவியலின் கூற்றுப்படி, முதலில், மனிதனை மனிதன் ஒடுக்குவதும் கொடுமைப்படுத்துவதும் எல்லாக் காலங்களிலும் நடந்து வந்து இருப்பதினால் அத்தகைய ஒடுக்குமுறை தொடர்ந்து இருந்துக் கொண்டே தான் இருக்க வேண்டும். மனிதன் தன்னுடைய அறிவின் படியும் மனசாட்சியின் படியும் நடக்காது, இது வரைக் காலங்களில் அவன் எவ்வாறு வாழ்ந்து வந்தானோ அதே போல் தான் வாழ வேண்டும் என்ற இந்தக் கூற்றே 'அறிவியல்' கூறும் 'வரலாற்று விதி'.

அறிவியல் கூறும் இரண்டாவது கருத்து என்னவென்றால் ' விலங்குகளுக்குள்ளும் செடிகளுக்குள்ளும் உயிர் வாழ்வதற்கு எப்பொழுதும் ஒரு போராட்டம் நடந்து இறுதியில் எவை வலுவுடையதாக இருக்கின்றதோ அவையே பிழைப்பதைப் போல மனிதர்களுக்குள்ளும் அத்தகைய போராட்டங்கள் பிழைப்பதற்கு நிகழ வேண்டும். பிழைப்பிற்காக போராடும் அந்த மற்ற உயிரினங்களிடம் இல்லாத அறிவினையும் அன்பினையும் பெற்று மனிதன் உயர்ந்தவனாக இருந்தாலும் அவன் பிழைப்பதற்கு அவற்றினைப் போலவே போராட வேண்டும்.

அறிவியலின் மூன்றாவது கருத்தும் மிக முக்கியமானக் கருத்தும், எதிர்ப்பாராவிதமாக மக்களிடையே மிகவும் பெரிய அளவில் பரவியக் கருத்துமானது, சிறிது மாறுப்படுத்தப்பட்ட பழையக் காலத்து போலி மதக் கருத்தே ஆகும். பொது வாழ்வில் பெருன்பான்மையினரைக் காக்க ஒரு சிலரை ஒடுக்குவது தவிர்க்க முடியாத ஒன்றாகும் என்பதே அந்தக் கருத்து.

மனித உறவுகள் அன்பினை மட்டுமே சார்ந்து இருக்க விரும்பினாலும், இந்தக் கருத்து வன்முறையை தவிர்க்க முடியாத ஒன்றாக்கி விடுகின்றது.

இந்தப் புதிய போலி அறிவியல் கருத்திற்கும் அந்தப் பழைய போலி மதக் கருத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். "யாருக்கு எதிராய் வன்முறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய ஏன் ஒரு சிலருக்கு மட்டுமே உரிமை இருக்கின்றது, பிறருக்கு ஏன் அந்த உரிமை இல்லை?" என்ற கேள்விக்கு போலி மதக் கருத்தானது முடிவெடுக்கும் உரிமை அரசருக்கு உள்ளது ஏனெனில் அவர் இறைவனின் பிரதிநிதி என்று கூறியது. ஆனால் போலி அறிவியல் கருத்தோ அந்த முடிவுகள் மக்களின் எண்ணங்களுக்கு அரசாங்கம் என்ற அமைப்பின் தலைமையில் இருக்கும் ஒரு சிலரின் முடிவுகளாலும் செயல்களாலும் வடிவம் கொடுக்கப்பட்டு, அந்த மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப எடுக்கப் படுகின்றன என்று கூறுகின்றது. இந்தக் கூற்று மட்டுமே அந்தப் பழைய போலி மதக் கருத்திற்கும், இந்தப் புதியப் போலி அறிவியல் கருத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆகும்.

இதுவே அடக்குமுறைக் கொள்கைக்கு அறிவியல் கொடுக்கும் விளக்கமாகும். இந்தக் கருத்துகள் பலவீனமாகவும் வாழ்க்கைக்கு முற்றிலும் ஒவ்வாததாக இருந்த போதிலும், அதிகாரத்தில் இருந்தவர்கள் அவர்கள் பதவியில் தொடர்ந்து வீற்று இருக்க அந்தக் கருத்துக்கள் மிகவும் தேவையாக இருந்ததினால் கண்மூடித் தனமாக அந்தக் கருத்துகளை நம்பியும் அவற்றை நம்பிக்கையுடன் பரப்பியும் வந்தனர்.

எதிர்பாராவிதமாக, இந்தப் போலி அறிவியல் கருத்துகள் பரப்பப்பட்ட ஆடம்பர விதத்தில் மயங்கிய பெரும்பான்மையான மக்கள், எவ்வாறு முன்பு போலி மதக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டார்களோ அதே போல் இப்பொழுது இந்த அறிவியல் முட்டாள்தனங்களை புனித உண்மை என்று ஏற்றுக் கொண்டனர்.   

அந்த பாவப்பட்ட பெரும்பான்மையினரே தொடர்ந்து, கல்நெஞ்சமும் எண்ணிக்கையில் முன்பை விட அதிகமாக இருக்கும் அதிகார வர்க்கத்தினருக்கு கட்டுப்பட்டு இருக்கின்றனர்.

தொடரும்....

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு