"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
  பகவன் முதற்றே உலகு"

உலகப்பொதுமறை என வள்ளுவப் பெருந்தகையனார் அமிழ்தினும் இனிதான தமிழ் மொழியினில் அருளிச் சென்ற 1330 குறள்களுள் முதற்குறள்.

எவ்வாறு உலக எழுத்துக்களுக்கெல்லாம் 'அ'கரம் முதலாவதாக இருக்கின்றதோ அதேப் போல் இந்த உலகத்திற்கு இறைவன் முதல்வனாக இருக்கின்றான் என்ற மாபெரும் கருத்தை எளிமையாக எடுத்துக் கூறிக் கொண்டு இருக்கின்றது.

சரி...!!! ஆனால் உண்மையிலேயே உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் அகரமே முதல் எழுத்தாக உள்ளதா என்ற கேள்வி என்னுள் ஒருநாள் எழுந்தது. அதற்குரிய விடையினை அறிந்துக் கொள்ளப் பல மொழிகளின் எழுத்துக்களைப் பற்றித் தேடிய பொழுது அந்தக் கருத்து உண்மைதான் என அறிந்துக் கொண்டேன்.

ஆம்!!! தற்போது உலகத்தில் அதிகமாக பேசப்படும் மொழிகளான ஆங்கிலம், மண்டாரின் (Mandarin) பிரன்ச்சு (French) ரசிய மொழி, செர்மன், சுபாநிசு (spanish) ஆகிய மொழிகளிலும் இந்த மொழிகளுக்கு எல்லாம் மூலமான இலத்தின் (Latin) மற்றும் கிரேக்க மொழிகளிலும் கூட அகரம் ('A') என்னும் எழுத்தே முதல் எழுத்தாக உள்ளது.

உலகின் மற்றப் பகுதிகளில் பேசப்படும் மொழிகளுக்கே அகரம் முதல் எழுத்தாக இருக்கும் பொழுது, இந்திய நாட்டு மொழிகளுக்கு மட்டும் அது வேறு படவா போகின்றது. இந்திய நாட்டு மொழிகள் அனைத்திற்கும் அகரமே முதல் எழுத்தாக திகழ்கின்றது.

எனவே 'அகர முதல எழுத்தெல்லாம்' என்பது சரி தான். இப்பொழுது அந்த அகரத்தை தமிழ் மொழி எவ்வாறு சிறப்பிக்கின்றது என்பதினைப் பார்ப்போம்.

ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இன்றியமையாத உறவுகள் தமிழில் அகரத்தை முதன்மையாக வைத்தே அழைக்கப் பெறுகின்றன.

அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், அத்தை, அம்மாயி, அம்மான் முதலிய பல உறவுகள் அகரத்தால் தொடங்கப்பெறும் வார்தைகளினாலையே அழைக்கப் பெறுகின்றன.

மேலும், ஒரு மனிதன் இந்த உலகினில் வாழும் பொழுது அவன் கடைப்பிடிக்க கூடிய தன்மைகள் மற்றும் அவனைச் சூழ்ந்து இருக்கும் முக்கியமான பொருட்கள் ஆகியவனவும் அகரத்தை முதன்மையாகக் கொண்டே அழைக்கப்பட்டன.

அண்டம், அன்பு, அடக்கம், அமைதி, அன்னம், அறிவு, அழகு, அரசு போன்ற வார்த்தைகளைக் கண்டாலே நாம் அதை உணர்ந்துக் கொள்ள முடியும்.

உலகில் உள்ள வேறு எந்த மொழியாவது தன்னுடைய முதல் எழுத்தை இவ்வளவு சிறப்பித்து இருக்குமா என்பது சந்தேகமே!!!

உலகில் மனிதன் தோன்றுவதற்கு அம்மா அப்பா எவ்வாறு முக்கியமோ, அதேப் போல் அகரமும் தமிழுக்கு முக்கியம்.

எனவே தான் குழந்தைகளுக்கு 'அ' என்றால் 'அம்மா' என்றே நமது தமிழ் மொழி கற்பிக்கின்றது. 

இவ்வாறு வாழ்க்கைக்கு இன்றியமையாத விசயங்களை ஒரு மொழியின் முதல் எழுத்தின் மூலமே பெயரிட்டு வழங்குவதும் ஒரு வகை அறிவியலே ஆகும்.

தொடர்ந்து பயணிப்போம்....

(நன்றி: அகரத்தினைப் பற்றிய இந்தக் கருத்துக்களை நான் அறிந்துக் கொள்ள உதவிய 'வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்' என்னும் நூலின் ஆசிரியர் மாத்தளை சோமுவிற்கு எனது நன்றிகள்).

4 கருத்துகள்:

மொழிப்பற்றுடைய பதிவு..
தொடர்ந்து எழுதுங்கள்....

மகிழ்ச்சி..... தமிழர் மட்டுமே மொழியின் மீது உள்ள பற்றினால் தமிழ் பெயர் சூடி மகிழ்கிறோம்........

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி தோழர் சௌந்தர் அவர்களே!!!

ஆம் தோழர் அந்தோனி செல்வம் அவர்களே... தமிழர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு செய்வதாக தெரியவில்லை... இதுவே தமிழை நாம் எந்த அளவு நேசிக்கின்றோம் என்பதற்கு ஒரு சான்று. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி தோழரே!!!

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு